|
New Page 1
‘அவர்நெஞ்
சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக் காகா தது?’
என்ற திருக்குறளும் ஆழ்வார் பாசுரக் கருத்தோடு ஒத்து விளங்குதல் காண்க. ‘நெஞ்சமே, நம்
தலைவர் நம்மை நினைத்து வந்து அருள் செய்யவில்லை; நீ மட்டும் ஏன் அவரையே நினைக்கின்றாய்?’
என்பது திருக்குறளின் கருத்தாகும்.
இறைவன் தம்மை அன்போடு ஏற்றுக்கொண்டு அருள் செய்யாமை மட்டுமோ, அவன்
தம்மை வெறுத்துக் கூறினாலும், அவ்வெறுப்புரைகளும் தமக்கு இன்பம் பயப்பனவேயாகும் என்று எண்ணுபவர்
ஆழ்வார்.
‘கூவிக் கூவி நெஞ்சுருகிக்
கண்பனி சோர நின்றால்
பாவிநீஎன் றொன்று சொல்லாய் பாவியேன்
காண வந்தே.’
(4. 3: 7.)
என்ற பாசுரப்பகுதி இக்கருத்தைக்
காட்டுதல் முன்னர்க் கூறப் பட்டது.
பொதுவாக, மக்கள் தாங்கள் கருதிய பயனைப்பெற முயல்வார்கள்; அப்பயன்
எவ்வழியாற்கிடைப்பினும், யாராற்கிடைப்பினும் பெறுவார்கள். ஆனால், அறிஞர் தாம் விரும்பும்
பயன் தீய வழியாற்கிடைப்பின், அதனைப் பெற விரும்பமாட்டார்; அன்றியும், தம்மிடத்து விருப்பமில்லாதார்
கொடுத்தாலும் பெற விரும்பமாட்டார். ஆனால் ஆழ்வார் நிலைமை அதுவன்று. ஆழ்வார் விரும்பும்
முக்கியப்பயன், எம்பெருமானிடத்து மாறாத அன்பே. பிறவி நீங்குதலும் மோக்ஷம் அடைதலும் இரண்டாந்தரமானவைகளே.
அவ்விரண்டாந்தரமான பயன்களும் எம்பெருமானால் அல்லது பிறராற்கிடைக்கமாட்டா. ‘நாறிணர்த்
துழாயோன் நல்கி னல்லது, ஏறுதல் எளிதோ வீறுபெறுதுறக்கம்?’ எனப் பரிபாடல் கூறுகிறது. ஆழ்வார்
பாசுரங்களில் இக்கருத்தை ஆங்காங்குக் காணலாம்.
‘ஒருகால் இப்பயன்கள் எம்பெருமான் அல்லாத பிறராற் கிடைக்குமாயினும்,
அன்னார் மிக்க அன்போடு இப்பயன்களைக் கொடுப்பராயினும், இப்பயன்களை அவரால் யான் பெறமாட்டேன்,’
என்கின்றார் ஆழ்வார்.
என்நான் செய்கேன்? யாரே களைகண்? எனைஎன்
செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன்;
கன்னார் மதின்சூழ் குடநதைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்நாள்
சென்னாள் எந்நாள்? அந்நான் உனதாள் பிடித்தே செலக்காணே.
(5. 8: 8.)
|