பக்கம் எண் :


414 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

யார்க் கமுதுசெய்வித்தல் ஒன்றாமாயின் நீவா“ எனச் சூளுரைத்து ஒரு
பாட்டுப்பாடிய அளவில், எலும்பு உயிரும் வடிவமும் பெற்றெழச் செய்ததும்,
இன்னோரன்ன பிறவும் இவர்களது பெருமையாம். இவற்றை முன்னர்த்
திருக்கூட்டச்சிறப்பிலே, “பூதமைந்து நிலையிற் கலங்கினு, மாதொர் பாகர்
மலர்த்தாள் மறப்பிலார்“ என்பது முதலாக வடித்தெடுத்து வகுத்தருளினமை
காண்க. பின்னர் ஒவ்வோர் சரிதத்துங் காண்க.

     தம்மை ஒப்பார் - தம்மையே தமக்கு ஒப்பாகப் பெற்றார். பிறர்
ஒருவரும் ஒவ்வார் என்க. பிரிநிலை ஏகாரம் தொக்கது. “தனக்கு உவமை
யில்லாதான்“ என்பது எமது தன்மை; “எம்மை அடைந்தஅடியார்களாகிய
இவர்களுக்கும் அதுவே தன்மை“ என்று இறைவன் அறிவித்தவடியாம்.
இப்பெருமைகளை இப்புராணத்திலே ஒவ்வோர் நாயன்மார் சரிதத்திலும்
தனித்தனி விரிவாகக் கண்டுணர்ந்துகொள்க.

     பேணலால் எம்மைப் பெற்றார் - பேணுதல் - குழவியைத் தாய்
பேணுமாறு போற்றுதல்; என்றும் இடைவிடாது சிந்தித்து வாழ்தல்.
“வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண்“ என்ற காரைக்காலம்மையார்
புராணம் (58) காண்க. எம்மைப் பெறுதலாவது - எம்மைத் தமக்கே உரிய
உரிமைப் பொருளாகப் பெறுதல். நாம் அவர்களது அன்புக்குள்ளாவோம்;
எம்மை அடைய வேண்டுபவர்கள் அவர்களை அடைந்து, அவர்கள்
வழிப்படுத்த எம்மை வழிபட்டு, அவர்கள்தர எம்மை அடையக்கடவர்
என்றபடி. “படமாடக் கோயிற் பரமர் - நடமாடக் கோயில் நம்பர்“ என்ற
திருமூலர் திருமந்திரங் காண்க. அடியார்களைப் பேணலால் அடியடைந்த
சிறுத்தொண்டர், அப்பூதியார், குலச்சிறையார் முதலிய நாயன்மார் சரிதங்கள்
காண்க. பேணுதல் - உவப்பன செய்து வழிபடுதல். ‘பெரியாரைப் பேணி -
குறள் - (443) உரை.

     ஒருமையால் உலகை வெல்வார் - ஒருமை உணர்ச்சியினால்
இறைவனோடு ஒற்றித்திருத்தல். “ஒட்டிட்ட பண்பின் உருத்திர
பல்கணத்தார்“ என்பது தேவாரம். இதனையே “மெய்ஞ்ஞானத் தாணுவினோ
டத்துவிதம்“ என்றார் தாயுமானார். இறைவனோடு ஒன்றிய இடத்து உலகம்
அவ்வுயிரைப் பற்றாது அருளுள் அடங்கி நிற்கும்; ஆதலின்,
உலகைவெல்வார் என்றார். உலக பாசக்கோடுகளின் பற்றிலிருந்து விடுபட
இது ஒன்றே வழி என்று ஒருமையால் என இரட்டுற மொழிந்தவாறுமாம்.

     ஊனம் மேல் ஒன்றுமில்லார் - ஊனம் - குறித்ததொன்
றாகமாட்டாக் குறைவு. யாதுங்குறைவிலார் என்றதும்அது. ‘பிறவிப்
பெருங்கடல் நீந்துவர்' என்பது திருக்குறள் ஆணை. உடம்பே ஊனமாவது.
ஏனை ஊனங்கள் உடம்போ டொடுங்குவன. உடம்பெடுத்தலே - பிறவியே -
ஊனங்கட்கெல்லாம் காரணமும் தாயகமுமாவது. உயிருக்கு வரும்
ஊனமாவது உடம்பெடுக்கும் பிறவி. இவர்கள் பேணலால் எம்மைப்
பெற்றாராதலின் பிறவி வாராமற் செய்துகொண்டார். ஆதலின் மேல்
ஊனம் ஒன்றுமில்லாராயினர்.

     அருமையாம் நிலை - பிறரால் அடைதற்கரிய நிலை.

     அன்பினால் இன்பம் ஆழ்வார் - அன்பு காரணமாக இன்பம்
உளதாம். “இன்பமே யென்னுடை யன்பே“, “இறவாத வின்ப அன்பு
வேண்டி“ முதலிய திருவாக்குக்கள் காண்க.

     இருமையும் கடந்து நின்றார் - இருமை - இம்மை மறுமை என்பன.
அவை இம்மை என்னும் இவ்வுலகப்பிறப்பு நிலையும், மறுமை என்னும்
சுவர்க்க நரகப்பிறப்பு நிலையும் ஆம். இறைவனைப் பற்றிநின்ற
நிலையினாலே இவ்வுலக நிலையையும், சுவர்க்காதி போகங்களைப்
பொருளல்ல வென்றொதுக்கியதால் மறுமையும் கடந்தவர். “கொள்ளேன்
புரந்தரன் மாலயன் வாழ்வு“, “போகம் வேண்டிலேன்பு ரந்த ராதி
யின்பமும்“ “சுவர்க்கங்கள் பொருளளவே“, “உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்“. (திருவாசகம்)