| 164 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
இறைவன்
நிலைத்து எழுந்தருளி யிருக்கும் பூங்கோயில் திருவாரூர்த்
திருநகரத்தின் நடுவிற் சிறந்து விளங்கும்.
தலவிசேடம் :-
திருவாரூர் - இத்தலம் (S.I.Ry.) தென்னிந்திய
இருப்புப் பாதையில் திருவாரூர் சந்தி - என்ற நிலையத்திலிருந்து வடக்கே
ஒரு நாழிகையளவில் உள்ளது. கமலாலயம் என்னும் சிறந்த தீர்த்தக்குளம்
கோயிலுக்கு மேற்கில் உள்ளது. கோயில் பூங்கோயில் என்று பேர் பெறும்.
நமிநத்தியடிகள் நாயனார் நீரால் விளக்கெரித்த தலமாகிய “திருவாரூர்
அரநெறி“ என்ற பாடல் பெற்ற தலம் இக்கோயிலுக்குள்ளே, தென்கீழ்த்
திசையில் வேறாக உள்ளது. சுவாமி - வன்மீக
நாதர் (புற்றிடங்கொண்டார்) -
திருமூலட்டான நாதர்; தேவியார் - அல்லியம்
பூங்கோதையம்மை -
கமலாம்பாள். கமலாம்பாள் சந்நிதி வேறு. இவ்வாலயம் வடக்குப் பிரகாரத்தில்
உள்ளது. இத்தலத்திற்கு 34 தேவாரப் பதிகங்களும், ஏனைய திருமுறைகளில்
பல பாடல்களும் உண்டு. தேவாசிரிய மண்டபம் அடியார் கூட்டம்
நிறைந்துள்ளது. இது திருமுன்றிலில் வெளிப்புறம் உள்ளது. இதனை
ஆயிரக்கால் மண்டபம் என்பர். இதிலேதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
அடியார்களை வணங்கி இப்புராணத்திற்கு மூலமாகிய திருத்தொண்டத்
தொகை அருளினார். திருவாரூர் அடியார் கூட்டத்தின் பெருமை பெற்றது.
‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்குமடியேன்'
என்பது தமிழ்வேதம்.
ஆசாரியர்கள் மூவரும் இத்தலத்தை முதலிற் காணும்போது அடியார்களைத்
துதித்தனர். ‘வருந்தும் போதெனை வாடல் எனுங் கொலோ' என்று திருஞான
சம்பந்த சுவாமிகளும், ‘நமக்குண்டு கொல்லோ....தொண்டர்க்குத் தொண்டராம்
புண்ணியமே' என்று அப்பர்சுவாமிகளும், ‘அவர் எம்மையும் ஆள்வரோ
கேளீர்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், தம்மை எதிர்கொள்ள வந்த
அடியார்களை வணங்கித் துதித்துப், பின்னரே திருநகரத்திற் புகுந்தார்கள்
என்று அவரவர் சரிதங்களாற் பின்னர் அறிகின்றோம். இங்கு இலக்குமியும்
தேவர்களும் புசித்துப்பேறு பெற்றனர். பஞ்ச பூதத்தலங்களில் இது
பிருதிவித்தலம். விராட் புருட உருவத்தில் மூலதாரத் தலமுமாம். தியாகேசர்
எழுந்தருளிய சத்த விடங்கத்தலங்களில் முதன்மையானது1. இதில் முன்
காலத்துத் திருவாதிரைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
அதனை அப்பர்சுவாமிகள் தரிசித்து அதன் சிறப்பைத் திருஞானசம்பந்த
சுவாமிகளுக்கு ஒருதனித் திருப்பதிகத்தினாலே கூறியருளினார். சுந்தரமூர்த்தி
சுாமிகள் பொருட்டு இறைவன் பல அற்புதங்கள் நடத்தியருளிய தலம்.
கழறிற்றறிவார் நாயனார் எழுந்தருளிய பெருமையும்,
விறன் மிண்டர்
பத்திமையின் விறலும், நமிநந்தியடிகள் நீரால் விளக்கெரித்த திறலும்,
தண்டியடிகள் கமலாலயக் குளத்தைப் பெருக்கித் திருப்பணிசெய்து
கண்பெற்றுச் சமணரைக் கலங்கங் கண்ட வெற்றியும், திருப்பூ
மண்டபத்திருந்த பூவினை மோந்தமை பற்றிக் கழற்சிங்க நாயனார் தமது
தேவியாரது கையைத் தடிந்த உறைப்பும், செருத்துணை நாயனார்
அவ்வம்மையாரது மூக்கை வார்ந்த வீரமும், பிறவும் அவ்வப் புராணங்களில்
காணலாம். தியாகராசர் முன்னே இங்கு எழுந்தருளியிருந்து பின்னர்த்
திருப்பாற் கடலிலும் தேவ உலகத்திலும் எழுந்தருளிப் பின்னர் முசுகுந்தச்
சக்ரவர்த்தியின் பொருட்டு இங்குவந்து வீற்றிருந்தருளுவர்.
திருக்கோயிலும், திருக்குளமும், செங்கழுநீர் ஓடையும்
முறையே
ஐயைந்து வேலி நிலப்பரப்புடையன. ‘அஞ்சணை வேலியாரூர் ஆதரித்திடங்
கொண்டாரே' என்ற அப்பர்சுவாமிகள் திருவாக்கு முதலியவை காண்க.
இத்தலத்தின் தேரும் திருவிழாவும், கோயிலும், குளமும், எல்லாம் தனித்தனித்
தேவாரம்.
1சத்த விடங்கத்
தலங்களாவன : - திருவாரூர், திருக்காறாயில்,
திருக்கோளிலி, திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திரு வாய்மூர்,
திருமறைக்காடு என்பன.
|
|
|
|