|
என
என்ற பாட்டில் வீட்டை (மோக்ஷத்தை) ‘நிலம்’ என்றார். அதனால் வீடு (மோக்ஷம்) ஓருலகம் என்பது
திருவள்ளுவர் கருத்து என்பது தெளிவாகின்றது. இக்கருத்தை அவர்,
‘உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.’
‘யான்என தென்னும் செருக்கறுப்பான்
வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.’
‘ஜயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.’
என்ற பாட்டுகளிலும்
வெளியிட்டுள்ளார். வரனென்னும் வைப்பு - எல்லா உலகத்தினும் மேம்பட்ட வீட்டுலகம்.
வானோர்க்கு உயர்ந்த உலகம் - தேவர்களாலும் அடைய முடியாத வீட்டுலகம். வானம் - வீட்டுலகம் ;
தத்துவஞானம் பெற்றவர் அடையுமிடமாகக் கூறப்பட்டமையால் இங்கு வானம் என்றது, வீட்டுலகம்.
தத்துவ ஞானம் பெற்றவர்கட்கு இவ்வுலகத்தைவிட வீட்டுலகம் அண்மையிலிருப்பதாகத்
தோன்றும்.
‘பொன்னுலகு ஆளீரோ புவனிமுழுது ஆளீரோ’ என்பதனால், தத்துவ ஞானிகட்கு இவ்வுலகத்தினும்
வீடு அண்மையதாகத் தோன்றும் என்ற குறிப்பை ஆழ்வாரும் வெளியிட்டுள்ளனர்.
மோக்ஷம் ஒரு தனியுலகம் என்ற வைணவ சமயக் கொள்கையை ஆழ்வார் பல இடங்களில்
வெளியிட்டுள்ளனர்.
“புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரிற் படிமின்ஓ வாதே.”
என்ற பாசுரத்தில் ‘நலமந்த மில்லதோர் நாடு’ என்றது காண்க. ‘நலம் அந்தமில்லதோர் நாடு’
என்பதில் ‘அந்தம் இல்லது’ என்பதை நலம் நாடு இரண்டிற்கும் சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
அந்தமில்லதோர் நாடு - அழிவில்லாத ஒப்பற்ற நாடு. நலம் அந்தமில்லதோர் நாடு - அழிவில்லாத
இன்பத்தையுடைய நாடு. நலம் - இன்பம். நாடும் அழிவில்லாதது; அதனையடைந்தார்க்கு உண்டாகும் இன்பமும்
அழிவில்லாதது என்றபடி. ‘அந்தமில் இன்பத்து அழிவில் வீடு’ என்பர் பரிமேலழகர். ‘அந்தமில்
பேரின்பம்’ என்றும், ‘வைகுந்தம்’ என்றும் ஆழ்வார் கூறியுள்ளனர்.
|