இறுதிக்காலம்
அரங்கநாதர் இறக்குங்காலத்து நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை
எடுத்துக்கூறி இதை ஒருவாறு முடிப்பாம். அரங்கநாதர் எம்.ஏ. தேர்வில் கணக்குப் பகுதியின்
தேர்வுத் தலைவராய் வினாத்தாளை வழங்கியவர், விடைத்தாளைத் திருத்தவேண்டிய அமையம்
வந்தபோது இறுதிக்காலத்தை யண்மியவராய் உடல் நிலை தளர்ந்தமையின், அவ் வேலையைத்
தாம் செய்ய இயலாத நிலையிலிருப்பதைக் குறித்து அக் குறிப்பிட்ட வேலைநீக்கம் வேண்டி
எழுதிக்கொடுத்துவிட்டார். அவர் வினாத்தாளில் குறித்திருந்த சிக்கலான ஒரு கணக்கைத்
தேர்வுக் குழுவிலுள்ள ஒரு ஆங்கிலப் பேராசிரியரும், ஒரு பார்ப்பனப் பேராசிரியரும்,
நெடுநேரம் சிந்தித்துப் பார்த்தும் விடை தெரியாமற் போகவே, ஆங்கில ஆசிரியர்
இறக்கும் நிலையிலிருக்கின்ற அரங்கநாத முதலியாரை யண்மினர். வந்தவர் அவர் நிலைகண்டு
கண்ணீர் விட்டு, அவ் வினாத்தாளில் அக் கணக்கைக் குறித்துக் காட்டி, ஒரு எழுதுகோலையும்
கொடுத்தனர். அரங்கநாத முதலியார் வாங்கி, அதனைப் படித்துப் பார்த்து, அதற்குரிய
விடையை உடனே விளக்கமாக எழுதித் தந்தனர். ஆங்கிலப் பேராசிரியர் அவ்விடையைக்
கண்டு வியப்பும் பெருமகிழ்ச்சியுங்கொண்டு, அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, அவர்
கைகளைத் தங் கைகளாற் பற்றிக் கண்ணீர் விட்டனர். இரண்டு நாழிகைக்குப் பின்
அரங்கநாத முதலியார் உயிர் நீத்தனர்.
இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் செனட், சின்டிகேட்
என்னும் குழுக்களில் பலகாலம் உறுப்பினராக இருந்து உழைத்தனர். அரசாங்கத்தில் தமிழ்
மொழி பெயர்ப்பாளர் என்ற பெரிய வேலையைத் தாங்கியும் பணிசெய்திருக்கின்றனர்.
சென்னை உயர்நிலை நீதி மன்றத்தில் அரசரால் செரீப் ஆகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அக்காலம் வரை அவ் வேலை ஆங்கிலருக்கே கொடுக்கப்பட்டு வந்ததாகும். இங்ஙனம் சிறப்புறப்
பொலிந்த இவர் 1893-ம் ஆண்டு தம்முடைய நாற்பத்தொன்பதாம் அகவையுள் தம் புலாலுடம்பு நீத்துப் புகழுடம்புடன் நின்றனர்.
அரங்கநாத முதலியார் இறந்தபின், இடுகாட்டுக்கு அவரது
உடலைத் தாங்கிச் செல்லுங்கால், ஐரோப்பியர் பலர், பழைய மாணவர்கள் பலர், கல்வி
வல்லார் பலர், உயர்ந்த அரசியல் அலுவலாளர்கள் பலர், நெருங்கிய நண்பர்கள் பலர்,
அவர் பல்லக்கினைத் தாங்கிச் செல்லப் பெருவிருப்புடையராய் நின்றும் தாங்குதற்கு
இடம் கிடைக்கப் பெறாமையால், ஒவ்வொருவரும் சிறிதுநேரம் தாங்கிச் சென்று தம் மனக்குறை
முடித்தனர்.
“வசை யொழிய வாழ்வாரே
வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.”
|