பக்கம் எண் :


388 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     கொடியீர்! - ஆதலின் நீங்கள் கொடியவர்களே! தடவும் கொடி
போல்பவர்களே என்பதுமாம்.

      தவிரீர்! தவிரீர்! - அடுக்கு ஆற்றாமையின் மிகுதியைக் குறித்தது.
தவிர மாட்டீர்கள். விடாது செய்கின்றீர்கள்! என்க. தவிருங்கள், தவிருங்கள்
என்று வியங்கோளாக அடுக்கிய குறிப்புமாம்.

      வந்திங்கு உலவும் மலயானிலம் - மேலே வரும் தென்றல் என்ற
இடத்துக் காண்க. மலய அனிலம் - பொதிய மலையிலிருந்து வரும் காற்று.

      அந்தண் புனலும் அரவும் விரவும் சடையார் - விடமுள்ள அரவு
வைத்தாரேனும் விடத்தாலும் தீயாலும் அவிந்தாரையும் பிழைப்பிக்க வல்ல
அழகிய தண்ணிய கங்கை நீரையும் உடனே வைத்தார். அவரருள்
பெற்றாரும் அத்தன்மையாரே ஆதல் வேண்டும் என்பது குறிப்பாம்.

      தத்தம் இயல்புக்கு மாறாகி நின்ற நிலாவின் கனலும், சந்தின் தழலும்,
மலயானிலத்தின் எரியும், ஆக மூன்று தீயும்கூடிச் சுடநின்ற என்னைக் காக்க
வல்லது அந்தண் புனலுடையார் அருள்பெற்றுடையாரது அருளே. அவரும்
இவை போலவே அவ்வருளியலுக்கு மாறாகி விட்டாரோ என்பது குறிப்பு.

      அருள் பெற்றுடையார் - அருளைப் பெற்ற அதனால்
என்னையுடையவர் என்க. “தம்பிரான் றோழனார்“ என்று உயிர்ப்பாங்கி
அறிவிக்க உணர்ந்த குறிப்பு. 175

322. “புலரும் படியன் றிர; வென் னளவும்
     பொறையும் நிறையும் மிறையுந் தரியா;
 
  வுலருந் தனமும் மனமும்; வினையே
     னொருவே னளவோ பெருவாழ் வுரையீர்!
பலரும் புரியுந் துயர்தா னிதுவோ?
     படைமன் மதனார் புடைநின் றகலார்!
அலருந் நிலவும் மலரும் முடியா
     ரருள்பெற் றுடையா ரவரோ வறியார்.“
176

     (இ-ள்.) புலரும் ....... அளவும் - என்னைப் பொறுத்தமட்டிலே
இவ்விரவு விடிகின்றபாடில்லை; பொறையும் ....... தரியா - தாங்கும் சத்தியும்
காக்கும் சத்தியும் சிறிதும் தங்கா ஆயின; உலரும் தனமும் மனமும் -
தனபாரங்களும் மனமும் உலர்ந்து போகின்றன; வினையேன்......உரையீர் -
இத்தனை பெருவாழ்வுகளும் (துன்ப அநுபவங்களும்) தீவினையேனாகிய
என் ஒருத்தியின் அளவிலே தானா இயலவேண்டும்? சொல்லுங்கள்;
பலரும்......இதுவோ - பலபேரும் சேர்ந்து செய்யும் தொழில் இவ்வாறு
துன்பம் செய்வதுதானா? (ஒருவர் போலவே பலரும் துன்பமே செய்வதா?);
படை......அகலார் - மன்மதனார் என் பக்கத்திலே நின்று படை செலுத்தலை
ஒழிகின்றிலர்; அலரும்.....அறியார் - கொன்றைப் பூவும் சந்திரனும்
மலர்தற்கிடமாகிய திருமுடியுடையாரது திருவருள் பெற்று என்னை
உடையாராகிய நம்பிகளோ நான் படும் துன்பத்தை அறியாதவராயினர்.

     (வி-ரை.) புலரும்படியன்று இரவு என் அளவும் -
மற்றெல்லார்க்கும் அளவு பட்டு விரைவில் விடியும் தன்மையுடைய இரவு
என் அளவில்மட்டும் புலராமலே நிற்கின்றது. இரவிலே இத்துன்பப்படுவார்
பகல் வரில் தம் முன்னைநிலை பெறுவர். ஆதலின் பகலை விரும்பும்
இயல்புபற்றி இரவு புலராது நீட்டித்தலைக் குறித்து வருந்தினார். இரவு
நீட்டித்தலாவது ஆற்றாமையினால் ஒரு கணமும் ஊழியாய்த் தோன்றுதல்.
“ஊழியிற் பெரிதால் நாழிகை யென்னும்“ (திவ்யப்)