திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
26

இவ

    இவ்வாறு உடல் தொடர்பு இன்றி உள்ளத்தே உண்டாகும் இன்பம் மிகச் சிறந்ததாகும். ஆழ்வாருக்கு எம்பெருமானை நினைக்க நினைக்க, அவர் உள்ளத்து எழுந்த இன்பவெள்ளம் உடல் தொடர்பு இல்லாதது (ஐம்பொறி இன்பமன்று); உயிரை ஒட்டிய இன்பமாகும். ஐம்பொறி இன்பமாயின், அவ்வப்பொறிகளால் அனுபவிப்பதற்கு உரிய பொருள்கள் இல்லாதபோது இன்பம் உண்டாகாது. ஆழ்வார் எம்பெருமானைக் கண்ணாற்கண்டிலர்; நினைந்து நினைந்தே இன்புற்றனர். ஞானக்கண்ணாற்கண்டு இன்புற்றனர். அதனால், அவருடைய இன்பம் தடையின்றி நிகழ்ந்தது. உலகப்பொருள்களில் இன்பந்தரத் தக்க பல்வேறு பொருள்களால் உண்டாகும் இன்பம் எல்லாம் ஒன்று சேர்ந்தாற்போல, எம்பெருமானை நினைதலால், ஆழ்வார் உள்ளத்தில் இன்பம் உண்டாயிற்று. அத்தகைய அவர் நிலைமையை அவர் பாசுரங்களிற்காணலாம்.

        “தேனும் பாலும் கன்னலும் அமுது மாகித் தித்திப்ப
        யானும் எம்பி ரானையே ஏத்தி னேன்யான் உய்வானே”

என்பதில் ‘தேன், பால், சருக்கரை, அமுதம் ஆகிய எல்லாவற்றின் இன்பமும் எம்பெருமானை நினைதலால் எனக்கு உண்டாகின்றது,’ என்கிறார்; ‘அப்படி இன்பம் உண்டாவதனால் யான் எம்பிரானை எப்போதும் ஏத்துகின்றேன்,’ என்கிறார். ‘அப்படி அப்பெருமானை நினைந்து ஏத்தி இன்பம் அடைவதால்தான் யான் உயிர் வாழ்ந்திருக்கின்றேன்; அப்படி இல்லாவிட்டால் யான் உயிர் வாழ்தல் இயலாது,’ என்கிறார். ‘யான் உய்வான் ஏத்தினேன்,’ என்பது இக்கருத்தைக் காட்டுகின்றது. உய்தல் - நற்கதியடைதல் என்பதன்று இங்கு; உயிர் பிழைத்திருத்தல் என்பது பொருள். ‘மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாத சோறும் நீரும் போல, அப்பெருமானை நினைக்கும் அன்பே, எனக்கு உண்ணும் சோறும் பருகும் நீரும் ஆகும்,’ என்கிறார்.

    ‘உள்ளுந்தோறும் தித்திப்பான்’ என்றும், ‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே’ என்றும் கூறுகின்றார். நினைக்க நினைக்க முன்னைய இன்பம்போல அல்லாமல் புதிய புதிய இன்பமாய் உளது. புதிய புதிய ஆராவமுதம் உண்டாற்போல இன்பம் உண்டாகின்றது என்பது கருத்தாகும்.

    இறைவன் அன்பினால் உண்டாகிய இவ்வின்பம் பொறி உணர்ச்சியாலாயது அன்று; பொறியுணர்ச்சியைக் கடந்து உயிரின்கண் உண்டாகிய இன்பம் என்று அவரே கூறுகின்றார்.