பக்கம் எண் :

29

Kachchik Kalambagam

இருசீர் ஓரடி அம்போதரங்கம் - 16
சடையுறு செல்லினை 1
விடையுறு மெல்லினை 2
கலையளை சொல்லினை 3
சிலைவளை வில்லினை 4
மலைவலி புல்லினை 5
வழிபெறு மல்லினை 6
களமில கல்லினை 7
பரவெளி இல்லினை 8
அமுதுகு பாவினை 9
அனலுறு கோவினை 10
சிலையில வாவினை 11
தலைநதி மேவினை 12
மறைபடு நாவினை 13
உலகுணு மேவினை 14
கரிவளர் காவினை 15
கதிதரு மாவினை 16.

(இ-ள்.) (1) சடையுறு - சடையில் பொருந்திய, செல்லினை - மேகத்தை உடையாய், செல் - மேகம். செறுநர்த்தேய்த்த செல் உறழ் தடக்கை - திருமுருகாற்றுப்படை. செல் என்பது இடியையும் மேகத்தையும் உணர்த்தும். பகைவரை ஒழிப்பதில் இடிபோன்றும் அடியவரைக் காப்பதில் மேகம் போன்றும் உள்ளனை.

(2) விடையுறும் - எருத்து மாட்டின் மீது அமரும், எல்லினை - ஒளியினை உடையாய். ‘எல்லே இலக்கம்’ - தொல்காப்பியம். இடையியல்.

(3) கலைஅணை - நூல்களைத் தழுவிய, சொல்லினை - சொற்களை உடையை.

(4) சிலை - மலையை, வளை - வளைத்த, வில்லினை - வில்லாக உடையை.

சிலை - கல். சிலை, மலைக்குச் சினையாகு பெயர். கருவியாகு பெயரெனினுமாம். வளைவில் - வினைத்தொகை. வளை, பிறவினைப் பொருளில் நின்றது.

(5) மலைவலி - பார்வதியை, புல்லினை = தழுவினை. வல்லி என்பது வலி என நின்றது. இடைக்குறை விகாரம். வல்லி என்பது வல்லிக் கொடிபோன்றவளாகிய உமாதேவிக்கு உவமையாகு பெயர்.

(6) வழிபெறு - இடம்பெற்ற, மல்லினை - வளப்பங்களை உடையை.

மல் - வளப்பம்: ‘மல்லல் வளனே’ - தொல்காப்பியம். வழி - வழிபாடு. (வையங் காவலர் வழிமொழிந் தொழுக - புற நா. 8) வழிபாடு செய்யும் அருச்சுனனிடத்து மல் போர் செய்தனை என்று கொண்டு மல் என்பது மல் போர் எனினும் ஆம்.

(7) களம் - கழுத்தில், இலகு - விளங்கும், அல்லினை - நஞ்சின் இருளை உடையை. இனிக், களம் இல - குற்றமிலதாகிய, கல்லினை - கைலைமலையை உடையை எனினும் அமையும்.

களம், குற்றம் என்ற பொருளில் கள்ளம் என்பதன் இடைக் குறைவிகாரம். இல என்பது இலது என்பதன் கடைக்குறை.

(8) பரவெளி - பரவெளியாகிய, இல்லினை - வீட்டை உடையை. பரவெளி - சிதாகாசம்.

(9) அமுது உகு - (நினைப்பவர் பாடும்) அமுது ஒழுகும். பாவினை - இனிய பாட்டுக்களை உடையை. பாவாவது தேவாரப்பா.

(10) அனல் உறு - நெருப்புப் பொருந்திய, கோவினை - கண்ணினை உடையாய். இனிக், (கையில்) அனலை ஏந்திய பெருமையிற் சிறந்தோனாயினை, (கோ - பெருமையிற் சிறந்தோன்) எனலுமாம். அன்றியும், நெருப்பின் கண் உற்ற கிரண வடிவாயினை (கோ - கிரணம்) எனலும் ஆகும்.

(11) சிலையில் - (கைலாய) மலையாகிய வீட்டில், அவாவினை -விருப்பம் உடையாய். சிலையில் அவாவினை - கல் வடிவமாயிருந்து அடியார்க்கு அருள்புரிதலில் அவாவினை என்றும்,

சாக்கிய நாயனார் எறிந்த கல்லின்கண் விருப்பம் உடையாய் என்றுமாம்.

“ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு” என்பது காண்க.

சிலையில் அவாவினை - மலைகளில் விருப்பம் உடையாய் (மேரு மலையை வளைத்தல், கைலாய மலையை உறைவிடமாகக் கொள்ளல், மலைமகளை மணத்தல், கல்லை மலராக ஏற்றல் முதலியவற்றால் மலையினிடத்துத் தோன்றும் விருப்பம் உடையை.)

(12) தலைநதி - தலையில் கங்கையை, மேவினை - விரும்பி ஏற்றனை. (பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தாங்கினை)

‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது தொல்காப்பிய உரியியலாதலால் மேவினை என்பதற்கு விரும்பி ஏற்றனை என்ற பொருள் காண்க.

(13) மறைபடு - வேதத்தைச் சொல்லிய, நாவினை - நாவை உடையாய்.

(14) உலகு உணும் - உலகங்களை ஊழிக் காலத்தில் உட்கொள்ளும், ஏவினை - திருமாலாகிய அம்பினைக் கொண்டனை. (ஏ - அம்பு.) உலகு உண்ணும் ஏ - திருமால். (குறிப்பு)

(15) கரிவளர் - யானையினிடத்து மண்ணாத தோலை, (பசுந்தோலை) காவினை - போர்வையாகக் கொண்டனை.

(கா - பாதுகாப்பு: போர்வை) மண்ணாத - கழுவாத; உப்பு முதலியன பெய்து தூய்மை எய்தலிலாத பசுந்தோல் 2 கரி-சாட்சிக்கு, வளர் - பொருந்துகின்ற, காவினை - பாதுகாப்பாக உள்ளனை. பொருட்சான்றாய் அமைந்தனை 3 இனிக் கரிவளர்காவினை - திருவானைக் காவினை உடையை.

(16) கதிதரு - நிலைத்தலை (வீடுபேற்றை)த் தருகின்ற, மாவினை - மாமரத்தினை இடமாகக் கொண்டனை.

(மா - மாமரம்) கதிதரு - விரைவினைக் கொண்ட, மாவினை - (மாணிக்கவாசகர் பொருட்டு) குதிரையைக் கொண்டாய். (மா - குதிரை)

கதிதரும் - நல்ல இயல்பு (அறத்தின் கடவுள் எருதாக அமைந்து) வாய்ந்த, ஆவினை - எருதினைக் கொண்டனை.

கதிதரும் - போற்றுவார் விரும்புவனவற்றை அளிக்கும் ஆற்றலை உடைய, மாவினை - மாமரத்தை உடையாய்.

கதித்தல் - பருத்தல்.

மிகவும் பருத்த (நெடுங்காலமாய் உள்ள) மாமரத்தை இடமாகக் கொண்டனை.

மா - ஆண் யானை:

அடியார்க்கு நற்கதி அளிக்கும் யானை முகமுடைய பிள்ளையாரை (மூத்த மகனாக)க் கொண்டனை.

மா - அன்னம்:

வீடு தரும் அன்னம் போன்ற உமையைக் கொண்டனை.

மா - அழகு: நிலைத்துள்ள அழகுடையாய்.

 


Untitled Document