திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
50

என

என்று அருளிச்செய்த அன்று முதற்கொண்டு வரதராசருக்கு ‘நம் பிள்ளை’ என்ற திருப்பெயர் வழங்கலாயிற்று.

    ஆக, இவ்வகையில் தோன்றியது ஒன்பதினாயிரப்படி.

    பன்னீராயிரப்படி : 1இதனை அருளிச்செய்தவர் வாதிகேசரி அழகிய மணவாளச்சீயர்.2 ஸ்ரீபாகவதம் பன்னீராயிரம் கிரந்தங்களையுடையது ஆதலின், அத்தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது.

    இவ்வுரையாசிரியர் இல்லறவாழ்க்கையில் வாழ்ந்து வருகின்ற நாள்களில் ஒரு நாள், ஓரிடத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்களைக் கண்டு, ‘நீங்கள் கற்பது என்?’ என்று கேட்க, இவர்க்கு எழுத்து வாசனையே இல்லை என்பதனை அவர்கள் அறிந்தவர்களாதலின், ‘முசலகிசலயம்3 படிக்கிறோம்,’ என்று கூறினார்கள். இவரும் அதனை யறியாது, ‘இப்படியும் ஒன்றுண்டோ?’ என்று திகைத்து, இதனைத் தமது ஆசாரியரான பெரியவாச்சான் பிள்ளைக்கு விண்ணப்பஞ்செய்ய, கேட்ட பிள்ளை நகைத்து, ‘நீர் கல்வி வாசனையே அறியாதவராதலின், ‘உலக்கை தளிர்க்குமோ? ஆதலால், இதனை நீர் ஏன் கேட்கிறீர்? உமக்கு இதனால் காரியம் யாது?’ என்று எள்ளி நகையாடிக் கூறியுள்ளார்கள்,’ என்று அருளிச்செய்ய, கேட்ட இவரும் பெருநாணங்கொண்டு, பிள்ளை திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து நின்று ‘அடியேன் வித்துவானாகும்படி திருவருள் புரிதல் வேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள, பிள்ளை திருவுள்ளமுவந்து, முப்பத்திரண்டு வயதான இவர்க்குக் கல்வி கற்பித்து, இவரைக் காவியம் நாடகம் அலங்காரம் வியாகரணம் பூர்வ உத்தரமீமாம்சை முதலிய சகல சாஸ்திரங்களிலும் வல்லவராம்படி செய்தருளினார். இவரும், பிள்ளையினுடைய திருவருளால் வித்வசிரோமணியாய் ‘முசலகிசலயம்’ என்ற காவியம் ஒன்றையும் அருளிச்செய்து, முன் தம்மை எள்ளி நகையாடிய அவர்கட்குக் காண்பித்து, அவர்களைத்

 

1. இது இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்னும்
  வியாக்கியானங்கட்குக் காலத்தாற் பிற்பட்டதாயினும், எண் வரிசை நோக்கி
  இங்கு எழுதப்படுகின்றது.

2. ‘அன்போ டழகி யமணவா ளச்சீயர்
   பின்போருங் கற்றறிந்து பேசுகைக்காத் - தம்பெரிய
   போதமுடன் மாறன் மறையின் பொருளுரைத்தது
   ஏதமில்பன் னீரா யிரம்.’

  என்பது உபதேச ரத்தினமாலை, 45.

3. முசல கிசலயம் - உலக்கைக் கொழுந்து; கிசலயம் - தளிர்.