திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
49

New Page 1

முடித்துக்கொண்டு, தம் திருவாராதனப் பெருமானுக்குச் செய்ய வேண்டுவன அனைத்தும் செய்து, தாம் மாத்திரம் உண்ணாமல் சயனித்துக்கொண்டார். அவ்விரவில், திருவரங்கத்து இறைவன், அவரது கனவில் தோன்றி, ‘ஏன்காணும் வருந்துகிறீர்? உம்முடைய ஆசாரியனை முன்னிட்டுக்கொண்டு நீர் எழுத ஆரம்பித்தால் நாம் உமது நினைவில் இருந்து உம்முடைய ஆசாரியன் சொன்னவற்றுள் ஒன்றும் தவறாது உதகரிப்போம்,’ என்று கூறி மறைந்தனன்.

    மற்றைநாள் சிற்றஞ்சிறுகாலையிலேயே துயில் உணர்ந்து எழுந்த வரதராசர், தம் நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு, அன்று முதல் எழுதத் தொடங்கிச் சில நாளில் ஒம்பதினாயிரப் படியையும் எழுதி முடித்து, தாம் தமிழில் பண்டைய இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்று அவற்றிற்சிறந்த அறிவு படைத்தவராதலின், பற்பல இடங்களில் அவ்வவ்விடங்கட்குச் சேர விசேடப் பொருள்கள் சிலவற்றையும் எழுதிக்கொண்டு சென்று நஞ்சீயர் திருக்கரத்தில் தந்தனர். நஞ்சீயரும், அதனை அவிழ்த்துப் பார்த்த அளவில், அது, தாம் அருளிச்செய்த கட்டளையாய் இருந்தும், பல இடங்களில் சொற்களுக்குத் தகுதியாகப் பல விசேடார்த்தங்கள் எழுதியிருத்தலைக் கண்டு மிகவும் திருவுள்ளம் உவந்து, வரதராசரைப் பார்த்து, ‘இது என்?’ என்று கேட்க, வரதராசரும் அச்சங் கொண்டு ஒன்றும் விண்ணப்பஞ்செய்யாது இருக்க, ‘நீர் அஞ்ச வேண்டா; உண்மையினைச் சொல்லும்,’ என்ன, வரதராசரும் நடந்ததனை விண்ணப்பஞ்செய்ய, கேட்ட நஞ்சீயரும், ‘இவருடைய அறிவின் விசேடம் இருந்தபடி என்னே! இவர் தருப்பையின் நுனி எனக் கூர்த்த அறிவினர்; மிக்க ஆற்றல் வாய்ந்தவர்; மிகவும் நன்றாக எழுதினார்,’ என்று கூறி, சால மனம் உவந்து, வரதராசரைத் தழுவிக்கொண்டு, ‘இவர் நம் பிள்ளை; இவருடைய பெயரும் திருக்கலிகன்றி தாசர்,’ என்று அருளிச்செய்து, தம் அருகிலேயே இவரை வைத்துக்கொண்டார். இவரும், நஞ்சீயரை அல்லது தேவுமற்று அறியாது, இரவினும் பகலினும் முன்னும் பின்னும் அகலாராகி அன்போடு கெழீஇக் குணத்தோடு பழகிக் குறிப்பின்வழி நின்று அடிமை செய்து வர, சீயரும் வேதவேதாந்தங்கள் முதலிய சகல சாஸ்திரங்களின் பொருளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று இவர் உணருமாறு திருவருள் புரிந்தார். நஞ்சீயர் ‘நம் பிள்ளை’