திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
37

இவ

    இவ்வுலகப் பொருள்கட்கு (உடம்பு உயிர் எல்லாவற்றிற்கும்) அவற்றின் நுண்ணிய நிலை முதற்காரணம். பருப்பொருளாக (ஸ்தூலப் பொருளாக) உள்ள இந்நிலைமை காரியம். இறைவன் நுண்ணிய நிலையிலுள்ள சித்து அசித்துகளுள்ளேயும் அந்தரியாமியாய் உள்ளான்; பருப்பொருளாய் உள்ள இந்நிலையிலும் அந்தரியாமியாய் உள்ளான்; நுண்மையான சித்து அசித்துகளில் இறைவன் அந்தரியாமியாய் இருக்கும் நிலை முதற்காரண நிலையாகும். பருப்பொருளாய் உள்ள சித்து அசித்துக்களில் இறைவன் அந்தரியாமியாய் உள்ள நிலையே காரியநிலையாகும். அதனால், இறைவன் முதற் காரணமாயுள்ள நிலையிலும், காரியமாயுள்ள நிலையிலும், சிறிதும் வேறுபடுவதில்லை. இக்கருத்தை ஆழ்வார் பாசுரத்தில், ‘முதலிற் சிதையாமே’ என்ற தொடர் அழகாக விளக்குகின்றது. தன்னுடைய நிலையில் சிறிதும் வேறுபாடின்றியே எல்லாப்பொருள்கட்கும் வித்தாக உள்ளவன் என்பது கருத்து. அங்ஙனமிருத்தல் இறைவனுடைய ஆற்றல் என்றபடி. இங்ஙனம் இறைவன் உலகிற்கு மூன்று காரணங்களாகவும் இருக்கின்றான் என்ற கருத்து ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்குக் காணப்படுகின்றது.

    (4) வைணவ சமயத்தில் சிறப்பாகச் சில மந்திரங்களைக் கூறி வருகின்றனர். அவற்றுள், இறைவனது நாராயணன் என்னும் பெயரைக்கொண்ட எட்டெழுத்து மந்திரம் ஒன்றாகும் இதனைப் பெரிய திருமந்திரம் எனச் சிறப்பாகக் கூறுவர். இதற்கு விரிவாகப் பொருள் எழுதியுள்ளனர் நம் முன்னோர். நாராயணன் என்பதற்கு ‘நீரையிடமாக உடையவன்’ என்று பொருள் கூறுவது உண்டு. நம்முன்னோர் அப்பொருளைக் கொண்டிலர்.

    நாராயணன் என்பது, நாரம் அயனம் என்னும் இரண்டு சொற்களாலான தொடர். அதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறியுள்ளனர். நாரம் - அழிவில்லாப் பொருள்களின் கூட்டம்; அவையாவன, மூலப்பகுதியின் விகாரமாயுள்ள எல்லாப் பொருள்களும், எல்லா உயிர்களும், மோக்ஷமாகிய பரமபதத்திலுள்ள எல்லாப் பொருள்களுமாம். அயனம் - இடம். நாராயணன் என்னும் இத்தொடர், அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாய் உள்ளவன் என்றும், அழிவில்லாப்பொருள்களை இடமாக உடையவன் என்றும் இருபொருள் கொள்ளுதற்கு உரியது. அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாய் உள்ளவன் என்பது, இறைவன்