திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
53

New Page 1

சகலபிரமாணதாத்பரியம், உபகார ரத்தினம், கத்தியத் திரயத்துக்கு வியாக்கியானம், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்திரத்திற்கு வியாக்கியானம், சரம ரகஸ்யம், நிகமனப்படி, தனிச்சுலோகி முதலிய வேறு நூல்களும் உரைகளும் இவர் இயற்றியுள்ளார்.

    முப்பத்தாறாயிரப்படி : இதனை எழுதி உபகரித்தவர், வடக்குத் திருவீதிப்பிள்ளை1 ஆவர். பிரமசூத்திரத்திற்கு இராமாநுசர் செய்தருளிய ஸ்ரீபாஷ்யத்தின் ஆழ்பொருள் எல்லாம் விளங்கும் பொருட்டுச் சுதரிசன பட்டர் என்பவர் சுருதப்பிர காசிகை என்னும் நூல் ஒன்றினைச் செய்தார்; அது, முப்பத்தாறாயிரம் கிரந்தங்களையுடையது; அத்தொகையளவில் இவ்வியாக்கியானமும் எழுந்தது.

    இவ்வியாக்கியானத்தை ‘ஈடு’ என்ற பெயராலேயே வழங்குவர். ‘இடு’ என்னும் பகுதி முதல் நீண்டு ‘ஈடு’ என நிற்றலின், இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இதனை, அடுதல் (அடு) என்பது ‘ஆடு’ என வருதல் போலக்கொள்க. ஆடு என்பது ‘ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்’ (புறம். 67) என்ற இடத்துக் கொல்லுதலையும், ‘ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர், பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே’ (புறம். 24), ‘ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி, நீகண் டனையேம் என்றனர்’ (பதிற். 63) என்ற இடங்களில் ஆகு பெயராய் வெற்றியினையும் காட்டுதல் போன்று, ‘ஈடு’ என்பதும் உடலின்மேல் அணிந்து கோடலையும், ஆகுபெயராய் அணிந்துகொள்ளுகின்ற கவசத்தையும் உணர்த்தும், உடலானது குளிர் முதலியவற்றால் வருந்தித் தன்னிலை கெட்டு வேறுபடாவாறு காப்பது கவசம். உடலை மறைத்துக் காப்பதனால் கவசத்திற்கு ‘மெய்ம்மறை’ என்ற பெயரும் உண்டு; ‘குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை’ (பதிற். 21), ‘நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை’ (க்ஷ. 14.) என்ற இடங்களைக் காண்க. ஆக, கவசமானது உடலைக் காத்தல் போன்று இம்முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானமும், கற்போராலும் எழுதுவோராலும்

 

1. ‘தெள்ளியதாம் நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
   வள்ளல் வடக்குத் திருவீதிப் - பிள்ளை இந்த
   நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
   ஈடுமுப்பத் தாறா யிரம்’

  என்பது உபதேச ரத்தினமாலை. 44.