பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு163

Periya Puranam
     புனையும் உரை - புனைதல் - அணிசெய்தல். அதாவது அழகு
செய்யும் உரை. புனைந்துரை அல்லது பாயிரமாய்ச் சொல்லும் கூற்று
என்றலுமாம்.

     புகலலாம் தகைமையதோ - ஓகாரம் எதிர் மறைப்பொருளில் வந்தது.
புகலுந் தகைமையது அல்ல என்றபடி. இதுவரை சொல்லிவந்த அளவிலே
திருவாரூர்ச் சிறப்புக்கள் அடங்கிவிடுவன அல்ல. அவை முற்றும் சொல்ல
நம்மளவில் அடங்காது என்று எச்சரித்து ஆசிரியர் இப்பகுதியை
முடித்துக்காட்டிய படியாம். பின்னரும் இவ்வாறு முடித்துக் கூறும்
இடங்களிலெல்லாம் இக்கருத்தே கொள்க.

     அனையதனுக்கு - அனைய அதனுக்கு - அத்தன்மைத்தாகிய
மூதூருக்கு என்க அனைய - என்றது முன்னே கூறிய சிறப்புக்களையெல்லாம்
நினைவுகூர்தற் பொருட்டு.

     அகமலர் - மலரின் உட்பகுதி. மேலே வண்தாமரைபோல் மலர்ந்து (12)
என்று உவமித்தற்கேற்ப இங்கு அகமலர் என்றார். தாமரையின் பொகுட்டே
அதன் உயிர்போன்ற உட்பகுதி. அதைச் சுற்றியே கேசரம், இதழ், புல்லிதழ்,
முதலியன காணப்பெறும். அதுபோலத் திருவாரூரின் நடுவில் அறவனார்
பூங்கோயில் உளது. திருக்கோயில் வரை உள்ள சுற்றுவீதி முதலியவைகளை
முன்னர் 12-ம் திருப்பாட்டுவரை வரிசைப் படுத்தி உரைத்தமை நினைவு கூர்க.
அதனுக்கு - அதனிடத்து எனக்கொண்டு, அகமலர் - (எல்லாரது) அகத்தில்
(உள்ளத்தில்) மலர்வது என்றும், அகமாகிய மலர் என்றும்கூறுவர். ‘மேதினிக்
காதன்மங்கை இதயகமலமாம்' என்றதும் காண்க.

     பூங்கோயில் - அறவனார் எழுந்தருளிய பூங்கோயில் அதனுக்கு
அகமலராம் என முடிக்க. இது வரும்பகுதியாகிய திருக்கூட்டச் சிறப்புக்குத்
தோற்றுவாய் செய்தவாறு. அப்பகுதி முதற்பாட்டில் ‘பூங்கோயில்' என்று
தொடங்கிக் கொண்டதுங் காண்க.

     சுருக்கம் :- சோழ நாட்டுப் பல நகரங்களிலும் திருவாரூர் மிகப்
பழமையான சிறந்த நகரம். அதிற் பல மாட மாளிகைகள் உண்டு; அவற்றில்
ஒன்று பரவையார் திரு அவதாரஞ்செய்த மாளிகை. அதன் திருவீதி இறைவன்
ஒருகால் இருகால் தூது நடந்து சென்ற சிறப்புடையது. மிக மகிழ்ச்சியுடன்
மக்கள் வாழும் இடங்களும் வரிசையாய் அமைவன.

     இந்நகரை ஒரு காலத்தில் மனுச்சோழர் அரசுபுரிந்தனர். அவர் எல்லா
உயிர்களையும் தமது கண்ணையும் உயிரையும் போலக் காத்தலையே
கருத்தாகக்கொண்டு அரசாண்டு வந்தார். கோயில்களுக்கு ஒழுங்காய்ப் பூசை
நியமித்து நீதியரசு செய்து வந்தனர். அவர் ஆட்சியில் குடிகள்
அறங்களின்வழி ஒழுகிப் பொருள் இன்பங்களிலும் சிறந்து மகிழ்ந்து வந்தனர்.
அவ்வரசனுக்கு ஒரே மகன். அவன் அறிவிலும் கல்வி ஒழுக்கங்களிலும்
சிறந்து இளவரசப் பருவம் அடைந்தான். அவன் ஒரு நாள் சேனை சூழத்
தேர்மேலேறி அரசுலாந் தெருவில் உலாப்போந்தான். ஓர் இளைய பசுக்கன்று
துள்ளிப் புகுந்து அவனது தேர்க்காலினுட்பட்டு இறந்தது. தாய்ப்பசு மிகவும்
வருந்தி அரசன் அரண்மனையின் ஆராய்ச்சிமணியை அடித்தது. அரசன்
கண்டு வருந்தினான். மந்திரிகள், இதற்காகப் பசுவதை செய்தார்க்குத் தரும
நூல்வழியே செய்யும் பிராயச்சித்தம் செய்விக்க வேண்டும் என்றார்கள்.
அரசன் அதற்கிசையாது “பசுவின் துன்பத்தை நீக்கமுடியாதநான் அதன்
துன்பத்தையே தாங்கிப் பங்கிட்டுக் கொள்வேன்“ என்று துணிந்து
தீர்மானித்து மகனை அவ்வீதியிலே கிடத்தி அவன்மார்பிலே தனது தேரை
ஊர்ந்துவிட்டான். உடனே இறைவன் வெளிப்பட்டு அரசனுக்குக் காட்சி
கொடுத்து அருள் செய்தார். இறந்த பசுக்கன்றும் அரச குமாரனும்,
அவனுக்காக முன்னமே தன் உயிர்விட்ட மந்திரியும் உயிர் பெற்று
எழுந்தார்கள். எங்கும் பெருமகிழ்ச்சி பொங்கியது. இவ்வாறு இறைவன்
நீதிமுறையிலே அருள்செய்து நிற்கும் அனேகம் பெருமைகளை உடையது
திருவாரூர்.