திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
16

சிறப்பாகத் திருவாய்மொழியின் பெருமைகளையும் ‘ஆசாரிய ஹிருதயம்’ என்னும் நூல் மிக அழகாக விளக்கிக் கூறுகின்றது.

    ஆழ்வார் மங்களாசாசனம் செய்த (தம் பாசுரங்களில் எடுத்துக் கூறிய) திருப்பதிகள் முப்பத்தைந்து என்பர். அவற்றுள், தனிப் பதிகங்களாற்கூறப்பட்டவை சில. சில திருப்பதிகள் இடை இடையே எடுத்துக் கூறப்பட்டவை. ஆழ்வார் பாண்டி நாட்டில் அவதரித்தவர் ஆதலின், பாண்டி நாட்டுத் திருப்பதிகளையும் மலை நாட்டுத் (திருவாங்கூர்ப் பகுதி) திருப்பதிகளையுமே மிகுதியாகப் பாடியுள்ளார். திருமால் கோயில் கொண்டுள்ளவைகளும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றவைகளுமான நாற்பது திருப்பதிகள் உள்ள சோழ நாட்டில் ஐந்து திருப்பதிகளையே நம்மாழ்வார் பாடியுள்ளார்; பாண்டி நாட்டிலும் மலை நாட்டிலும் இருபத்து நான்கு திருப்பதிகளைப் பாடியுள்ளார். ஏனையவை, திருவேங்கடம் முதலிய வடநாட்டுத் திருப்பதிகள். மலை நாட்டுத் திருப்பதிகளிற்சில, இவரால் மட்டுமே பாடப்பட்டவைகளாகும். திருவேங்கடத்தை மிகுதியாகப் பல இடங்களிற் பாராட்டியுள்ளார். திருவிருத்தமே ஆழ்வாருடைய முதற்பிரபந்தமாக அறிஞர் கொண்டுள்ளார். பாற் கடலும் பரமபதமும் நீங்கலாக இங்குள்ள திருப்பதிகளில் திருவேங்கடத்தையே திருவிருத்தத்தில் முதலில் எடுத்துக் கூறியுள்ளார்.

    இவ்வாறு நம்மாழ்வார் இறைவனை நினைந்து இன்புற்றுப் பாசுரங்களைப் பாடிக்கொண்டும், மதுரகவிகளுக்கு உபதேசித்துக் கொண்டும் முப்பத்தைந்து ஆண்டளவும் இவ்வுலகில் எழுந்தருளியிருந்து, அதன்மேல் அந்தமில் பேரின்பவீடாகிய பரமபதத்தை அடைந்தார்.

    நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்போதும் விளங்குகின்றார் என்பது வைணவசமயக் கொள்கை. அதனால் திருமால் திருக்கோயில்களில் அப்பெருமானைச் சேவிக்கச் செல்வோர் முடி மீது அவர் திருவடியாக வைக்கப்படுவதை ‘சடகோபன், சடாரி’ என்று வழங்குகின்றனர். சடகோபன், சடாரி என்பன நம்மாழ்வாருடைய திருப்பெயர்கள்.

    நம்மாழ்வாரை அடைந்தவுடன், அவரிடத்துப் பேரன்புபூண்ட மதுரகவிகள், அவரையே தெய்வமாக எண்ணி, அவர்மீது பத்துப் பாசுரங்களடங்கிய நூல் ஒன்றைப் பாடினார். அந்நூல் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்று தொடங்குவதனால், ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்றே பெயர் கூறப்பட்டு, நாலாயிரப் பிரபந்தத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. அந்நூல், எட்டெழுத்து மந்திரமாகிய பெரிய திரு