|
“அம்பலத்தாடும்
துரியவதிகார சிவனான முழுமுதல்வன்,-
உலகெலாமுணர்ந்
தோதற்கரிய சொரூபசிவமாயும்,
அலகில் சோதி
மயமான இலயசிவனாயும், நிலவுலாவிய நீர்மலி வேணியுடைய
போகசிவனாயும் நின்றானாதலின், யாம் இவ் வருட் காவிய விலக்கிய மினிது
முடிதற் பொருட்டு அவன் மலர்சிலம்படியினை வாழ்த்தி வணங்குவோம்”
என்பது சபாபதி நாவலர் அவர்கள் பொழிப்புரை - (திராவிடப் பிரகாசிகை).
அடியார்களது
குவிந்த உள்ளக் கமலங்களை மலர்த்தும் திருவடி
என்றலுமாம். மலர் சிலம்பு - மலர்அடி -
வினைத்தொகை;
சித்அசித்-பிரபஞ்சமெங்கும் மலர்கின்ற அடி; சிலம்பு - ஆரணநூபுரம்
என்னும் வேதக் கழல்; சிலம்புதலிற் சிலம்பெனப்படும். சிலம்பு நாதத்தின்
மூலம்தான் இருக்கும் இடமாகிய திருவடியை உணர்த்தி உயிர்களை வந்து
அடையும்படி அழைக்கும் குறிப்பு. கழறிற்றறிவார் நாயனார்க்குத்
தினந்தோறும் பூசை முடிவிலே “பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்
சிலம்பின் ஒலி யளித்”தமை காண்க. “திருச்சிலம்போசை யொலி வழியே
சென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற”எனும் திருவாக்கும் காண்க.
வாழ்த்துதல்
- நாம் வாழும் பொருட்டு. “வாழ்த்துவதும் வானவர்கள்
தாம் வாழ்வான்” என்பது திருவாசகம். “நமச்சிவாய வா அழ்க”முதலிய
திருவாக்குக்களும், திருப்பல்லாண்டு முதலிய அருட்பாக்களும் இக்கருத்தே
பற்றியன.
“வணங்குவாம்”
என்றதனால் வணக்கமும், “வாழ்த்தி”
என்றதனால்
வாழ்த்தும், “மலர்சிலம்பு அடி” என்றதனால் அத்திருவடிகளை எக்காலத்தும்
மனத்தே பதித்த அடியார்களது அடிமைத் திறத்தைக் கூறுவது இந்நூல்
என்று குறிப்பதாகிய வருபொருளுரைத்தலும் பெற்றாம்.
“இங்ஙனம் ஞான
முதலிய நான்கு நெறியினு மொழுகி வழிபடற்குரிய சொரூபமும்;
நிட்களமும்
- நிட்கள சகளமும் - சகளமு மென்று நான்குமிதன்கட் பொருந்தி
விளங்கக் கொண் டாசிரியர் மங்கலங் கூறியருளியது, தாம் பாடவெடுத்துக்
கொண்ட செந்தமிழ்க் காவிய விலக்கியத் தலைவரான உண்மை நாயன்மார்,
இந்நான்கு திருமேனியும்பற்றி நாற்பாத நெறியினு மொழுகிப் பரமுத்தி
பதமுத்திகள் தலைக்கூடிய பெற்றிமை விளக்குதல் நோக்கி யென்க. இங்ஙன
மாகலான், இம் மங்கலத் திருப்பாட்டு வாழ்த்து வணக்கம் அடிப்பாடாக
வருபொரு டெரித்தலாயவாறு காண்க” - (திராவிடப் பிராசிகை).
“உலகெலாம்”
என்ற திருவாக்குச் சேக்கிழார் பெருமானுக்கு
நடேசப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல். இம்முதலினையே முதலாக
வைத்துக் கொண்டு ஆசிரியர் அத்திருவருளின் வழியே இப்புராணம் பாடி
முடித்தனர். இதனைத் திருத்தொண்டர் புராண வரலாற்றிலே உமாபதி
சிவாசாரிய சுவாமிகள் விரிவாய்க் கூறியருளியது காண்க. “அருமறை முதலி
னடுவிற் கடையிலன்பர் தஞ் சிந்தையி லலர்ந்த, திருவள ரொளிசூழ்
திருச்சிற் றம்பலம்” என்ற படி இப்புராணமும் மறையே - வேதமே -
யாதலால் இறைவன் தந்ததும், பிரணவ உருவமானதுமான இம்முதலைப்
புராணத்தின் முதலாகிய இப்பாட்டிலும், “சோதி முத்தின் சிவிகை.......உய்ய
உலகெலாம்”(திருஞானசம்பந்த நாயனார் புராணம் - 216) என்ற இடையிலும்,
“என்றும் இன்பம்........நிலவியுலகெலாம்” என்ற இறுதிப்பாட்டிலும்,
பதித்துவைத்தனர் ஆசிரியர். அதுவேயுமன்றி அடியார்களிடையே திருவருள்
வெளிப்படும் அரிய சிற்சில இடங்களிலும் அருமையாக வைத்துள்ளார்.
ஆங்காங்குக் கண்டுகொள்க.
உலகெலாம்
என்பது பிரணவ உருவமுடையது. என்னை?
நாதத்தினின்றே பிறப்பது அகரமாதலாலும், அது எல்லா எழுத்துக்கும்
முதலானதாலும், அகரம் பெறப்பட்டது. உலகெலாம் என்றதில் முதல்
உகரமும், இறுதி மகர ஒற்றும் ஆக அகர உகர மகரங்களாகிய வியட்டிப்
பிரணவ உருவம் இப்புராணத்திருமுறையாம்.
ஓங்காரத்திலே
“தோடுடைய என்று தொடங்கிய தமிழ்
வேதம் “நிலவி உலகெலாம்” என்றதில் உள்ள மகர ஒற்றுடன் (ம்) கூடித்,
தேவார முதற்
|