திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
41

வருந்தி அன்போடு உணவு சமைத்து வைத்தனள். அவள் காதலன் அவ்வுணவு மிக இனிமையாய் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே உண்டான். அதுகண்ட அத்தலைவியின் மனம் மகிழ்ந்தது! அம்மகிழ்ச்சியால் முகம் மலர்ந்தது. ‘இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே,’ என்று அச்செய்யுள் கூறுகின்றது. இங்கு மனைவிக்கு உண்டான அன்பின் நிலையே ஆழ்வார்க்கு இன்னும் பெருகிய அளவில் இறைவனிடத்துத் தோன்றியுள்ளது எனக் கொள்க. இங்கு மற்றொன்றும் சிந்தித்தல் வேண்டும். தன் காதலி அன்போடு சமைத்த உணவாதலின், அதனைக் கணவன் இனிமையாய் இருக்கிறது என்று மகிழ்ந்து உண்டான்; அதுபோல, இறைவன் ஆழ்வாருடைய அன்பின் பெருக்கைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்திருப்பான் என்று கொள்ளுதல் வேண்டும்.

    “எம்பெருமான் ‘அடியார்க்கு எளியன்,’ என்று, ‘அன்பு வலையில் அகப்படுபவன்,’ என்று உலகம் கூறும். அப்பெருமான் என்னை நினைந்து எனக்கு அருள் செய்யாவிட்டாலும், என் மனம் அவனை மறவாது; என் மனம் அவனையன்றிப் பிறரை நினையாது,” என்று கூறுகின்றார். இந்நிலைமை இறைவனிடத்துக் கொள்ளும் உண்மை அன்பிலும் உலகியல் உண்மைக்காதலிலும் ஒத்திருக்கின்றது.

        ‘கால சக்க ரத்தொடு வெண்சங் கங்கை யேந்தினாய்
        ஞால முற்றும் உண்டுமிழ்ந்த நாரா யணனே என்றென்று
        ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்
        கோல மாம்என் சென்னிக் குள் கமல மன்ன குரைகழலே’

(4. 3: 6.)

இப்பாசுரத்தில், ‘நான் அன்பினால் நெஞ்சுருகி உன் திருப்பெயர்களைக் கூறிப் பலவாறு அழைத்தாலும், நீ வந்து என் ஆசை தீரச் சிறிதும் காட்சி தருகின்றிலை; ஆனாலும், என் தலைக்கு உன் திருவடியே அணியாய் விளங்குவது; என்று கூறுகின்றார். ‘நீ அருள் புரியாவிட்டாலும் நான் உன் திருவடியையே வணங்குவேன்,’ என்பது கருத்து. (‘என் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழல் கோலமாம்,’ என்று கூட்டிப்பொருள் கொள்க.) அஃதாவது, ‘நீ என்னை மறந்தாலும், நான் உன்னை மறவேன்,’ என்றபடி.

        ‘தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
        எம்மை நினையாது விட்டாரே விட்டகல்க
        அம்மென் இணர அடம்புகாள்! அன்னங்காள்!
        நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.’

(கானல் வரி.)

என்ற சிலப்பதிகாரச் செய்யுளின் ஈற்றடியும்,