|
பெரிய புராண மிறுதியாக
உள்ள சைவத் திருமுறை பன்னிரண்டும் மறையே
யாய்ப் பிரணவ உருவமுடையன என்பதும் காண்க.
அரியவன்
- வேணியனும் - சோதியனும் - ஆடுவானும் ஆனான்;
அவனை வணங்குவாம் என்று வினைமுடிவு செய்க. அரியவனாயினும்
எளியவனாய்த் தன்னை விளங்கக் காட்டும் ஒளியுடன் வெளியிலே ஆடுவான்.
ஆயுநுண் பொருளாகியும் வெளியே யம்பலத்துநின் றாடுவார் (இயற்பகை
- 4) எனப் பின்னர்க் கூறுவதும் காண்க. ஓதி யாரும் அறிவாரில்லையோதி
யுலகெலாம், சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுட் சோதியான் (தேவாரம்
- திருஞான - இந்தளம் - திருவையாறு - 7) என்ற வேதப்பிரமாணமும்
காண்க.
உலகெலாம்
- மலர் சிலம்படி என்று பொருந்தச் செய்தன, நாமேவு
மம் முதலொ டொன்றவினை யுருபுதொக, நான்கனடி யாதிசெய்து, நாற்சீரி
னானெறி விளக்கியொளிர் சேக்கிழார், நற்றமிழ்க் கவிதழையவே என்று
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழார் பிள்ளைத்தமிழில்
பாராட்டியதைக் காண்க. இக் கலிவிருத்தத்தின் நான்கடியும் நாற்சீருடைய
வாய் ஒவ்வொரடியும் சைவாகமங்களிலோதிய நாற்பாதங்களாகிய ஞானம்,
யோகம், கிரியை, சரியை எனும் நெறிகளை விளக்குந் தன்மையவெனப்
போற்றப்பட்டது. இவையே நன்னெறி, தோழர்நெறி, மக்கள்நெறி, அடிமைநெறி
என்று கூறப்படும். ஒவ்வொரு ரடியினுமுள்ள நாற் சீர்கள் சரியை யாதி
நான்கினுமுறையே வரும் உட்பிரிவுகளைக் குறிப்பாலுணர்த்தின.
இன்னும்
இப்பாட்டினுரை விரிக்கிற் பெருகும். அறிந்தார்வாய்
கேட்டுணர்க. 1
| 2.
|
ஊன
டைந்த உடம்பின் பிறவியே
|
|
| |
தான
டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழிற் றில்லையுள்
மாந டஞ்செய் வரதர்பொற் றாடொழ. |
2 |
இது
துதி
(இ-ள்.)
தேன்........தில்லையுள் - தேன் சேர்ந்த மலர்கள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த தில்லைப்பதியிலே; மாநடம்....தொழ - பெருங் கூத்தைச்
செய்கின்ற வரதனுடைய பொற் பாதங்களை வணங்க; ஊன்........பிறவியே -
ஊன் பொருந்திய உடம்புடன் சேர்ந்த மானுடப் பிறவி எடுத்த உயிரே;
தான்..........சாரும் ஆல் - தான் பெற்ற உறுதிப் பொருளை அடையும்; தாள்
தொழப், பிறவி உறுதியைச் சாரும் - என்று கூட்டி முடிவு செய்க.
(வி-ரை.)
ஊன் அடைந்த உடபின் பிறவி - மற்றப் பிறவி
களினின்றும் பிரித்து ஊனினால் ஆகிய விசேட உடம்பு பெற்ற மானுடரை
உணர்த்திற்று. மரம் செடி முதலிய தாவரங்களுக்கும் உடம்பும் பிறவியும்
உண்டு. ஆயினும் அவ்வுடம்புகள் ஊனடைந்த உடம்புகளல்ல. மற்ற ஆடு
முதலிய உயிர்ப் பிராணிகளும் ஊனடைந்த உடம்புடையன. அவற்றுள்
புண்ணியக் கிரமத்திலே மேலே வந்த சிறந்த அறிவுக்கு இடமாகிய ஊன்
பொருந்திய உடம்பு மானுட உடம்பே யாதலின் இங்குக் குறித்தது மானுடப்
பிறவியை என்க. இவ்வாறன்றி ஊன் என்பது உடம்பிற்குப் பொது
இலக்கணமாகக் கொண்டு சிறுபான்மை ஈ (ஈங்கோய்மலை), எறும்பு
(எறும்பியூர்), கழுதை (கரவீரம்), முதலியவை சிவபெருமானைப் பூசித்த
செய்தியை அடக்கி உரைத்தலுமாம். ஊன் அடைந்ததே யாயினும் -
உறுதியைச் சாரும் என்று உம்மை விரித்துரைக்க. ஆல் - உறுதி குறிக்கும்
அசைமொழி.
|