பக்கம் எண் :


348 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

பெறும். “அற்புதம் அறியேனே“ என்ற (திருவாசகம்) அற்புதப்பத்துக் காண்க.
அதனாலே “அறியேன்“ என்று பின்னர்க் கூறினார் என்க.

      சிவனருளோ? - சிவனுக்கே ஆளாய்ப் பின்னர், அவன் அருள்
வழியே சென்று வாழ்கின்ற என்னை இவ்வாறு அற்புதப்படுத்துவது
அவனருளல்லாது பிறிது ஒன்றினாலும் இயலாது எனும் துணிவு
உடையாராதலின் சிவனருளோ? என்றார்.

      அறியேன் - இது ஐயம் என்ற துறையாதலின் ஐயத்தின்
இலக்கணமாகிய அறிவும் அறியாமையும் கலந்த உள்ள நிகழ்ச்சியைக்
குறிக்கின்றமை உணர்க. கொம்போ வாழ்வோ - புண்ணியமோ -
கொடியோ - அற்புதமோ - இவற்றில் ஒன்றோ, அன்றி முற்றும் கலந்ததோ,
பிறிதோ என்று அறிவும், துணிவுபடாமையின் அறியாமையும், கூடி அறியேன்
எனப் பெற்றது.

      அதிசயித்தார் - இதுவும் அற்புதம் போலவே பெருமிதமும் இன்பமும்
கலந்த தொரு உள்ள நிகழ்ச்சியேயாயினும் இன்னதென்று அறிந்து
அனுபவிக்கப் பெறும். “அதிசயம் கண்டாமே“ என்ற (திருவாசம்)
அதிசயப்பத்து முடிபுகளைக் காண்க.

      மேலே சொல்லிய கருத்துக்கள் நம்பிகளது உள்ள நிகழ்ச்சிகளாம்.
மனதுக்குப் புலனாய் அறிந்து உரைக்கப்படுதலின் அதிசயித்தார் என்பதாம்.1

      முதலில் தெய்வ மணமும், தெய்வ வொளியும், தெய்வ அழகும்
கொண்ட ஒரு பொருள் நம்பிகளது காட்சிக்குட்பட்டது. அதனைக் கொம்போ
என்றார். பின்னர் அதன் அழகு மிகுதி நோக்கிக் காமன் வாழ்வோ என்றார்.
அந்த அழகு வெறுங் கீழ் நிலைப்பட்டதாய்த் தோன்றாமல் புண்ணிய
விளைவாய்ப் புலனானமையின். “புண்ணியமோ“ என்றார். இவ்வளவும்
நிருவிகற்பமாகிய பொதுக் காட்சியாம். இனி அவ்வாறு மணமும் அழகும்
ஒளியும் பிரித்துணர்ந்து இன்னின்னவற்றால் விளைந்தன வென்று கூறுபடுத்தி
அறியும் உள்ளநிலை உண்டானபடியால் ‘வில் குவளை பவள மலர் மதிபூத்த
விரைக் கொடியோ' என்ற சவிகற்பமாகிய சிறப்புக் காட்சியாயிற்று.
இவ்விரண்டினோடு அமையாமையின் அற்புதமாயிற்று. அதன் பின்னர்
அவனருளே யன்றி வேறு பற்றுக்கோடு தமக்கின்மையின் முன்னினைவின்
குறிப்புத் தோன்றவே சிவனருளோ? என்ற மன நிகழ்ச்சியாயிற்று. ஓகாரங்கள்
ஆறும் ஐயப் பொருள் கொண்டன. இவையே மேலே 280 திருப்பாட்டில்
வந்தமையுங் காண்க. சிவனருளோ என்றது முன்னர்த் திருப்பாட்டில் “.....
உள்ள மெய்த்தன்மை முன்னை உண்மையும் தோன்ற வுய்ப்பார்“ என்ற (282)
பொருளால் விளைந்த ஐயப் பாடாகிய உள்ள நிகழ்ச்சி என்க. 140

287. “ஓவியநான் முகனெழுத வொண்ணாமை
                            யுள்ளத்தான்
 
  மேவியதன் வருத்தமுற விதித்ததொரு
                         மணிவிளக்கோ?
மூவுலகின் பயனாகி முன்னின்ற“ தெனநினைந்து
நாவலர்கா வலர்நின்றார்; நடுநின்றார்
                           படைமதனார்.
141

     (இ-ள்.) ஓவியம் ... விளக்கோ - பிரமதேவன் இவ்வகையான ஒரு
சித்திரப் படத்தை எழுத முடியாமையினாலே பொருந்திய தனது வருத்தம்
நிறைவுகொள்ளுமாறு உள்ளத்தாற் படைத்ததொரு அழகிய விளக்கமோ?;
மூவுலகின் ... நின்றது - மேல் கீழ் நடு என்னும் மூன்று உலகங்களாலும்
பெறும் பயனேயாய் என் முன் இங்கே நின்றது; என .... நின்றார் - என்று
எண்ணமிட்டவராய்த் (தொழுது செல்வாராகிய) நாவலர்பெருமான்
(மேற்செல்கின்றதை நிறுத்திவிட்டு) நின்றனர்; நடு நின்றார் படை மதனார் -
படை ஏந்திய மன்மதன் (இவ்வாறு கண்டு ஐயமுற்ற நம்பிகளுக்கும் அவராற்
காணப்பெற்ற நங்கைக்கும் நடுவே நின்றார்.


     1அற்புதம் - அதிசயம் - இவற்றின் விரிவு எனது “நீத்தார் பெருமை
அல்லது, மாணிக்கவாசகர்“ 185-ம் பக்கத்திற் காண்க.