சிவபிரான் காலின் விரலை ஊன்றிய வல்லமையினாலேயே
கைலாய மலையைத் தூக்க முயன்ற இராவணன் தலைகள் நசுக்குண்டன. இராமன் நால்வகைப் படையுடனும்
இலக்குமணன், அநுமான், சுக்கிரீவன், விபீடணன் முதலியோர் உதவியுடனும் இராவணனிடம்
சென்று போர்புரிந்த கைவல்லமை எவ்வளவினது? எனவே, சிவபெருமான் கால் வலிமைக்குமுன்
இராமன் கைவலிமை, பெரிதன்று என்க.
சிவப்பிரகாசசுவாமிகள்: வெங்கைக் கலம்பகம் 6. மேதகைய
வில்லிறைவன் வில்லிளவல் வல்வீரர், காதனிக மற்றுங்கால் தெவையும் - பாதத், தொருவிரலாம்
வெங்கையா னொன்றாவையாசைப், பருவரலாற் காணப் படும்.
கம்பத்தன் என்பது ஏகம்பத்தன் என்பதன் முதற்குறை கம்+பத்தன்
எனப் பிரித்து கங்கை நீரைச் சடையில் கட்டினவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
கம்பு அத்தன் எனப் பிரித்து இதே பொருள் கொள்ளுதலும் ஆம். கம்பு கட்டி என்ற வழக்கில்
கம்பு - நீர் என்று வழங்குதல் காண்க.
(4) கொம்பனையார் - பூங்கொம்புபோன்ற அகலிகை. கம்பர்
கூறியபடி அவள் வடிவம் கல்லாயிருந்தது. இராமனது காலின் துகள் அவ்வடிவத்தின் மீது பட்டவுடன்
அந்தக்கல் வடிவம் பழைய அகலிகை யாயிற்று.
திருமயிலையில் பூம்பாவையின் எலும்பு மட்டும் ஒரு குடத்தில்
இட்டு வைத்ததைத் திருமதிற்புறத்திற் கொண்டுவந்து சேர்த்தவுடன் சம்பந்தர் தேவாரம்
பாடினார்.
அ. பூம்பாவை வடிவம் சிதைந்த எலும்பினின்று வெளிவந்தது.
இராமன் காலிலுள்ள மண்பட்டு அகலிகை எழுந்தாள். இராமன் கால் தூசு பட்டால் சாபம்
நீங்கி எழுவாள் என்ற கௌதம கழுவாய் அறிவித்தபடி இந்தக்கல் அகலிகையாயிற்று. இராமன்
கால் தூசுபட்ட கருங்கற்பாறைகளெல்லாம் பாறைகளாகவே இருந்தன.
ஆ. வான்மீகத்தின்படி அகலிகை, கௌதமர்தம் சாபப்படிச்
சாம்பலில் புரண்டு கொண்டிருந்தாள் என்று விளங்குவதால் அகலிகை இராமன் கால்களின்
துகளால் உயிர் பெற்றெழுந்தாள் என்பதே உண்மையாயிற்று.
சம்பந்தர் பாடல் கட்டளையிட்ட அளவிலேயே பூம்பாவை
எழுந்தாள். கற்புநிலை கெட்டவளை எழுப்பியது பிறர் பேசுவதற்கு இடம் தரும். சம்பந்தர்
தூய்மை வாய்ந்த பெண்ணைத் தகப்பன்வேண்டுகோட்கு இணங்கி எழுப்பியது வியப்பு. தமிழ் மொழி திருஅருள்
வலம் நிரம்பிய மொழி என்பதும் விளங்கும்.
கொம்பனையாள் - பூங்கொம்பை ஒத்தவளாகிய அகலிகை,
கல் உரு விட்டு - கல் உருவினின்றும் நீங்கி, இன் உருவம் கொண்டதினும் - இனிய பழைய
வடிவம் பெற்றதைப் பார்க்கிலும், சம்பந்தன் -; என் பை - பூம்பாவையின் எலும்பை,
பெண் ஆக்கியது -, சால்பு - சிறப்பு, உடைத்து - உடையது. |