பக்கம் எண் :


158 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
றெழுந்தார்கள். எழுதலும்; இன்ன...வேந்தனும் - அதுகண்ட அரசனும்தான்
இன்ன தன்மையை யடைந்தான் என்று தானே அறியாதபடி ஆயினான்;
யார்க்கும்...உளதோ? - (இவ்வாறும் நிகழுமோ எனின்); எல்லார்க்கும்
முன்னவனாகிய இறைவனே முன்னின்றால் முடியாத பொருளும் உண்டோ?
இல்லை என்றபடி.

     (வி-ரை.) அந்நிலை - காலத்தைக் குறித்தது. அவ்வரசன் - அருள்
பெற்றவனாகிய அந்த அரசன் என்று சுட்டிக் காட்டியபடி. அரசன்
மன்னுரிமைத் தனிக்கன்று அரசனது அரசப் பட்டத்துக்கு உரிய ஒப்பற்ற
மகன். மன் - அரசாங்கமாகிய நிலை. பசுக்கன்றினுக் கிணையாகக்கொண்டு
முறை செய்யப்பட்டானாதலின் கன்று என்றார்.

     இன்னபரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் - இத்தன்மைத்
தென்று அறிய முடியாத மகிழ்ச்சி என்க. இன்ன தன்மையன்
என்றறியொண்ணா எம்மான் தந்ததாதலின் அந்த அருளும் - அதன்
விளைவும் - அதனால் உளதாம் மகிழ்ச்சியும் - அவ்வாறேயாம் என்க. முதல்
மகிழ்ச்சி ஆன்கன்று உயிர்பெற்று எழுந்ததனாலும் அதனாற் பசுவினது இடர்
நீங்கியதனாலும் ஆம் - பின்னர் மகனும் மந்திரியும் உடன் எழுந்ததனால்
ஆம். இவை இரண்டும் இன்ன காரணத்தாலாயின என்று அருளை
அளந்தறிய இயலாமை இவ்வாறு கூறினார்.

     வேந்தனும்
- சிறப்பும்மை. எச்சவும்மையுமாம். இவ்வினை
விளைந்தவா - செவ்விது என் செங்கோல்! - என் நெறி நன்றால்! -
என்செய்தாற்றீரும்! - என்று பலவும் எண்ணி இரங்கியும் ஏங்கியும்
தெருமந்தும் தெளியாதும் சோர்ந்தும் துயருற்ற அரசனும் இப்போது அவை
தீர்ந்து மகிழ்வுற்றான் - அது இன்ன பரிசாயிற்று என்று அவனும்
தெளியுமாறில்லை என்க. சுற்றும் இருந்த பிறர் அறிந்திலாமையுடன் அரசனும்
அறிந்திலன் என்றுரைப்பினும் ஆம்.

     பசு உறு பேரிடர் தானும் தாங்குவது தருமம் - என்று துணிந்து
அத்துயர் தாங்குதற்காகச் செய்த செயலே, அதற்கு மாறாக அதனாலே
அரசனைப் பசுத்தாங்கும் பெரிய இன்பந் தாங்குமாறு செய்தமையின், அதன்
பரிசு அதற்கரியதாயிற்று.

     உடன் எழலும் - பசுக் கன்றும் அரசன் மகனும் மந்திரியும் ஒருங்கே
உயிர்பெற்றெழுந்தனர். பசுவின் மனமழியும் துயரகற்ற மாட்டாது வருந்திய
மன்னவன் அத்துயரகன்ற பின்னரே மகிழ்ச்சியடைவான் ஆதலினாலும், தீ
நீங்காதவழிப் புகையும் நீங்காமைபோலப், பசுக்கன்று உயிர்பெறாதவழிப்
பசுத்துயரும் அது காரணமாய்வந்த அரசன் துயரும் நீங்கும் வழியில்லை
ஆதலினாலும், இச்சரித நிகழ்ச்சிகள் யாவைக்கும் காரணமாய் முன் நிகழ்ந்தது
ஆன்கன்று உயிர் துறந்ததேயாதலாலும், அது உயிர்பெற்றெழுதலை
முதலிற்கூறினார். அரசனாணையின்படி அரச குமாரனை உயிர்நீங்கச்
செய்வதை அஞ்சியே மந்திரி உயிர் நீத்தமையால் அவனை உயிருடன் அவன்
காணும் பொருட்டு மகன் உயிர் பெற்றெழுந்ததை மந்திரி எழுவதற்கு முன்
வைத்தோதினார். அரசகுமாரன் உயிர் நீத்தது காலத்தாற் பிந்தியதாயினும்,
அவனுயிரைப்பற்றிய நோக்கமே மந்திரி உயிர் நீத்ததற்குக் காரணமாய்
முன்னின்றதென்க. இம்மூன்று எழுதல்களும் (ஒருங்கே) உடன்
நிகழ்ந்தனவெனினும் காரணகாரிய முறையினால் இம்முறையிலே சொல்லப்
பெற்றன. உடன் எழல் - என்பதற்கு உயிருடன் எழுதல் என்று
கூறுவாருமுளர்.

     யார்க்கும் முன்னவனே
- எல்லாம் வல்ல இறைவனாகிய
சிவபெருமான் முன்னவன் என்றது இறைமைக் குணங்களால்
முதல்வனாதலைக் குறித்தது. காலத்தால் முந்தியவன் என்று பொருள்
கொள்ளின் அது பதி பசு பாசம் என்ற மூன்று பொருள்களும் அநாதியே
உள்ளன எனும் உண்மைக்கு மாறுபடுவதாம்.

     யார்க்கும் - எல்லா ஆன்ம வருக்கங்களுக்கும். இவை எல்லாம்
பசுவர்க்கத்துட்பட்டு அளவுபட்ட ஆற்றலே உடையன; இச்செயல் அவை
எவையும்