திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
56

பிள்ளையும், மகாப்பிரசாதம் என்று பெருமான் கட்டளையைத் தலைமேற் கொண்டு, பின்னர், பெருமானைத் திருவடி தொழுது திருவருள் பெற்றுக் கோயிலினின்றும் புறப்பட்டுத் தம் திருமாளிகைக்கு எழுந்தருளித்தம் மாணாக்கரான மாதவப்பெருமாள்1 என்னும் சிறியாழ்வான் அப்பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரத்தைக் கொடுத்து, அவரை வாழ்வித்து, அவர் மூலமாக உலகையும் வாழ்வித்தருளினார்.

    திருவாய்மொழி ‘பகவத்பிரபந்தம்’ என்று கூறப்படுவது போன்று, இவ்வியாக்கியானங்களும் ‘பகவத்விஷயம்’ என்றே கூறப்படும். ‘ஆயின், வேத இதிகாச புராணங்கள் அனைத்தும் பகவானைப் பற்றிப் பேசுகின்றவையாய் இருக்க, இவற்றிற்கு மட்டும் பகவத்விஷயம் என்று பெயர் வைத்த காரணம் யாது?’ எனின், வேதங்கள் முக்குணங்களோடு கூடியவையாய் ‘ஜ்யோதிஷ்டோமம்’ முதலிய நிலையற்ற கர்மங்களையும் ‘சுவர்க்கம்’ முதலான மிகச்சிறிய புருஷார்த்தங்களையும் பரக்கப் பேசுகின்றன. உபநிடதங்கள் பேதவாக்கியத்தாலும், அபேதவாக்கியத்தாலும் தத்துவங்களைக் கூறுகின்றன. ஆதலின், ‘பொருள் ஒன்றோ, பலவோ!’ என்று ஐயம் தோன்றுதற்கு இடம் தருகின்றன. ஸ்ரீ வான்மீகி பகவான், ஸ்ரீ ராம காதை என்று தொடங்கிக் கங்கையின் தோற்றம் முதலிய வேறு பொருள்களைப் பற்றிய வரலாறுகளையும் பேசினார். ‘நாராயண காதை கூறத் தொடங்குகிறேன்,’ என்று கூறிய வியாசரும், வீடுமன் முதலிய அரசர்களுடைய பிறப்பு முதலாயவற்றையும் பேசினர்.

    இத்திருவாய்மொழியும் இதன் வியாக்கியானங்களும், அத்தகைய குற்றம் ஒன்றும் இல்லாமல், ‘திருமாலவன் கவி’ (திருவிருத். 48.) என்கிறபடியே, முற்றும் பகவான் விஷயமாகவே இருக்கையால், இவற்றிற்கே பகவத் விஷயம் என்ற சிறப்புப் பெயரை நம் பெருமக்கள் வழங்கினார்கள். ‘மண்ணாடிய சஹ்யஜலம் தோதவத்திச் சங்கணித் துறையில் துகில் வண்ணத் தெண்ணீராய்,

 

1. ‘சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளைஎழு
  தேரார் தமிழ்வேதத் தீடுதனைத் - தாருமென
  வாங்கிமுன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
  தாங்கொடுத்தார் பின்னதனைத் தான்.’

  என்பது உபதேச ரத்தினமாலை, 48.