|
New Page 1
(3) உயிரல்லாத உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் பிரகிருதியே (மூலப்பகுதி)
காரணமாகும். ஆயினும், உலகத்தோற்றத்திற்கு இறைவன் என்ன நிலைமையில் உள்ளான் என்பது பற்றியும்
சமய நூல்கள் வேறு வேறு கருத்துடையன.
ஒரு பொருள் உண்டாவதற்கு மூன்று காரணங்கள் கூறுவதுண்டு. மண் குடமாகச் செய்யப்படுமிடத்து,
மண் முதற்காரணம், (காரியமாக மாறுவது முதற்காரணம்) அக்குடத்தைச் செய்பவன் நிமித்த காரணம்;
அவன் குடத்தைச் செய்வதற்குக் கருவியாய் உள்ள சக்கரம் முதலியவை துணைக்காரணம். உலகத்
தோற்றத்திற்கு இறைவன் இம்மூன்று காரணங்களாகவும் இருக்கின்றான். என்பது வைணவ சமயக் கொள்கையாகும்.
சித்தும் அசித்தும் சூக்ஷ்மமாக (நுண்மையாக) இருக்கும் நிலையில் - உலக உற்பத்திற்குமுன் - அவற்றுக்குள்
இறைவன் அந்தரியாமியாய் நிற்கும் நிலையையே இறைவன் உலகத்திற்கு முதற்காரணம் என்றும், ‘சூக்ஷ்மமாக
(நிண்ணிய நிலையில்) இருக்கும் சித்து அசித்துகளை வெளிப்படுத்தி உலக உற்பத்தி செய்வோம்,’
என்று இறைவன் எண்ணுகிற நிலையையே இறைவன் உலகிற்கு நிமித்த காரணம் என்றும், இறைவனுடைய ஞானம்
சத்தி முதலியவை துணைக்காரணம் என்றும், இம்முறையில் இறைவன் உலக உற்பத்திக்கு மூன்று காரணங்களுமாய்
உள்ளான் என்றும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு இறைவன் உலகிற்கு மூன்று விதக் காரணங்களாகவும் உள்ளான் என்ற
கருத்தை ஆழ்வார் பல இடங்களில் வெளியிட்டுள்ளார்.
“நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற்
சிதையாமே
மனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே”
(1. 5: 2.)
“தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்”
(1. 5: 4.)
“எப்பொருட்கும், வேர் முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற,
கார்முகில்போல் வண்ணன்”
(2. 8: 10.)
என்ற பாசுரங்களிலும்,
வேறு பல பாசுரங்களிலும் காணலாம். இவற்றுள், இறைவன் உலகிற்கு முதற்காரணம் என்பது மிக முக்கியமானது.
பின் காரியப் பொருளாக மாறுவது முதற் காரணம் என்பது பொது விதி. இங்கு இறைவனே இவ்வுலகப்
பொருள்களாக மாறி விட்டானோ என்றால் அங்ஙனமின்று.
|