பக்கம் எண் :

3

Kachchik Kalambagam

பல்துறைப் பயிற்சி

      இவர் கணக்கிலே யன்றி, ஆங்கிலம், தமிழ், வரலாற்று நூல், தத்துவ நூல் முதலிய பல்வகைத் துறைகளிலும் தனித்தனியே சிறந்தவர் என்று சொல்லப்படுமாறு மேம்பட்டு விளங்கினர்.  கல்லூரிக்கு எந்தப் பேராசிரியரேனும் வராவிடினும், இவர் அப்பேராசிரியர் நிலையில் அமர்ந்து அப் பாடங்களை மிகத் திறம்பெற நடத்துவார்.

      ஒருகால், அரசினர் கல்லூரித் தலைவரான தாம்சன் என்பவர், தத்துவப் பாட ஆசிரியராக அமர்த்த வேண்டி, அறிவாளர் கெர்பர்ட் பென்சரின் மாணவரான டங்கன் என்பவரைத் தங்கள் கல்லூரிக்கு வரவழைத்தார், டங்கனுக்கு அரங்கநாத முதலியாரை அறிமுகம் செய்துவைக்கப்பட்டவுடன், டங்கன், தாம்சனிடம் “இதோ தத்துவம் அறிவுறுத்த அரங்கநாதர் இருக்கின்றனரே. என்னை எதற்காக 6000 மைல்களுக் கப்பாலிருந்து வரவழைத்தீர்கள்?” என்று கேட்டு அரங்கநாதரைப் பாராட்டினாரென்றால், அரங்கநாதரின் பல்துறைத் திறமையும் சொல்லவும் வேண்டுமா?

      ஒருகால், கல்லூரியில் ஐரோப்பியப் பேராசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கு நடத்தப்பெற வேண்டிய பாட ஒழுங்குகளை வரையறுக்குங்கால், டாக்டர் டங்கன் என்பவர் அரங்கநாத முதலியாரைப் பார்த்து, ‘நீர் என்ன பாடம் எடுத்துக்கொள்கிறீர்?’ என்று கேட்டபொழுது, அரங்கநாதர் ‘நீங்கள் விரும்பியவாறே’ என்று கூறினர். ‘விரும்பியவாறே’ (As you like it) என்னும் செகுபியர் நாடகமும் பாடத் திட்டங்களுள் ஒன்றாக இருந்தமையின், இரட்டுற மொழிந்த அரங்கநாதரின் மனப் பாங்கைக் கண்டு, டாக்டர் டங்கன் மகிழ்ந்து, அந்த நாடகத்தையே அவர் நடத்துமாறு ஏற்பாடு செய்தனர்.  அரங்கநாதரும் மறு ஆண்டு அந்நாடகத்தை ஐரோப்பியரைக்காட்டிலும் திறம்படச் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை ததும்ப அறிவுறுத்தினர்.

      அரசினர் கல்லூரியிலிருந்த வரலாற்று நூலாசிரியரேனும் தத்துவ நூலாசிரியரேனும் கல்லூரியினின்றும் விடுமுறை பெற்றுத் தந்நாட்டுக்குச் சென்று வருங்காறும், அரங்கநாத முதலியாரே, அவர்கள் நடத்திவந்த பாடங்களைத் தொடர்ந்து நடத்துவார்.  விடுமுறையினின்றும் திரும்பிவந்த ஆசிரியர்கள், அதுவரை பிறரால் பயிற்சி பெற்றிருந்த தம் மாணவர்களைக் கேள்விகள் கேட்டு ஆராய்ந்த பொழுதெல்லாம், மாணவர்கள் மிகத் திறம்படப் பயிற்றப் பெற்றிருப்பது கண்டு, அங்ஙனம் பயிற்றிய அரங்கநாதரிடத்துப் பெருமதிப்புப் பாராட்டி வந்தனர்.

      பல்துறைப் பயிற்சியிலும் மேம்பட்டாராயினும், இவர் மனம் எப்போதும் கணக்குநூற் றுறையிலேயே மூழ்கியிருக்கும். மாணவர்கட்குக் கணக்குகளை யாதொரு முயற்சியுமின்றி, விளையாட்டாகவே வரைந்து கொள்ளுமாறு கொடுப்பார்.

      பொதுமக்கள் கூடும் பேரவையிலும், பிற இடங்களிலும் அவர் ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது, ஆங்கில மொழிச் சொற்கள் அவர் எதிரே வந்து பணிசெய்து நிற்பன போல் காணுமாறு, தங்கு தடையின்றி அவர் வாயினின்றும் நீரோட்டம்போல் வெளிப்படும்.  பேச்சின் ஒலிமுறை சிறிதும் மாறுதலின்றி, ஆங்கிலரும் வியக்குமாறு, ஆங்கில நாட்டிற் பிறந்து வளர்ந்த ஆங்கிலர் பேச்சையே ஒத்திருக்கும்; பொருள் வளம் கனிந்து காணப்படும். இளவேனிற்காலத்தில் வானம் பாடிக் குருவி விடியலில் பறந்து சென்றுகொண்டே இனிய குரலோடு பாடிச் செல்வதுபோல், அரங்கநாதர் பேசும்போது பெருமுயற்சியின்றியும் சிறு உழைப்புமின்றியும், மிக விரைந்து செல்லாமலும், மிகத் தாழ்ந்து செல்லாமலும் ஆற்றொழுக்குப் போல் இனிமை பெறப் பேசிக்கொண்டு செல்வர். கேட்டோர் பின்னர் அவர் பேசியதை நினைவுகூரும்போதும், அவர் எதிரே நின்று பேசுவதுபோல் உணர்ந்து இன்புறுவார்கள்.

      அரங்கநாதரை ஆங்கிலர் “புரொபசர் ரங்கநாதம்” என்றழைப்பர். தமிழ்ப்புலவோர் “சருவகலா வல்லவர் அரங்கநாத முதலியார்” என்று போற்றுவர்.  பொதுமக்கள் எம்.ஏ. அரங்கநாத முதலியார் என்று சொல்வர்.  பல்கலைக் கழகப் பட்டம் பெற்றோர் “பட்டம் பெற்றோருள் அரச குமரர்” என்று கூறுவர். ஒருசமயம் அரசினர் கல்லூரியின் தலைவரான டாக்டர் டங்கன் அரங்கநாத முதலியாரைக் “கீழ் நாடுகளின் கலைவடிவமானவர்” என்று பாராட்டியுள்ளார்.