|
இன
இனிய இசை முதலியனவற்றைக்
காதால் கேட்கும்போது உள்ளத்தில் இன்பம் உண்டாகும். இவ்வாறே பிறவற்றையும் கொள்க. இப்படி
ஐம்பொறிகளின் சம்பந்தத்தால் இன்பம் உண்டாவதேயன்றி, இவற்றின் சம்பந்தம் இல்லாமலே உள்ளத்தில்
இன்பம் உண்டாதலும் உண்டு. அது மிக உயர்ந்த இன்பமாகும். துன்பமான காரியத்தை அனுபவித்துக்கொண்டே
மனத்தில் இன்பம் உறுதலும் உண்டு.
“தனது ஆத்துமாவைக்கொண்டு அகமகிழ்ச்சி அடையும் மனிதனே ‘ஸ்திதப்பிரஞ்ஞன்’
என்று கூறப்படுவான்,” என்பது பகவத் கீதையின் கருத்து. “பிச்சை எடுப்பேன்; உணவின்றி வருந்துவேன்;
ஆனால், திருட்டுப் போன்ற இழிதொழிலைச் செய்யேன்,” என்பதில் கிடைக்கும் உணர்ச்சி ஆனந்தம்;
இதுவே ஆத்துமாவின் அகமகிழ்ச்சி,” என்பது மகாத்துமா காந்தியடிகள் குறிப்பு.
தன் குடும்பத்தை நன்னிலை அடையச் செய்யவேண்டுமென்று எண்ணி மிக அதிகமாக
உழைக்கும் ஒருவன், அவ்வுழைப்பாலாகும் வருத்தத்தை வருத்தமாக எண்ணுவது இல்லை; இன்பமாகவே எண்ணுவான்.
தம் நாடு நன்னிலை அடைய வேண்டுமென்று எண்ணி உழைத்தவரும் அவ்வுழைப்பைத் துன்பமாக எண்ணாமல்
இன்பமாக எண்ணியதை அனுபவத்திற் கண்டோம்.
‘அஞ்சிறைய மடநாராய்’ என்று தொடங்கும் பாசுரத்தில் ‘வன்சிறையில்
அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமே’ என்ற அடியின் பொருளை விளக்குமிடத்தில்’ ‘பரார்த்தமாகச்
சிறையிருக்கும் இருப்புக் கிடைக்கவேண்டுமே!’ என்றார் இராமாநுசர். பரார்த்தமாகச் சிறை
இருக்கும் இருப்பு உடலளவில் துன்பமாயினும், மன அனுபவத்தில் இன்பமாகும் - பேரின்பமாகும் என்பது
இராமாநுசர் கருத்தாகும்.
இன்பம் துன்பம் என்பன, அவரவர் உள்ளத்தில் உண்டாகும் ஒரு கொள்கையே,
ஆதலால், உடற்சம்பந்தம் இன்றியும், உடலளவில் துன்பம் இருப்பினும் மனத்தில் இன்பம் உண்டாதல்
கூடும்.
‘இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.’
‘இன்னாமை இன்ப மெனக்கொளின் ஆகுந்தம்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.’
என்ற திருக்குறளின்
கருத்தைக் காண்க.
|