பக்கம் எண் :

22

Kachchik Kalambagam

(5) அம்பு ஒன்றால் - ஒர் அம்பாகிய துணையைக்கொண்டு, புணரி நீரை - (சேது பந்தனம் செய்த காலத்தில்) கடல் நீரை, சுவறச் செய் - வற்றச் செய்த, ஆற்றலினும் - வல்லமையைக் காட்டியும், நம்பு ஒன்றா - நம்புதல் பொருந்தாத - பகைகொண்ட -, புரம் ஒன்றை - திரிபுரத்தை, நகைத்து - ஒரு பொருளின் துணை இன்றி வெறும் சிரித்தலினாலேயே, அழித்தல் -, மேன்மையது.

சேதுவைப் பந்தனப் படுத்த வருணன் இடங்கொடாமையால் இராமன் கடலின்மீது கோபத்தோடு ஓர் அம்பு எறிந்தான்.  ஓர் அம்பு எறிதலின்றி, கோபமின்றி நகைத்த அளவிலே முப்புரம் அழிந்தது சிறப்பு.

முப்புரத்திலிருந்தவர்களது நம்புதல் பொருந்தாமையைப் புரத்தின் மேலேற்றிக் கூறினது இலக்கணை.

“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
 ஓரம்பே கண்டன முந்தீபற
 ஒன்றும் பெருமிகை யுந்தீபற”

என்பது திருவாசகம்.

ஓர் அம்பு - சிவபெருமான் கையில் கொண்ட திருமாலின் உருவமாகிய அம்பு.  அஃது எய்யப்படாது சிவபெருமான் கையில் மிகையாயிற்று.

(6)   எழு விடையை - ஏழு எருதுகளை, (கண்ணன்), தழுவி - இறுகத் தழுவி, மணம் எய்தும் ஒரு செயலினும் -, சீர் - சிறப்பு வாய்ந்த, மொழி அரையன் - நாவுக்கு அரசர், அமணர் - சமணர், (தம்மீது ஏவிய,) கரி - யானையினது, முனிவு - கோபத்தை, ஒழித்தது அற்புதம் -

எருதுகளிடம் பலகால் பழகியவனாய், எருது அடக்குவது மக்களுள் உடல் வல்லமையுள்ளவரும் செய்வர். கடவுள் அவதாரம் என்று பாராட்டப் பெறுவோர் எருது அடக்கினது பெரிதோ.

நாவுக்கரசரைக் கொல்லும்படி அனுப்பிய யானை கடுஞ்சினத்துடன் அவருக்கு முன்பு வந்தும் யாதொரு ஊறும் செய்யாமல் அவரை வலம் வந்து அடிபணிந்து சென்றது வியப்பு.

(7)   பண்டு - முற்காலத்து, இருடி மனைவியர்கள் - தாருகவனத்து மகளிர், பாடு அழிந்த - கற்புநிலை அழிந்த, வனப்பினுக்கு அழகினுக்குமுன், இளம் - இளமை வாய்ந்த, அண்டர் மடவாரை - ஆயர் மகளிரை, அணைந்த -, அபிராமம் - அழகு, என்னோ - எப்படிப்பட்டது?

இடையருடைய இளம் பெண்கள் நாள்தோறும் காணும் பழக்கத்தால் காமுறும்படி அமைந்த கண்ணனுடைய அழகினைக் காட்டிலும் தாருகவனத்து இருடியாரின் மனைவியர், தாம் கற்பினால் மேம்பட்டோர் என்று இறுமாப்புற்றிருந்த மனவல்லமையின் நிலையையும் குலைத்த, சிவபிரான் அழகு சிறந்ததன்றோ என்றார்.

அன்றியும் ஆடை, அணிகலன்களை அணிந்து சென்ற கண்ணனை விடப் பிச்சாடனர் கோலத்துடன் சென்ற சிவனார் நிகழ்த்தியது வியப்பு.

(8)   பற்குனற்கு - அருச்சுனனுக்கு, மாயன் - கண்ணன், சுபத்திரையை - தன் தங்கையாகிய சுபத்திரையை, தந்த வகை - மனைவியாகத்தந்த வகையானது, சற்குணற்கு - நற்குணம் வாய்ந்த சுந்தரமூர்த்திகளுக்கு, பரவை - பரவை நாச்சியாரை, தரு - மணம்செய்வித்த, தண் அளிக்கு - கருணை மேலீட்டிற்கு, நேராமோ - ஒப்பாகுமோ?

பலராமன் சுபத்திரையைத் துரியோதனாதியருள் ஒருவனுக்கு மணஞ் செய்ய விரும்பியிருந்தபோது கண்ணன் அருச்சுனனுக்குத் தானே சுபத்திரையை மணஞ் செய்துகொடுக்கச் சூழ்ச்சியுடையனாக விரும்பிச் செய்த விதத்தைக் காட்டிலும், சிவபிரான் நற்குணம் வாய்ந்த சுந்தரருக்குப் பரவைநாச்சியார் மணத்தோடு அவர் தம் ஊடலையும் தணித்துத் தம் அடியவர் நெஞ்சம் தழைக்கச் செய்தது அரிய செயலாகும்.