|
அ
அது இறைவனைப்புகழ்ந்ததாகுமேயன்றித்
தம்மைப் புகழ்ந்து கொண்டது? ஆகாதென்க “மயர்வற மதிநல மருளினன்” என்று முதற் பாசுரத்திலே கூறியிருத்தலால்,
ஆழ்வார் பாடிய பாக்களெல்லாம் இறைவனருளாற் பாடப்பட்டவை என்பது பெறப்படும். அன்றியும்,
‘என்நெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூல் இவைமொழிந்து’
10. 6: 4.
‘பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி’
10. 7: 5.
என்பவற்றால் இறைவனே
தம் உள்ளத்திலிருந்து இக்கவிகளைப் பாடுகின்றான் என்பது ஆழ்வார் நினைவாய் உளது. ஆகவே, அக்கவிகளைப்
புகழ்வது அப்பெருமானைப் புகழ்வதேயாகும் எனக் கோடல் தவறாகாது. 7-ஆம் பத்து 9-ஆம் திருவாய்மொழி
முழுவதும் இக் கருத்தையே ஆழ்வார் பலவாறாக வெளியிட்டுள்ளனர். இறைவனைப் பற்றிய மெய்யுணர்வு பெற்ற
பெரியோர் எச்செயலும் இறைவனால் நிகழ்கின்றது என்றெண்ணுவது இயல்பு. அவ்வாறே ஆழ்வாரும் எண்ணினர்.
அன்றியும், இப்பாசுரங்கள் பாடுகின்ற தமக்கு இன்பமளிப்பதை யுணர்ந்த ஆழ்வார்,
அவ்வாறே இறைவனிடத்தன்புகொண்ட ஏனையோர்க்கும் இன்பமளிக்கும் என எண்ணுவது தவறாகாது. தம்
முள்ளத்தில் நிகழும் எண்ணங்களுக்குத் தக்கபடி பிறரை எண்ணுதல் மக்கள் மனவியல்பன்றோ? ஆழ்வார்
எண்ணியபடி அவருடைய சிஷ்யராகிய மதுரகவிகள்,
‘நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்’
என்றும்,
‘குருகூர்நம்பி, பாவி னின்னிசை பாடித் திரிவன்’
என்றும் கூறுதலையும்,
பிற நூல்கள் பாராட்டுதலையும் காண்க.
ஆழ்வார் தமது அன்பு எத்தன்மையது என்பதை அவரே பிறிதோரிடத்துக் கூறியுள்ளனர்.
ஆசையின் தன்மை யாது? (ஆசை-அவா) விரும்பிய பொருளை அனுபவித்து முடிவடையாதது ஆசையாகும். ஒரு
பொருளை அனுபவிக்க அனுபவிக்க ஆசை பெருகுவதல்லது முடிவடையாது. பிற காரணங்களால் அவ்வனுபவத்திற்கு
இடையூறு நிகழ்ந்தால் ஒரு வேளை அவ்வாசை தணிவதல்லது அனுபவித்தலால் முடிவடையாது. அனுபவிக்க அனுபவிக்க,
விறகு மேன்மேலும் இடப்பட்ட நெருப்புப்போல அவ்வாசை பெருகுவதல்லது தணியாது என்பர். (குறள்.
343, உரை.) அதனால், அவ்வாசையை முயன்று தடுத்தே ஒழித்தல் வேண்டும். அதனால், அவ்வாசையின்
தன்மையைக் கூறத் தொடங்கிய திருவள்ளுவர், ‘ஆரா இயற்கை அவா’ என்றார்.
|