திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
55

இத

இதனை ‘ஈடு’ என்று வழங்கினர் என்று கோடலும் அமையும். இடுதல்-எழுதுதல். இனி, இது சுருதப்பிரகாசிகையினை அளவால் ஒத்து இருத்தலின்,1 இதனை ஈடு என்று வழங்கினர் என்றும், தன்னைக் கற்பார் எல்லாரையும் இறைவனிடத்து ஈடுபடச் செய்வது ஆதலின், ஈடு என வழங்கினர் என்றும் கூறுவதும் உண்டு.

    நம்பிள்ளை தமது பரம கிருபையால் நாடோறும் காலக்ஷேபத்தில் அருளிச்செய்துகொண்டு போந்தவற்றை வடக்குத் திருவீதிப்பிள்ளை எழுதி வைத்தது ஆதலானும், இதற்குப் பிரவர்த்தகர் நம்பிள்ளையே ஆதலாலும் அப்பெரியார் திருப்பெயரைச் சேர்த்து, இதனை ‘நம்பிள்ளை ஈடு’ என்றும் வழங்குவர்.

    வடக்குத் திருவீதிப்பிள்ளை, தம் ஆசாரியரான நம்பிள்ளை ஒரு முறை திருவாய்மொழி சம்பந்தமாக நாடோறும் அருளிச்செய்து கொண்டு வரும் பிரசங்கங்களைக் கேட்டுக் குறிப்பு எடுத்துத் தனியே ஏடுகளில் எழுதிவரலாயினர். அவ்வாறு எடுத்து எழுதி வைத்த குறிப்பே ஈடு முப்பத்தாறாயிரப்படி என்பது. வடக்குத் திருவீதிப்பிள்ளை, ஒரு நாள் இதனைக் கொண்டு சென்று தம் ஆசாரியரான நம்பிள்ளை திருமுன்னர் வைத்தனர்; நம்பிள்ளை ‘இது என்?’ என்று கேட்டருள, வடக்குத் திருவீதிப்பிள்ளை, ‘தேவரீர் இம்முறை திருவாய்மொழிக்கு நிர்வஹித்த கட்டளை,’ என்று விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையும் ஏட்டினை அவிழ்த்துப் பார்த்த அளவில், மிகச் சுருக்கம் இன்றி மிக விரிவும் இன்றி யானை கோலஞ்செய்து புறப்பட்டாற் போன்று கம்பீரமான நடை அழகோடு கூடியதாய், சுருதப் பிரகாசிகை அளவில் முப்பத்தாறாயிரம் கிரந்தங்களோடு கூடியதாய் இருக்கக் கண்டு, மிகவும் திருவுள்ளம் உவந்து, தம் மாணாக்கரைப் பார்த்து, ‘நன்றாக எழுதினீர்! ஆகில், நம்முடைய அனுமதி இன்றியே எழுதினீர். ஆதலால், அதனைத் தாரும்,’ என்று வாங்கிக் கட்டி உள்ளே வைத்தருளினார்.

    இஃது இங்ஙனம் இருக்க, இதனைக் கேள்வியுற்ற நம்பிள்ளையின் மாணாக்கருள் ஒருவரான மாதவப்பெருமாள் என்பவர், அதனை அடைய வேண்டும் என்ற பெருவிருப்பால் திருவரங்க நாதனை வேண்டிக்கொள்ள, அவர்தம் வேண்டுகோட்கு இரங்கிய அரங்க நகரப்பன், ஒரு நாள் தன்னைத் திருவடி தொழவந்த நம்பிள்ளையை அர்ச்சகர் மூலமாகப் பார்த்தருளி, ‘நீர் ஈடு முப்பத்தாறாயிரப்படியை மாதவப்பெருமாளுக்குப் பிரசாதியும்,’ என்று கட்டளையிட, நம்

 

1. ‘ஈடும் எடுப்பும்இல் ஈசன்’ (திருவாய். 1. 6: 3.) என்ற இடத்து ஈடு என்ற
  சொல் ஒப்பு என்ற பொருளில் வந்திருத்தல் காண்க.