திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
6

அடியேன் எழுதுதல் அடியேற்கே நகையினை விளைக்கின்றது ! காணும் உலகு இன்று என் சொலாது ! ஆயின், எம் குலக்கொழுந்தாகிய ஆழ்வாருடைய திருவருளும், அடியேனுக்குப் பெரிய தந்தையாரான ஸ்ரீமத். புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி ஸ்வாமிகளுடைய திருவருளும் இருபாலும் நின்று எழுதுவிக்க, ‘இருசிறகு எழுப்ப எழும் உடலது போல்’ அடியேன் இதனை எழுதத் தொடங்கினேன். அடியேன் செய்தது யாதொன்றுமின்று. சில உளவாயின், அவை இதிற்காணப்படும் சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமேயாகும்.

    பெரியோர் சிலர் விரும்பியவாறு ஒவ்வொரு பாசுரத்துக்கும் சுருக்கமாகச் சொற்பொருள் விளங்குமாறு பாசுரங்கட்குப் பிண்டப் பொருளும், அதன்பின் இன்றியமையாத இடங்களில் சில இலக்கணக் குறிப்புகளும், வேறு நூல்களிலிருந்து ஒப்புமைப்பகுதிகளும் எழுதப் பட்டிருக்கின்றன. அவற்றின்பின் ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானம் வேண்டியவளவு தமிழ் நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. ஆங்காங்கு வருகின்ற மேற்கோள் வடமொழிச் சுலோகங்களை எழுதாமல், அவற்றின் பிண்டப்பொருள் மட்டும் எழுதப்பட்டும், அறியப்பட்டவளவில் மேற்கோள் விளக்கமும் ஆங்காங்கு அடியிலே கொடுக்கப்பட்டும் இருக்கின்றன. பெரும்பாலும் வடசொற்களை நீக்கி அவற்றிற்குத் தகுதியான தமிழ்ச்சொற்கள் எழுதப்பட்டும், மரபு பற்றி வரும் வடசொற்கள் சிலவற்றை அங்ஙனமே வைத்துக்கொண்டு அவற்றிற்கு அடியில் குறிப்புரை எழுதப்பட்டுமுள்ளன.

    பொருள் எளிதில் விளங்குதற்கேற்றவாறு ஒரு சில இடங்களில் வியாக்கியான வாக்கியங்களை முன்னும் பின்னும் மாற்றியமைத்திருக்கின்றேன். வியாக்கியானத்தில் சொல்லாற்றல் பொருளாற்றல்களால் கிடைக்கும் தொனிப்பொருளை இவ்வுரையில் அவ்வளவாக அறிய இயலாது. மணவாள மாமுனிகள் அருளிச்செய்ததும், ஒவ்வொரு திருப்பதிகத்தின் கருத்தையும் சுருக்கமாகத் தெரிவிப்பதுமான திருவாய்மொழி நூற்றந்தாதியின் பாசுரங்களை ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் சேர்த்திருக்கின்றேன். வியாக்கியானத்தில் இடையிடையே வருகின்ற ஐதிஹ்யங்களும், பெரியார்களுடைய நிர்வாஹங்களும், உவமைகளும் ஒரு சேரத் தொகுத்துத் தனித்தனியே ஈற்றில் அநுபந்தமாகத் தரப்பட்டிருக்கின்றன. ஆங்