பக்கம் எண் :

4

Kachchik Kalambagam

விளையாட்டு

      கல்வித்துறையிலே யன்றி, ஐரோப்பியர்களுக்குரிய சதுரங்கம், பந்தடித்தல் முதலிய பலதிறப்பட்ட விளையாட்டுக்களிலும், அவர்கள் வியக்குமாறு, மிக எளிதாக நெடுங்காலம் பயின்றவர் போலக் கலந்துகொண்டு ஆடுவார்.  சதுரங்கத்தைக் கண்ணால் பாராமலே மனத்திற்குள்ளேயே சிந்தித்து ஆடி வெற்றி பெறுவார்.  இவர் இளம் வயதில் கோலியாடுதல், காற்றாடி விடுதல் முதலிய பல்வகை விளையாட்டுக்களிலும் எழுச்சியுடன் ஈடுபட்டிருந்தவரேயாவர்.

      ஆக்சுபோர்டிலிருந்து ஆங்கிலரை அரசினர் கல்லூரிக்கு ஆசிரியராக அனுப்பினால் “அங்கே ஒரு சிங்கம் இருக்கிறது என்பதை யுணர்ந்திருங்கள்” என்று அரங்கநாதரைக் குறித்துரைப்பார்களாம்.

தமிழ்மொழிப் பயிற்சி

      இங்ஙனம் பல்கலைத் துறைகளிலும் மேம்பாட்டுடன் திகழ்ந்த இவர், தமிழ்மொழித் துறையிலும் மேம்படுவோராய் அக்காலத்திருந்த தமிழ்ப்புலவோர் பலருடனும் கலந்து அறிவு நூற்களைக் கற்றும் கேட்டும் பொழுதுபோக்கி மேம்பட்டனர்.  ஒருகால் அரங்கநாதர் தமிழ்ப்புலவோர் பலரையும் தம் வீட்டில் கூடுமாறு வரவழைத்தனர்.  ஏழு நாட்கள் புலவர் கூட்டத்தில் தொடர்ச்சியாக இருந்து மகிழ்ந்தனர்.  கடைசிநாளன்று அரங்கநாதர் “எல்லாம் இயற்கையே; கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை வேண்டுவதன்று” என்ற கொள்கையை யுடையவராய்ப் பேசினர்.  பல புலவர்களும் தங்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் காட்டினர்.  அங்கு வந்திருந்தவர்களில் ஒருவரான தொழுவூர் வேலாயுத முதலியார் அரங்கநாதருக்குக்கடவுள் கொள்கையைத் திறம் பெற நிறுவிக் காட்டினர்.  உடனே அரங்கநாதர் நெற்றியில் நீறணிந்து, தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கைகூப்பி வணங்கி, அவரது அகன்ற கல்வியின் பெருமையை யுணர்ந்து வியப்புற்றார்.  அவரையே ஆசிரியராகக்கொண்டு அரங்கநாதர் தமிழறிவு விரியப்பெற்றார்.  அவரைத் தம் கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்த்தினார்.  திருமணம் செல்வகேசவராய முதலியாரின் தந்தையாரான திருமணம் சுப்பராய முதலியாரும் அரங்கநாதருக்கு மற்றொரு தமிழாசிரியராவர்.

      அவர்கள் பாடம் சொல்லுங்கால், இவர் தம் பெரும் புலமையால், அவர்கள் கூறிவரும் கருத்துக்களை மிக எளிதிலும் விரைவிலும் மனத்துட்கொண்டு, பாடம் சொல்வோர் மேலும் மேலும் விரைந்து சொல்லுமாறு குறிப்பித்து முற்பட்டுச் செல்வர்.

      இங்ஙனம் பல தமிழ்ப்புலவர்களோடும் பழகி மேம்பட்ட இக்காலத்திலேயே அரங்கநாதர் “கச்சிக் கலம்பகம்” என்ற நூலைச் செய்து தந் தமிழ்ப் புலமையையும், பத்தி மேம்பாட்டையும் தெரிவுறக் காட்டினர்.