பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு133

Periya Puranam
     (வி-ரை.) வந்த இப்பழி - மேற்பாட்டிலே ‘வந்தெய்த' என்றதையே
தொடர்ந்து கொண்டதாம். உரை அங்குக் காண்க.

     மறைநூல் வாய்மை அந்தணர் விதித்த ஆற்றால் - வேதங்களும்
அவற்றின் அங்கமாகிய நீதிநூல் முதலியவும், அவற்றின் வழியே ஒழுகி
அவற்றின் உண்மையை எடுத்துக் கூறும் அந்தணர்களும், விதிக்கின்றபடி.
அந்தணர் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அறவோர்.
பிறிதொரு உயிர்க்கு வந்த துன்பத்தைப் போக்கும் வழி அவ்வுயிர்களிடத்தே
செவ்விய தண்ணளிபூண்டு ஒழுகுபவர்க்கே கைவருமாதலால் அந்தணர்
என்றார். பின்னர், அரசன், அவர்கள் அந்தணர்கள் ஆகாது மறையவர்களே
ஆகி நின்றார்கள் - என்று முடித்துக்காட்டும் குறிப்புப் பெறும் பொருட்டுப்
பின்னர் “மறையவர் முன்“ - என்றார். நூலும் அந்தணரும் விதித்த -
உம்மை விரிக்க.

     அறமேயாகில் - அவ்வாறு விதித்தபடி மாற்றும்வகை செய்வது
அறமாகுமோ? தீர்வுமாகுமோ? என்று ஐயப்பட்டானாதலின் அறமேயாகில்
என்றான். ஆகில் - இது அறநூல் சம்மதிக்குமாகில், நூலின்படி
அந்தணர்விதிப்பாராகில் அது கொண்டு இப்பழி தீருமாகில் - என்க.

     மாற்றும் வகை
- அறநூல் விதிவழி செய்யும் கழுவாய். இதனைப்
பிராயச் சித்தம் என்பர். பசுக் கொலைக்குக் கழுவாய், இறந்த பசுவின்
தோலைப் போர்த்துக் கொண்டு, ஒருவேளை உணவு உண்டு, அப்பசு
மந்தையில் ஆறு மாதம் வாசம் செய்து, அப்பசுக் கூட்டத்தைக் காப்பாற்றி
வருதல் என்பர்.

     அறியா முன்னம் இயற்றுவன் - அரசன் அறிந்தால் வருந்துவன்
ஆதலின் அவ்வருத்தம் நிகழாதிருக்க முன்னம் என்றான். அன்றியும் அவன்
அறிந்தபின் தீர்வு தேடிச் செய்தற்குக் காலம் நீடிக்குமாதலின், காலமும்
பழியும் நீடிக்காதிருக்கும் பொருட்டு முன்னம் என்றான் என்றலுமாம்.

     மறையவர் முன் சென்றான்
- தானே தெய்வக்கலை பல திருந்த
ஓதியவனாயினும் அறிவழிந்து வீழ்ந்தமையாலும், தன்காரியமே யாதலின் பிறர்
சொன்னபடி நிற்றலே பழிநிகழாது காக்கக் காரணமாகின்றமையாலும்,
மறையோர் முன் சென்றான்.

     துயரம் - மேலே குறித்தபடி தன் மனத் துயரமும், அரசனறிந்தால்
அவனுக்குளதாம் துயரமும். தீர்ப்பான் - தீர்ப்பதற்கு வினையெச்சம். 26

112. தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா
                                    தாகி
 
  முன்னொருப் புயிர்த்து விம்மி முகத்தினிற்
                            கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின்பொற்
                           கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினாற்
                          புடைத்த தன்றே.
27

     (இ-ள்.) தன்...தரியாதாகி - தன் உயிர்போன்ற கன்று இறந்துபடப் பசு
அத் துயரத்தைத் தாங்க முடியாதாகி; முன்...வார - முன்னே நெருப்பு
வீசுதல்போலப் பெருமூச்சுவிட்டு, விம்மிக் கொண்டு, முகத்திலே கண்ணீர்
பெருக, (எழுந்து) நடந்து சென்று; மன்னுயிர்...புடைத்தது - உலகத்தில்
நிலைபெற்ற எல்லா உயிர்களையும் காக்கின்ற செங்கோன்மை வல்ல மனு
அரசனது அழகிய அரண்மனைவாயிலில் கட்டிய அழகியமணியைத் தன்
கொம்பினால் அசைத்து அடித்தது; அன்றே - அப்போதே.

     (வி-ரை.) ஆ - தரியாது - உயிர்த்து - விம்மி - சென்று - மணியைப்
- புடைத்தது.

     வீய - இறந்துபட. “உம்பரின் அடைய“ 108.