|
New Page 1
‘மாறன்’ என்ற பெயர்
ஆறு இடங்களில் கூறப்பட்டுள்ளது. ‘மாறன்’ என்பதனோடு அவர் தந்தையார் பெயரையும் சேர்த்துக்
‘காரி மாறன்’ என்றும் கூறப்பட்டுள்ளது. சடகோபன் என்பது இயற்பெயராகவும், மாறன் என்பது பின்னர்க்
கூறப்பட்ட பெயராகவும் கொள்ளலாம் ஆனால், மாறன் என்பது இயற்பெயராக வரலாறு கூறுகின்றது. திருக்குருகூர்
உள்ள பகுதியை ‘வழுதி நாடு’ என்றும், ‘வழுதி வளநாடு’ என்றும் கூறுகின்றார். இத்தொடர் பொதுவாகப்
பாண்டிநாடு என்ற பொருளையும் கொடுக்கும். ‘தென்னன் குருகூர்ச் சடகோபன்’ என்றும் ஓரிடத்திற்கூறியுள்ளார்.
‘வழுதி நாடு’ என்பது பாண்டி நாட்டின் ஒரு பகுதியின் பெயர் என்றும், அப்பகுதியிலுள்ள குருகூர் என்றும்
கொள்வது பொருத்தமாகும். தம்முடைய அவதாரத் தலமாகிய குருகூரைப் பல இடங்களில் பலவாறாகச் சிறப்பித்துக்
கூறியுள்ளனர். நம்மாழ்வாருக்கு மகிழம்பூ மாலையைச் சிறப்பு மாலையாக வழங்குகின்றனர்.
நான்காம்பத்து, பத்தாந்திருவாய்மொழியின் இறுதியில், ‘நாட்கமழ் மகிழ்மாலை
மார்பினன் மாறன் சடகோபன்’ என்று கூறப்பட்டிருப்பதனால், அவ்வழக்கு ஆதாரமுடையதாகின்றது.
நம்மாழ்வாருடைய நூல்கள் நான்கும் அந்தாதியாய் அமைந்துள்ளன. திருவாய்மொழியை
‘அந்தாதி’ என அவரே பல இடங்களிற் கூறியுள்ளனர். இவற்றுள், திருவாசிரியம் நீங்கலாக ஏனைய
மூன்றும் முதற்பாவின் முதற்சொல், ஈற்றுப் பாவின் ஈற்றுச்சொல்லாகப் பெற்றுள்ளன. திருவாசிரியம்
மட்டும் அவ்வாறு இல்லை. செய்யுள்களை அந்தாதித் தொடையாற்பாடுவது பழங்கால வழக்கேயாகும். பதிற்றுப்பத்து
நான்காம் பத்தின் பத்துப் பாட்டுகளும் அந்தாதித் தொடையால் அமைந்திருத்தலைக் காணலாகும்.
மாறன் பணித்த தமிழ்மறைக்கு ஆறு அங்கம் கூற அவதரித்த திருமங்கை மன்னர்,
தம்முடைய நூல்கள் ஆறையும் அந்தாதித் தொடையாக அருளிச்செய்திலர்; ஆயினும், பெரிய திருமொழி
11-ஆம் பத்து மூன்றாந்திருமொழி பத்துப்பாடல்களையும் அந்தாதித் தொடையாக அமைத்துள்ளனர்.
நம்மாழ்வாருடைய வழியை விடவில்லை என்பதற்காக ஒரு திருமொழியை அவ்வாறு அமைத்தனர் போலும்!
நம்மாழ்வார் பிறந்த நாள் தொட்டே எம்பெருமானிடத்துப் பேரன்பு பூண்டு,
அவ்வன்பே தம் இன்பமாகக் கருதி வாழ்ந்தவர்!
|