பக்கம் எண் :


132 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
“விரிந்த உலகத்தால் பலவுயிர்களையும் காக்கக் கடவியனாய், முன்னைய
மனுவே இவர் எனச் சொல்லப் பெறுகின்ற, எனது அரசர் பெருமானுக்கு
உலகிலே இல்லாத இப்பெரும் பழிவந்து சேரும்படி நான் அவருக்கு ஒரு
மகனாய்ப் பிறந்தேனே“ என்று சொல்வானாய் - என்பான் - சென்றான்
என்று வரும்பாட்டின் வினைமுற்றொடு முடிக்க.

     (வி-ரை.) சோரும் - மனத்தின் செய்கை; இரங்கி நிற்கும் -
உடம்பின் செய்கை; என்பான் - வாக்கின் செய்கை. எனவே, பசுவின
வருத்தத்தை மனம் வாக்குக் காயம் எனும் முக்கரணங்களாலும் அரசு
மைந்தனும் அடைந்தனன் என்க.

     மலர்தலை உலகம் காக்கும்
- “மன்னுயிருக் கெல்லாம்
...பெருங்காவல்“ என்று மேலே காட்டிய அரசனது குறிக்கோளாகிய
உள்ளக்கிடையை இங்குக் கூறிவாறு.

     மனு எனும் - 100-ம் பாட்டில் “மனுப்பெற்ற நீதி“ என்றது.

     கோமான் - தந்தை என்னாது கோமான் என்றது பசுவதைப் பழிக்குத்
தான் காரணமாயினமையின் தனது தந்தை என்று கூறல் தகுதியின்று எனக்
கருதியமை குறித்தது. கோமான் - பசுவைப் பாதுகாப்பவன் என்ற குறிப்புங்
காண்க.

     உலகில் இப்பழி - பின்னர் 36-வது திருப்பாட்டிற் கூறுகின்றபடி
அறங்காத்தலினால், இதுவரை இல்லாதாகிய இந்தப்பழி, தன்னாற்
காக்கப்பெற்றதும் நீதி மனுஎன்று பேர்பெறுவதும் ஆகிய உலகிலே,
அதுமாறிப் பசுவதைத்த பழியாகிய இந்தப் பெரும் பழி; ஆனால் இது
அரசனைச் சேர்வதற்கில்லை எனும் பொருள் பெற உலகு - இல் - பழி
என்றதும் குறிப்பு.

     வந்தெய்த - அப்பழி வருதற்குக் காரணமாகிய செயல் ஒன்றும் தான்
செய்யாதிருந்தும், பழி பாவம் வாராதுகாக்கும் காவலும் நீதியும் புண்ணியமும்
செய்திருந்தும், பழிதானே வலிய (துள்ளிப்போந்த வழியே) வந்து - புகுந்து -
சேர.

     பிறந்தவா
- பிறந்தபடி. பிறந்ததனைவிடப் பிறவாமலே இருந்தால்
நன்றுஎன்க.

     ஒருவன் - இப்பழிநீக்கப் பசுஉறுதுயர் தானும்எய்தத், தன்னை அரசன்
தேர்க்காலில் ஊரும்; ஊர்ந்துவிட்டபின் தூயவனாக்கும் மரபுக்குரிய மைந்தன்
வேறில்லையே - என்று கவன்று ஒருவன் என்றான்.

     என்பான்
- என்பானாகி. என்று சொல்லிக்கொண்டே (சென்றான்)
என்க.

     இம்மைந்தன், அரசனைப் போலவே, தன்னுயிர்க் கிரங்காது
பசுவுக்குங்கன்றுக்கும் இரங்கித், தன் பொருட்டு வருந்தாது அரசன் புகழுக்குக்
குறைவருமென்று வருந்தினான். இதனையே முன்னர்த் “தந்தை
காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி“ என்று காட்டினார். “நிற்க அதற்குத்
தக“ என்றதற்கு இவன் இலக்கியமாயினன்.

     பிறந்தவாறொருவன்
- என்பதும் பாடம்.  25

111. வந்தவிப் பழியை மாற்றும் வகையினை மறைநூல்
                                 வாய்மை
 
  அந்தணர் விதித்த வாற்றா லாற்றுவ தறமே
                                 யாகில்
எந்தையீ தறியா முன்ன மியற்றுவ னென்று
                                 மைந்தன்
சிந்தைவெந் துயரந் தீர்ப்பான் றிருமறை யவர்முன்
                                சென்றான்.
26

     (இ-ள்.) வந்த...இயற்றுவன் என்று - இவ்வாறு வந்துபுகுந்த இப்பழியை
மாற்றும் வகையை வேதம் முதலிய நூல்களும், அவற்றின்படி ஒழுகும்
வாய்மை அந்தணர்களும் விதிக்கின்றபடி செய்வது தருமமாயிருக்குமானால்
எனது தந்தை இதனைத் தெரிவதற்கு முன்னமே அது செய்து முடிப்பன் -
என்று துணிந்து; மைந்தன்...சென்றான் - அரசகுமாரன் மனத்தின் மிகுந்த
வருத்தத்தைத் தீர்க்கும்படி அந்தணர்களிடம் போயினான்.