பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்385

Periya Puranam

குணங்களைப்பற்றி நின்று செலுத்தப்பெறும். இவ்விரண்டும் ஒருங்கே நீங்கியன
என்பார் உடன் நீங்க என்றார். நீங்க - துணையாய் நில்லாது ஒதுங்கி நிற்க.

     நிறை என்பதனை நிறைந்த என்றும், உடல் நீங்க என்றும் கொண்டு
உடம்பினின்றும் நீங்க என்பாருமுண்டு. உடல் அந்தக்கரண, புறக்கரண
முதலியவற்றின் தொகுதியாதலின், குணங்கள் நீங்கி என்றும், பின்னர் உயிர்
ஒன்றுந் தாங்கி என்றும் கூறவே உடல் நீங்காது உடலில் உயிர்மட்டும்
தாங்கி நிற்க ஏனை உயிர்க்குணங்கள் நீங்கின என்பது குறிக்கப் பெற்றதாம்.

      ஒன்றும் - ஒன்றுமட்டும். ஏனையவெல்லாம் நீங்கியன. முற்றும்மை.

      மின்தயங்கு - மின்போலத் துவள்கின்ற இடையின் முன்வர ஆற்றாது
மின்னையும் தயங்கச் செய்கின்ற என்றலுமாம்.

      நுண்ணிடையாள் - மேற் காதற்பாரம் மிக்குப் பொங்கவே இடையின்
நுண்மையால் இருக்கலாற்றாது வீழ்ந்தார் என்பது குறிப்பு.

      வெவ்வுயிர்த்து மெல் அணைமேல் வீழ்ந்தபோது - பெருமூச்சு
விடுதலும், வீழ்தலும் மன ஆற்றாமையின் மெய்ப்பாடுகளாம். நடக்க
முடியாமல் மெல்ல அடியொதுங்கி மாளிகை ஏறி வந்து மலர்ச் சேக்கையில்
இருந்ததர், இப்போது காதல்நோய் மிக அவ்வாறு இருக்கவும் ஆற்றாது
விழுந்தார் என்க.

      மெல்லணை - மெல்லிய மலர்களும் தூவியும் பரப்பிய படுக்கை. 172

      319. (வி-ரை.) ஆரம் நறும் சேறு - ஆரம் - சந்தனம். அதன்
இயற்கைமணத்தை மிகச்செய்ய வாசனைக் கலவை கூட்டியதால் நறும் சேறு
என்றார். சேறு - குழம்பு.

      பனிநீர் நறுந்திவலை அருகுவீசி - பனிநீர் மணத்தாலும்
மென்மையாலும் மிக்கது. அதனையும் மிகுதியாய்ச் சொரிந்தால் ஆற்றார்
என்று சிறு துளிகளாய் அருகெல்லாம் தெளித்தார் என்க. துளிகளின்
சிற்றளவினால் உண்டாம் குணம்பற்றியும், தண்மையும் மணமும் மிகப்
பரப்பப்பெறுந்தன்மைபற்றியும் நறும் திவலை என்றார்.

      ஈர இளந்தளிர்க் குளிரி படுத்து - குளிரி - நீர்க்குளிரி என்ற ஒரு
கொடி. அதன் குளிர்ந்த இளர்தளிர் பரப்பி. குளிரச் செய்யுங் காரணத்தால்
குளிரி எனக் காரணப்பேர் பெற்றது. அதன் தளிர்; அதுவும் இளந்தளிர்;
அவையும் ஈரமுடையன; என அடைமொழிகளாற் றண்மையைப்
பெருக்கியவாறு காண்க. தளிர் குளிர என்பது பாடமாயின் உரிய
இளந்தளிர்களைக் குளிர்ச்சி பெறுமாறு என்று பொருள் கொள்க.

      படுத்து - இட்டுப் பரப்பி. மீடவார் - பெண்கள். இவை
பயனின்மையோடமையாது மாறான பயன் தருவதை உணராத மடமையோர்
என்ற குறிப்புமாம்.

      ஆரச்சேறும், பனிநீர்த் திவலையும், குளிரித்தளிரும் புறவெப்பத்தை
மாற்றும் உபசாரப் பொருள்களாம். இவை, கூடினார்க்கு இன்பமும்,
கூடாதார்த்குத் துன்பமும் செய்வன.

      இவையும் எல்லாம் - (ஆட்டியும், வீசியும், படுத்தும்) இவைகளே
யன்றி அவர்கள் செய்த இவைபோல்வன பிறவும் ஆகிய எல்லாம். அவை
விசிறி வீசுதல் முதலியன. இவற்றை வடநூலார் சைத்தியோபசாரம் என்பர்.

      பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன - பேர் அழல் -
பெருந்தழல். அதில் நெய் சொரிதல் அதனை வளர்க்குமேயன்றித்
தணிக்காததுபோல, இவையும் பரவையார்க்கு உள்ளே மிக எரிந்து நின்ற
ஆசைத் தீயை வளர்த்தன. காதலாகிய தீ கடுஞ் சுரம்போல் மிகச்
சுடுந்தன்மையுடைய தென்பார் பேரழலுக்கு ஒப்பிட்டார்.

      சமிதை - வேள்வித் தீயில் இடும் பல வளார்களுக்குப் பரிபாடையாக
வழங்கும் பெயர். பரவையார் மனத்துள் வளர்ந்து எரியும் காதல் தீயும்
வன்றொண்டரை வேட்டலாகிய (வேள்வி - விரும்புதலால் விளைவது -
தொழிற் பெயர்) வேள்வித் தீயாகலின் அதற்கேற்ப நெய்யும் சமிதையும்
உவமிக்கப்பெற்றன. நெய் சொரிதலும் சமிதையிடலும் வேள்விக்கு
உறுப்பாதலுங் காண்க. மணத்தை வேள்வி என்றலும் காண்க.