|
உலக இன
உலக இன்பங்களை அவர்
ஒரு சிறிதும் எண்ணவில்லை என்று வரலாறு கூறுகின்றது. ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’
என்ற அகச்சான்றினாலும் மிக்க இளம்பருவந்தொட்டே எம்பெருமானிடத்துக் கொண்ட அன்பில் மூழ்கி
உலக இன்பங்களை எண்ணாது இருந்தனர் என்பது அறியப்படுகின்றது. அவர்தம் நூலை ஆராய்ந்து பார்த்தால்,
இந்நிலைமை மிக நன்றாகத் தெரியும். ‘பெண்களின் காமவலைப்பட்டு உழன்றேன்,’ என்று வேறு சிலர்
பலவாறாகக் கூறுவதுபோல நம்மாழ்வார் கூறிற்றிலர். மிக அரிதாக இரண்டோரிடங்களில் மட்டும்
இத்தகைய கருத்து வந்துள்ளது. அங்ஙனம் மிக அருமையாக வந்துள்ளதனால் அவைகளும் உலகியல் நோக்கிப்
பொதுவாகக் கூறப்பட்டவை என உய்த்துணரலாம். எனவே, நம்மாழ்வார் பிறந்த நாள் தொட்டு, அல்லது
அறியாக்காலந்தொட்டு இறைவன் இடத்துக்கொண்ட அன்பே இன்பமாக வாழ்ந்தவர்; ‘உண்ணுஞ்சோறு,
பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ அன்பே என்று வாழ்ந்தவர் என்பது தெளிவாகின்றது.
ஆழ்வார்
செய்யுள் பாடிய முறை
ஆழ்வாருக்கு அறியாக்காலந்தொட்டு இறைவனிடத்து உண்டாகிய அன்பு நாளுக்கு நாள் பெருகுவது ஆயிற்று.
‘இறைவனை அன்போடு எண்ணுதல் வேண்டும்; அன்போடு வணங்குதல் வேண்டும்,’ என எண்ணி நடைபெறுவதாக
இல்லாமல், இறைவனை நினைத்தலும், அவனை வணங்குதலும் அவருக்கு இயல்பாகிவிட்டன. அவர் அவனை நினையாமல்
இருக்க இயலாதவராகிவிட்டார். மக்கள் உணவு இன்றி உயிர் வாழ இயலாதவராய் இருக்கின்றார்கள்.
நம்மாழ்வார் எம்பெருமானை நினையாதிருக்க - அவ்வன்பை விட்டிருக்க - இயலாதவராகிவிட்டார்.
எம்பெருமான் நினைவு அவர் உள்ளத்தில் இன்ப ஊற்றாகிவிட்டது. அதனால், ‘ஆழ்வார் பிரபத்தியை
மேற்கொண்டவரே; ஆனால், பத்தி அவருக்குத் தேகயாத்திரா சேஷம்’ (பத்தி இன்றி உயிர்வாழ
இயலாதவர்) என்று நம் முன்னோர் அறுதியிட்டுரைத்தனர்.
மக்களுக்கு உள்ளத்தில் இன்பம் உண்டாவதற்கு இரண்டு வழிகள் உண்டு மெய்,
வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளால் அறிதற்கு உரிய பொருள்களை அனுபவிக்கும்போது உள்ளத்தில்
இன்ப உணர்ச்சி உண்டாகும். தமக்கு இனிய உறவினரை, நண்பர்களை, இனிய காட்சிகளைக் கண்ணாற்
காணும்போது உள்ளத்தில் இன்பம் உண்டாகும்; தம் மக்கள் மழலைச்சொற்கள்,
|