திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
20

இறைவன் என்று பெயர் கூறப்படுவதை விளக்குமிடத்தில், ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்,’ என்ற பாசுரப் பகுதியையும் எடுத்து மேற்கோள் காட்டினர். மற்றும், ‘ஆரா வியற்கை அவாநீப்பின்’ என்ற குறளின் உரையில் ‘களிப்புங் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று, ஒளிக் கொண்ட சோதியுமாய் உடன் கூடுவது என்றுகொலோ,’ என்ற பாசுரப் பகுதியை, “களிப்புக் கவர்ச்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புகளும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய் நிற்றலின், வீட்டினைப் ‘பேராவியற்கை’ என்றார்,” என உரை நடையாகவும் அமைத்து எழுதியுள்ளார்.

    சேனாவரையர் ‘நீட்டும் வழி நீட்டல்’ என்ற இலக்கணக் குறிப்பிற்கு ‘வீடுமின் முற்றவும்’ என்ற பாசுரப் பகுதியாகிய ‘வீடுமின்’ என்பதனை எடுத்துக் காட்டினர்.

    நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியலில் ‘தரவின்றாகித் தாழிசை பெற்றும்’ என்ற 149-ஆம் சூத்திரத்தின் உரையில் திருவாய்மொழியை எடுத்துக்கூறி இதன் ஒவ்வொரு பதிகத்திலும் (ஒவ்வொரு திருவாய்மொழியிலும்) உள்ள பாக்கள் தாழிசைகள் என்றும், இவை நான்கடியின் மிகாமல் வந்தவை என்றும் கூறினர். ஒவ்வொரு பதிகப் பாக்களும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்தன என்றும் கூறினர். அவர் எழுத்து எண்ணி வரும் கட்டளைக் கலித்துறை தரவு கொச்சகம் என்றனர்.

    எனே்வ, திருவாய்மொழிப் பாசுரங்கள் எல்லாம் பிற்கால இலக்கண நூல் கொண்டு விருத்தப்பாக்கள் என்று கூறலாகாது என்பதும், திருவிருத்தப் பாசுரங்கள் எல்லாம் அவ்வாறே கட்டளைக் கலித்துறை என்று கூறுதல் ஆகாது என்பதும், இவற்றைத் தொல்காப்பிய இலக்கணங் கொண்டு ‘தாழிசைகள்’ என்றும் ‘தரவு கொச்சகம்’ என்றும் கூறுதல் வேண்டும் என்பதும் அறியப் படுகின்றன.

    பிரயோக விவேக நூலார், பல இலக்கணக் குறிப்புகளுக்குத் திருவாய்மொழியிலிருந்து பல மேற்கோளை எடுத்துக்காட்டியுள்ளனர். இரண்டாம் பாட்டின் உரையில் ‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ’ என்பதனையும், பதினோராவது பாட்டின் உரையில் ‘பத்பநாபன் உயர்வற வுயரும் பெருந்திறலோன்’ என்ற பாசுரத்திலிருந்து ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்ற பகுதியையும் முப்பத்தைந்தாம் பாட்டின் உரையில் ‘வைத்த நாள்வரை’ என்ற