திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
22

அதே நிலையில் தலைவி தலைவனுடன் சென்றமைக்குத் தாய் வருந்துவதாக அருளிய பாசுரமாகும்; தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறுமுகத்தால் நம்மாழ்வாருடைய அவதாரச் சிறப்புக் குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளதாகும்.

    “நெடுங்காலமும் கண்ணன் நீள்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற இளமான், தொடுங்கால் ஒசியும் இடை இளமான்” என்று கூட்டிப் பொருள் கொள்ளுதல்வேண்டும். உடைய நங்கையார் நெடுங்காலம் திருமால் திருவடிகளை வணங்கி அவர் அருளால் நம்மாழ்வாரைப் பெற்றார் என்ற குறிப்புக் கிடைக்கின்றது. நம்மாழ்வாராகிய தலைவி, ‘நல்கூர்ந்தார் செல்வமகள்’ என்றாற்போல, அரிதாகப் பெற்றுச் செல்வமாக வளர்க்கப் பெற்றவள்; மிக்க மென்மைத் தன்மையுடையவள்; மிக்க இளமைப்பருவமுடையவள் என்ற இத்தன்மை எல்லாம் நம்மாழ்வாருடைய சிறப்பு இயல்புகளைக் குறிப்பால் உணர்த்துவன எனக் கொள்ளலாகும்.

    நம்மாழ்வார் ஓதாது உணர்ந்த ஞானச் சிறப்புடையவர் என்று வரலாறு கூறுகின்றது.

    “அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
     அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்”

(2. 3: 3.)

என்பது திருவாய்மொழிப் பாசுரம்.

    அறிவு தோன்றுதற்கு உரியதல்லாத மிக்க இளம்பருவத்திலேயே நம்மாழ்வார் இறைவனிடத்துப் பேரன்பு கொண்டவராயினர்; அங்ஙனம் அன்பு கொள்ளுமாறு இறைவன் அருள் புரிந்தான் என்று இப்பகுதியில் கூறுகின்றார். இதனால், ஆழ்வார் ஓதாது உணர்ந்த ஞானச்செல்வர் என்பது ஒருவாறு கிடைக்கின்றது.

    நம்மாழ்வாருடைய பெயர் சடகோபன், மாறன் என்பவை, நம்மாழ்வார் என்பது பின்னுள்ளோர் அவர் பெருமை கருதி வழங்கிய பெயராகும்.

        “நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
        என்ப ரவரவர்தம் ஏற்றத்தால்”


என்று உபதேச ரத்தினமாலை கூறுகின்றது. மேற்கூறப்பட்ட இரண்டு பெயர்களுள் சடகோபன் என்ற பெயரே பெருவழக்காயுளது. திருவிருத்தத்தின் இறுதியிலும் திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் பலன் கூறும் பாசுரம் ஒவ்வொன்று அமைத்துள்ளனர். அவற்றில் பெயரையும் கூறுகின்றார். அவற்றில் பெரும்பாலும் ‘குருகூர்ச் சடகோபன்’ என்ற தொடரே காணப்படுகின்றது.