திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
28

பாசுரமும் ஒவ்வொரு மாலை என்க ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு மலர். அச்சொல்லின் பொருள் அம்மலரின் நறுமணம், நறுந்தேன் ஆகும்.

        ‘சொல்லென்னும் பூம்போது தோன்றிப் பொருளென்னும்
        நல்லிருந் தீந்தாது நாறுதலால் - மல்லிகையின்
        வண்டார் கமழ்தாம மன்றே மலையாத

        தண்டாரான் கூடற் றமிழ்?’


என்றது காண்க.

    எம்பெருமானைத் தம் ஞானக்கண்ணாற்கண்டு மகிழ்ந்து சொன்மாலைகள் சொன்னார். கண்டு மகிழ்ந்ததன் பயன் சொன்மாலை சொல்லுதலேயாகும். ‘பண்டை வினையாயின பற்றோடு ஒழிந்தது’ இடைப்பிற வரலாய் வந்த மற்றொரு பயனாகும். அது முக்கியப் பயன் அன்று. இறைவனிடத்து அன்பு செலுத்துதல் நம் கடமை. வினைகள் அவ்விடத்து நிற்க இயலாமல் தாமே ஒழியும்; அல்லது, அவற்றை ஒழித்தல் இறைவன் கடமை. அதனை முக்கியப்பயனாக எண்ணுதல் ஆகாது என்பது அறிஞர் கருத்து

    ஆழ்வார் ஞானக்கண்ணால் எம்பெருமானைக் கண்டு மகிழ்ந்து சொன்மாலைகள் சொன்னார். அதனால், மற்றொரு பயனும் உண்டாயிற்று. அச்சொன்மாலைகள் ஏனைய அடியார்கட்குச் செவியால் நுகரும் அமுதமாயின; அவர்கள்! அச்சொன்மாலைகளாகிய பாசுரங்களைப் பாடிப்பாடி, அவற்றின் பொருளை எண்ணியெண்ணி அமுதம் உண்டாற்போல மகிழ்வார்கள் என்றபடி.

        ‘கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் தன்னை
        வண்டமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.’

(4. 5, 10.)

எனப் பிறிதோரிடத்தும் அருளிச்செய்துள்ளார்.

    இவ்வாறு ஆழ்வார் பாசுரங்கள் கற்பார்க்கு இன்பவெள்ளமாய் இருத்தலால், திருவாய்மொழியை ‘ஆரா அமுதக்கவியாயிரம்’ என்றார் கம்பர்.

    “ஆழ்வார் தம்முடைய கவிகளைத் ‘தொண்டர்க்கு அமுதம்’ என்றும், ‘அடியார்க்கு இன்பமாரி’ என்றும் தாமே புகழ்ந்து கூறுதல் தகுமோ?’ எனின், ஆழ்வார் தம்முடைய ஆற்றலால் தாம் ஒன்றைச் செய்வதாக எண்ணுபவர் அல்லர்; எல்லாம் இறைவன் அருளால் நிகழ்பவை என்றே எண்ணும் இயல்பினர். இறைவனைக் கண்டு மகிழ்ந்ததனாலே சொன்மாலைகள் சொல்லப்பட்டன என்றதனால் இச்சொன்மாலைகள் தோன்றியதற்குக் காரணம் இறைவன் அருளே என்பது பெறப்படும். அப்படி அவன் அருளால் சொல்லப்பட்ட சொன்மாலைகள் அடியார்க்கு அமுதம் போன்றவை என்றால்,