பக்கம் எண் :

5

Kachchik Kalambagam

கலம்பக அரங்கேற்றம்

      இக் கச்சிக் கலம்பகம் சென்னைத் தொண்டைமண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில், அக்காலத்துத் தமிழ்ப் புலமைநலஞ் சான்றார் பலரும் கூடியிருந்த பேரவையில் அரங்கேற்றப்பட்டது.  முதற் செய்யுளை அட்டாவதானம் சபாபதி முதலியாரின் மாணவரான திருவாரூர் சின்னசாமிப் பிள்ளையென்பார் அரங்கேற்றம் செய்தனர்.  தொண்டைமண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியின் மேற்பார்வையாளருள் ஒருவராயிருந்த புலவர் தண்டலம் பாலசுந்தர முதலியார் இரண்டாம் நாள் அரங்கேற்றம் செய்தனர்.  மூன்றாம் நாள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடாத்திய மயிலாப்பூர் முருகேச முதலியார் அரங்கேற்றம் செய்தனர்.  மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் நான்காம் நாள் அரங்கேற்றம் செய்தனர்.  ஐந்தாம் நாள் திருமணம் சுப்பராய முதலியார் அரங்கேற்றம் செய்தனர்.  சிதம்பரம் ஈசானி மடம் இராமலிங்க சுவாமிகள் ஆறாம் நாள் முதல் இறுதிவரை அரங்கேற்றம் செய்து முடித்தனர்.

உலகியல் அறிவு

      அரங்கநாத முதலியார் இத்துறைகளிலே யன்றி, வழக்கறியுந் துறையிலும் கூர்த்த அறிவுடையராய்த் திகழ்ந்தமையை ஒரு நிகழ்ச்சி காட்டுவதாகும்.  சென்னை உயர்நிலை நீதிமன்றத் தலைவர் திருவாரூர் முத்துசாமி ஐயர் ஒருகால், ஒரு வழக்கிற்குத் தீர்ப்பு வீட்டில் எழுதுபவர், ஒரு நோக்கத்தால் வாதி பக்கமாகவும், மற்றொரு நோக்கத்தால் பிரதிவாதி பக்கமாகவும் எழுதக்கூடிய நிலையிலிருந்த ஒன்றைத் தீர்ப்பிட்டு எழுத இரண்டு மூன்று நாள் முயன்று பார்த்தும் முடிவாக எழுதக் கூடிய துணிவு பிறவாமையால், வழக்கு விசாரணைக் குறிப்புக்களுடன் சட்டத் தொடர்பான நூல்களின் பகுதிகளையும் குறித்துக்கொண்டு, அரங்கநாத முதலியார் வீட்டுக்கு ஒருநாள் மாலை வந்துசேர்ந்தார். அரங்கநாதர் அவ்வமயம் வீட்டில் இல்லாமையால், சற்றுநேரம் காத்திருந்து பார்த்தும் வராமற் போகவே தாம் கொண்டுவந்தவற்றை மேசைமீது வைத்துவிட்டு வேலையாளிடம் சொல்லிவிட்டுச் சென்றனர்.  அரங்கநாதர் வந்தவுடன் நிகழ்ந்த தறிந்தார்.  பிறகு உணவுகொண்டு துயின்றவர், நடு இரவில் விழித்துக்கொண்டு எல்லாவற்றையும் படித்துத் தீர்ப்பு எழுதி வைத்துவிட்டு விடியற்காலை மீண்டும் படுத்துறங்கினர்.  காலையில் முத்துசாமி ஐயர் வந்து பார்த்தபோது, வேலையாள் நடு இரவில் விழித்துக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டேயிருந்து, விடியற்காலை அயர்ந்த உறக்கம் கொண்டனர் என்று கூறினான்.  முத்துசாமி ஐயர் மேசைமீதிருந்தவற்றை எடுத்துப் படித்து உளநிறைவுகொண்டு அவைகளை மகிழ்வுடன் எடுத்துச் சென்றனர்.