திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
46

ஒரு வியாக்கியானம் செய்தருளல் வேண்டும் என்று உடையவரை வேண்டிக்கொள்ளல் வேண்டும்,’ என்று பிள்ளானுக்கு விண்ணப்பஞ்செய்ய, பிள்ளானும், உடையவர் பெருங்கூட்டத் திருவோலக்கமாக எழுந்தருளி இருக்குஞ் சமயத்தில், தாளுந்தடக்கையுங் கூப்பி விழுந்து வணங்கி எழுந்து மடியொதுக்கி வாய் புதைத்துப் பணிவோடு நின்று, ‘ஒரு விண்ணப்பம் உண்டு’ என்று சொல்ல, உடையவரும் ‘என்?’ என்று கேட்டருளி. ‘வேதவியாசர் அருளிச் செய்த பிரமசூத்திரத்தின் உண்மைப்பொருளை உலகம் எல்லாம் அறிந்து உய்வு பெறுமாறு அச்சூத்திரங்கட்குத் தேவரீர் ஸ்ரீபாஷ்யம் அருளிச்செய்தது போன்று, திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்கட்கும் வியாக்கியானம் அருளிச்செய்து காத்தருளல் வேண்டும்,’ என்று விண்ணப்பஞ்செய்ய, உடையவரும் திருவுள்ளத்தில் ஆய்ந்தோய்ந்து உணர்ந்து, ‘அப்படியாம்; நாம் அருளிச்செயல்களுக்கு வியாக்கியானம் செய்தால், மந்தமதிகட்கு ‘இதற்கு இத்துணையே பொருள் உள்ளது,’ என்று தோன்றும்; அங்ஙனந் தோன்றுமிடத்து அபசாரமாம்; ஆழ்வார்களுடைய அருளிச்செயல்கட்குப் பொருள் அவரவர்களுடைய அறிவிற்கும் பத்திக்கும் ஈடாகப் பலவாறு1 சுரக்கும்; ஆகையால், நாம் செய்யின் அருளிச்செயல்கட்கு வரம்பு கட்டியது போன்றாகும்; நீர் ஒரு படி திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்யும், என்று நியமித்தருள, பிள்ளானும் உடையவர் நியமனத்தால் திருவாய் மொழிக்கு முதன்முதலில்2 ‘ஆறாயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை இனிதாக உரைத்தருளினார்.

 

1. “உரிக்கின்ற கோடலி னுந்துகந் தம்மென வொன்றும் இன்றி
   விரிக்குந் தொறும்வெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
   தெரிக்கின்ற கோச்சட கோபன்தன் தெய்வக் கவிபுவியில்
   சுரிக்கின்ற நுண்மணல் ஊற்றொக்கும் தோண்டச் சுரத்தலினே.

  “துறவா தவர்க்குந் துறந்தவர்க் குஞ்சொல்ல வேசுரக்கும்
   அறவா அவையிங்குஒர் ஆயிரம்”

(சடகோபரந், 63, 37.)

  என வருகின்ற பாசுரங்களை ஒப்பு நோக்குக.

2. ‘தெள்ளாரும் ஞானத் திருக்குரு கைப்பிரான்
   பிள்ளான் எதிராசர் பேரருளால் - உள்ளாரும்
   அன்புடனே மாறன் மறைப்பொருளை யன்றுரைத்தது
   இன்பமிகும் ஆறா யிரம்.

  என்பது உபதேச ரத்தின மாலை, 41.