பக்கம் எண் :

27

Kachchik Kalambagam


நாற்சீர் ஈரடி அம்போதரங்கம் - 2
  கரந்தயங் கனன்மழு வேந்தி நெற்றியிற்
புரந்தெறு சுடர்க்கணும் பூண்ட மேன்மையை     1
கூற்றினைக் குமைத்திடு கோலத் தாளினை
யாற்றினை அருள்நடம் ஆடும் பான்மையை     2

(இ-ள்.) (1) கரம்தயங்கு - கையின்கண் நின்று ஒளி செய்கின்ற, அனல் மழு - அக்கினியும் மழுவாளும், ஏந்தி - தாங்கிநின்றோய், நெற்றியில் - நெற்றியினிடத்தில், புரம்தெறு - திரிபுரத்தை அழிக்கும், சுடர்க்கணும் - அக்கினியாகிய கண்ணும், பூண்ட - அழகாக மேற்கொண்ட, மேன்மையை - மேன்மையை உடையை, அனல்மழு - உம்மைத்தொகை; அனலுகின்ற (கொழுந்துவிட்டெரிகின்ற) மழு என வினைத்தொகையாகவும் கொள்ளலாம். மழு - மழு என்னும் வாள். மேன்மையாவது வெறுங்கையில் நெருப்பு மழுவை ஏந்தலும் மெத்தென்ற தன்மையுள்ள கண் நெருப்பினால் அமைந்திருத்தலும் ஆகும். ஏந்தி - வினையாலணையும் பெயர். இயல்பு விளியாக நின்றது. ஏந்திப் பூண்டாய் என வினை யெச்சமாகக் கொள்ளுதலுமாம்.
 
  மழுவான வலனேந்தி மறைஓதி மங்கை பங்கா
தொழுவா ரவர் துயராயின தீர்த்தலுன தொழிலே
என்பது - ஆளுடைய நம்பி தேவாம்.


(2) கூற்றினை - எமனை, குமைத்திடு - உதைத்துக் கொன்றிட்ட, கோலம் - அழகிய, தாளினை - தாளை உடையாய், (நீ அந்தத் தாளினால்) அருள்நடம் - அருள் செய்யும் நடனத்தை, ஆடும் பான்மையை - ஆடும் தன்மையை, ஆற்றினை - செய்தாய்.

கூற்று என்றது எமனை. சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை. “காலம் உலகம் உயிரே உடம்பே” என்பது தொல்காப்பியம். உடலையும் உயிரையும் கூறு (வேறு) படுத்தலால் எமன், கூற்று எனப் பட்டான்: காரணப்பெயர். குமைத்தல் - உதைத்து அழித்தல். கோலம் - அழகு. உயிர்களை அழிக்கும் எமனை அழிக்கும் தாளையுடைய நீ அந்தத் தாளினால் அருள் செய்யும் நடனம் ஆடும் தன்மையைச் செய்தாய். குமைத்திடு ஆற்றினை - அழித்தல் செய்யும் ஆற்றலை உடையை. தாளினை - முன்னிலை வினைமுற்று. தாளினை - தாளை உடைய நீ என முன்னிலை வினையாலணையும் பெயராகக் கொண்டு, தாளினை, நடமாடும் பான்மையை ஆற்றினை என முடித்தலுமாம்.

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்.

ஈரேழ் புவனம் பரிந்து ணேற்றினை. 1
காரூர் சடையிற் கரக்கு மாற்றினை 2
பாரார் பெரியோர் பணியுஞ் சாற்றினை. 3
தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை. 4
   

(இ-ள்.) (1) ஈர் ஏழ் புவனம் - பதினான்கு உலகமும், பரிந்து (பிரளயத்தில்) விரும்பி, உண் ஏற்றினை - உட்கொண்ட திருமாலாகிய இடபத்தினை உடையை.

(2) காரூர் - மேகம் தங்கிய, சடையில் - சடையினிடத்து, கரக்கும் - அடக்கிய, ஆற்றினை - கங்கையை உடையை.
திரு ஆலவாயைப் பெருமழை பொழிந்து அழிக்க வந்த மேகங்களைச் சிவபெருமானார் சடையில் அடக்கிக் கொண்டனராதலின், ‘காரூர் சடை’ என்றார். கார் மேகத்திற்குப் பண்பாகுபெயர்.

சடையில் மறைக்கும் கங்கையை உடையை.

(3) பாரார் - உலகத்திற் பொருந்திய, பெரியோர் - ஆன்றோர்கள், பணியும் - வணங்கிக் கூறும், சாற்றினை - துதிகளை உடையை. சாற்றினை - சாற்றுதல்களை உடையாய்; சாற்று - துதி, முதனிலைத் தொழிற்பெயர்.

(4) தேரார் - பகைவரது, தெளிவறு - தெளிவற்ற, செருக்கை - இறுமாப்பை, மாற்றினை - ஒழித்தாய். தேரார் - பகைவர்; ஈண்டுப் பாணாசுரர் முதலியோர்.


Untitled Document