பக்கம் எண் :

20

Kachchik Kalambagam

திருமால் செய்கையால் யானை ஒன்றுதான் வீடுபேறு அடைந்தது.  சிவனார் செயலால் அப்பர் பிழைத்து வந்து பல அற்புதங்களும் பல ஆயிரம் பாசுரங்களும் அருளினபடியால் உலகில் உள்ள யாவரும் அருள்நலம் பெற்றனர்.

ஆகவே திருமாலின் செயல் சிவபிரான் செயலுக்கு ஒப்பாகாது என்பது தெளிவாகும்.

(2) கைகைக்கு - சிற்றன்னையாகிய கைகேயியின் பொருட்டு கான் நடந்த - காலால் காட்டிற்குச் சென்ற, காகுத்தன் - இராமனது, பொறையினும் - பொறுமையினும், நீ வைகைக்கு - வைகைக் கரையில், (வந்தியின் பொருட்டு) மண்சுமந்த. -, வண்மை - வள்ளல் தன்மை. மிகப் பெரிது அன்றோ -.  தந்தை சொன்னதாகச் சிறிய தாய் கைகேயி சொன்ன சொற்படி காட்டிற்குச் சென்றது நன்மகனாவான் தந்தைசொல் போற்ற வேண்டின கடமை.  மனைவியும் தம்பியும் உடன் சென்றனர்.  இராமன் பொறை, நெஞ்சு பொறுத்தல் ஒன்றே. இராமன் முகம் அன்று அலர்ந்த தாமரையை வென்றது.  ஆகவே, பட்ட துன்பம் சிறிதே; பயனும் பெரிதன்று தன்மை, தன் தம்பியாகிய பரதனுக்குக் கொடுத்தமை வள்ளல் தன்மை எனவே படாது; வள்ளல் தன்மையாயினும் அது சிறிதேயாம்.  திக்கற்றவளாகிய வந்தியின் பொருட்டுக் கூலியாளாகச் சென்று மண் சுமந்து அரசன் ஓச்சிய பிரம்படியும் பெற்று, அடைந்த துன்பம் மிகப் பெரிது.  பயன் - வள்ளல் தன்மை: மணிவாசகர் திருவாசகம் அருளிச்செய்ய ஈடுபடுத்தியமை.  வைகை - வைகைக் கரை; விடாத ஆகு பெயர்.  தொடர்பில்லாத மணிவாசகர் பொருட்டு வைகையாற்றினைப் பெருக்கெடுக்கச் செய்து, அவருடன் திக்கற்றவளாகி யாதொரு தொடர்புமில்லாத வந்தியையும் ஆட்கொள்ள பெருந்துன்ப மெல்லாம் ஏற்று அவற்றுள் மணிவாசகரால் உலகமெல்லாம் உய்யுமாறு திருவாசகத்தினை அருளிச்செய்ததே வள்ளல் தன்மையாம்.  எனவே, காகுத்தன் வண்மையினும் இறைவன் வண்மை, மிகப் பெரிது என்றார்.

அ.இராமன் காலால் நடந்து செல்லுதல் அவ்வளவு துன்பந் தருவதொன்றன்று.  மக்களுக்கு நடந்து செல்லுதல் இயல்பான செயலே.  சிவபெருமான் காலால் நடந்து செல்லுதல் மட்டுமன்றித் தலையில் மண்சுமந்து பணிசெய்தது துன்பந் தருவதொன்று.  எனவே காகுத்தன் பொறையினும் சிவபெருமான் பொறை, மிக்கது என்க.

ஆ.இராமன் காட்டிற்குக் காலால் நடந்து சென்றதால் குகப் பெருமாள் முதலியவருடைய தோழமை பெற்றும் மனைவியைப் பிரிய நேர்ந்ததால் அத்துன்பத்தை ஒழிக்க அகத்தியனார் சிவகீதை உபதேசித்தும் பெருமுயற்சியால் மனைவியை மீட்டும், விளைந்த பயன் ஒன்று மிலதாய் முடிந்தது.

வந்தியின் ஆள் பிரம்படி பெற்றது, தனக்கு ஊறு நேராது அரசன் முதலிய யாவர்க்கும் ஊறு நேர்வித்தது; தான் இறைவனாந் தன்மை விளக்கியதோடு மணி மொழியாரது உள்ளத்தின் அருள் வாய்ந்த நிலையையும் புலப்படுத்தியதாம்.

(3)கம்பத்தன் - பத்துத்தலைகளையுடைய இராவணன், (கம் - தலை) உயிர் மாய - அழிய, கடும் சமர் - கொடிய போர் நிகழ்த்திய, கைவலி என் - கையின் வலிமை என்ன சிறப்புடையது? கம்பத்தன் - ஏகம்பம் உடையானது, சிலை எடுக்க - (கயிலை) மலையை எடுக்க, தலை நெரித்த - தலையை நெரித்த, கால் வலிக்கு முன் - காலினது வல்லமையை நோக்க.