திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
47

New Page 1

    ஆறாயிரப்படி : ஆறாயிரம் கிரந்தங்கள் என்னும் அளவினையுடையது என்பது இதன் பொருளாம். ஒற்று ஒழித்து உயிரும் உயிர்மெய்யுமான முப்பத்திரண்டு எழுத்துகளையுடையது ஒரு கிரந்தம் எனப்படும். ‘படி’ என்பது, அளவு என்னும் பொருளையுடையது. ஆக, ஆறாயிரம் கிரந்தங்களையுடையதாக இவ்வியாக்கியானம் செய்யப்பட்டது ஆதலின். ‘ஆறாயிரப்படி’ என்னும் பெயர் பெற்றது. இறைவனைப் பற்றிக் கூறுகின்ற ஸ்ரீ விஷ்ணுபுராணம் ஆறாயிரம் கிரந்தங்களையுடையது ஆதலின், இறைவனைப்பற்றிக் கூறுகின்ற இத்தமிழர் மறைக்கும் அத்தொகை அளவிலேயே இவ்வியாக்கியானத்தை அருளிச்செய்தார். இதனால், இப்பெரியாருடைய செய்ந்நன்றியறிதலும், பெரியார் சென்ற நெறியிலேயே செல்லும் பீடுடைமையும், இத்திருவாய்மொழியில் வைத்துள்ள பெருநன்மதிப்பும் தோன்றும் இனி, கூறப்புகும் ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்ற தொகைகளில் அவரவர் அவ்வவ்வியாக்கியானங்களைச் செய்தமைக்கும் காரணம் இத்திருவாய்மொழியில் வைத்துள்ள பெருநன்மதிப்பே என அறிக. இப்பெயர்கள் எல்லாம் அகநானூறு, புறநானூறு, நாலடி நானூறு என்பன போன்று அளவினாற்பெற்ற பெயர்கள். நூல்களின் அளவையினைக் கிரந்தம் என்னும் அளவுப்பெயரால் அளவிட்டுக் கூறுதல் தமிழிலும் வழக்கு உள்ளது என்பதனை1 யாப்பருங்கலக் காரிகை உரையால் உணர்க.

    ஒன்பதினாயிரப்படி : இதனை அருளிச்செய்தவர் 2நஞ்சீயர். பிரமசூத்திரத்திற்கு இராமாநுசர் அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தங்களையுடையதாதலின், அத்தொகையளவில் ஒன்பதினாயிரப்படி என்னும் இவ்வியாக்கியானம் எழுந்தது.

 

1. “‘இந்நூல் எவ்வளவைத்தோ?’ எனின், ஒத்து வகையால் மூன்றும், காரிகை
   வகையால் நாற்பத்து நான்கும், கிரந்த வகையால் தொண்ணூறு கிரந்தமும்
   இருபத்தெட்டெழுத்தும் எனக்கொள்க. அவற்றுள், ஒரு கிரந்தமாவது,
   ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாகிய முப்பதிரண்டெழுத்தும்
   எனக்கொள்க,” என்பது யாப்பருங்கலக் காரிகைப் பாயிர உரை.

2. ‘தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி
   நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால் - எஞ்சாத
   ஆர்வமுடன் மாறன் மறைப்பொருளை ஆய்ந்துரைத்தது
   ஏர்ஒன் பதினா யிரம்.’

  என்பது உபதேச ரத்தினமாலை, 42.