பெயர்த்தும்
வந்த ஈரடித்தாழிசைகள் - 8
நறைபூத்த
மலர்க்கொன்றை நளினத்தின் மாண்டதுவே
பிறைபூத்த
செஞ்சடையாய்! பிறங்குபுயம் உற்றபினே. |
1 |
பணியணிந்தாய்
மற்றதைவிற் பற்றியிசைத் தாய்கயிறாத்
திணியவைத்தாய்
மந்தரத்தே நஞ்சுணவும் சிறப்பாமோ. |
2 |
மாலுலகங்
காக்கநர மடங்கலுருக் கொளஅம்மா
லாலுலகுக்
கானதுயர் அகற்றவலார் வேறுளரோ. |
3 |
மகிழிருந்தாய்
மனையென்றோ மாசுண துயின்றானுக்
ககங்கனியச்
சங்காழி ஆண்டகைமுன் அருளியதே. |
4 |
கவுணியருக்
கணிமுத்தங் காதலினீந் தருள்செயலக்
கவுணியருக்
கணிமுத்தங் கனிந்திட்ட பரிசன்றோ. |
5 |
மதிவேணி
மிசைமேவ மலர்விழியு மதியான
விதிசாற்ற
அறியேமுன் மேனியழ கியம்புவதே. |
6 |
முலைக்குறியும்
வளைக்குறியும் கொண்டதற்பின் முதலவனே!
இலைக்குறியும்
குணமுமெனல் எவ்வண்ணம் இயைந்திடுமே. |
7 |
மாவடிக்கீழ்
உற்றாயுன் மலரடிக்கே மங்கலச்சொற்
பாவடுக்க
நாவளிப்பாய் பழமறைசொல் பரமேட்டி! |
8 |
(இ-ள்.)
(1) பிறை பூத்த - பிறை மலர்ச்சி (விளக்கம்) பெற்ற, செஞ்சடையாய் - சிவந்த சடையை
உடையவனே, நறை பூத்த - மணம் நிறைந்த, மலர்க்கொன்றை - கொன்றைமலர், பிறங்கு
புயம் - பருத்து விளங்குகின்ற நினது தோளின்கண், உற்றபின் - அடைந்த பிறகு, நளினத்தின்
- தாமரை மலரின் அழகினைவிட, மாண்டதுவே - சிறந்ததுவே.
பிறைச் சந்திரன் குறைநிலாவாக இருந்தும் அதனை நின்
சடையில் ஏற்றுக் கொண்டதனால் அது வளர்ந்து நிறைநிலா வாகும் சிறப்புப் பெற்றது.
பிறை பெரியோன் சூடப்பெற்றதால் அடைந்த சிறப்புப் பெருந்தேவரும் வணங்கப் பெறுதல்:
“பிறைநுதல் வண்ணமாகின்று: அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும்படுமே”.
புற நானூறு, கடவுள் வாழ்த்து)
‘ |
கார்விரி
கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன்
மிலைந்த கண்ணியன்’ |
(அக நானூறு, கடவுள் வாழ்த்து)
என்றதால்,
சிவபெருமான் ஏனைய மலர்களை அணியாமல் கொன்றை மலரையே அடையாள மாலையாகவும், அழகு
மாலையாகவும், தலை மாலையாகவும் அணிந்துள்ளமை பெறப்படும். பூவினுள் சிறந்தது ‘பொறி
(இலக்குமி) வாழ் பூவே’ (தாமரை) என்றாலும் அதனை நீ அணியாமல் நின் தோளில் கொன்றை
மலரைத் தரித்தமையால் கொன்றைமலர் தாமரையினும் சிறந்தது. மாண்டது என்பது மாட்சிமைப்பட்டது
என்ற பொருளில்: மாண்பகுதி. இறந்தது என்ற பொருளில்: மாள் பகுதி. இவ் வேறுபாடு
நோக்குக. |