பக்கம் எண் :


420 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     நின்று - (வன்றொண்டர்) நின்று அருள் செய்தார் என்று கூட்டுக.
அடியார்கள் வீற்றிருக்க அவர்களின் முன் நின்று துதிக்கும் முறை
குறித்தவாறு.

     நின்று என்பதனைத் தத்தமது சித்த நிலைகளிலேயும் ஒழுக்கத்திலேயும்
நிலைபெற்று நின்று அந்நிலைகளினின்றும் சிறிதும் பிறழாத வீரமுடையார்,
என அடியார்களுடன் கூட்டியுரைத்தலு மொன்று. “சித்தநிலை திரியாது
செய்பணியின் றலைநின்றார்“ - (திருநா - புரா - 422) முதலிய
திருவாக்குக்கள் காண்க. “நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற, மலையினும்
மாணப்பெரிது“ என்பது குறள். “வானந் துளங்கிலென்?“ என்றது அப்பர்
பெருமான் தேவாரம். “வீர மென்னால் விளம்புந் தகையதோ“ (144) என்றதும்
இங்கு நினைவு கூர்க. விரிவு ஆண்டுக் காண்க.

     தனித் தனி வேறு அடியேன் என்று - தனித்தனியும் வேறும் என
உம்மைத் தொகையாக்கித் தனித்தனி அடியேன் என்றும், அதற்கு வேறாய்த்
தொகுதி குறித்து அடியேன் என்றும் உரைக்க. தனியடியார், தொகையடியார்
என்ற இருபகுப்பும் குறிக்க இவ்வாறு கூறினார். இவ்வாறு கொள்ளாக்கால்
வேறு என்றது கூறியதுகூறலாய் வேறு பொருள் பெறாது நிற்றலறிக.
“பத்தராய்ப் பணிவார்கள்“ என்று தொடங்கும் பாசுரத்திற் குறித்த
அடியார்களைத் தொகையடியார்கள் என்பது வழக்கு.

     ஆர்வத்தால் - ஆர்வம் - அடியார் வணக்கத்தில் மேன்மேல் எழும்
ஆசை. இது வரை ஆரூரில் அம்மானுக்கு ஆளாய்ப் பணிசெய்யப்பெற்ற
ஆரூரனாகிய அடியேன் இன்று தில்லைவாழ் அந்தணர்த மடியார்க்கு
மடியேனாகப்பெற்றேன் - பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும்
அடியனாகப் பெற்றேன் - பொய்யடிமையில்லாத புலவர்க்கும்
அடியேனாயினேன் - சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும்
அடியனானேன் - எனது இவ்வடிமைத்திறத்தைக் கேட்டுவப்பாரும் ஆரூர்
அம்மானுக்கன்பராவார் என்று மேலும் மேலும் பாராட்டிப் போற்றி உலகினுக்
குறுதிகூறுதல் ஆசைப்பாட்டின் மிகுதி காட்டிற்று. இது இத்திருப்பதிகம்
அருளியபோது நம்பிகளின் உள்ளநிலை குறித்தது.

     தொழுது - தாழ்ந்து - எழுந்து - சென்று - எய்தி - நின்று - என்பன
நம்பிகளது அரிய வணக்கத்தின் பற்பல செயல்களையும் தனிச் சொற்களாற்
பிரித்து எடுத்துக் காட்டியவாறு. திருத்தொண்டத் தொகைப்பதிகம் -
பதிகத்தின் பெயர் குறித்தபடியாம். திருநீற்றுப்பதிகம் என்பது போல.
தனித்தனிவே றடியே னென்று - அப்பதிகத்தின் அமைப்பு நுதலியபொருளும்
குறித்ததாம். வீரத்தார் - பதிகத்துப் பாடப்பெற்றோர் தன்மை காட்டியபடி.
எல்லார்க்கும் - எல்லாக்காலத்தும் எல்லா இடத்தும் உள்ள
இத்தன்மையரெல்லாருக்கும் என விரித்துரைக்க. விரிவு அப்பாலுமடிச்சார்ந்த
அடியார் புராணத்துட் காண்க.

     நின்றிழியா - அருள்செய்தார் - என்பனவும் பாடங்கள். 201

     348. (வி-ரை.) தம்பெருமான் - தம்மை ஆட்கொண்டு பணித்த
இறைவன். முன்னர்த் திருக்கயிலையிலும், பின்னர்த் திருவெண்ணெய்
நல்லூரிற்றொடங்கி இங்குப் போந்தவரையிலும் பணிகொண்டவர்.

     மொழி - தொடர்மொழி. “தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு
மடியேன்“ என்பதாம். முதலாக அதனையே தொடக்கமாகக் கொண்டு என்க.
கைமுதல் - விதைமுதல் - என்பன போலக் காரணமாகி ஊதியமாக - மூலதனமாக - என்றுரைத்தலுமாம்.

     தமிழ்மாலை - நிறை சொன்மாலை (343) எனும் தமிழ்ப்பாட்டுக்களா
லாகிய மாலை. இது பதிகத்தின் தொடையைக் குறித்தது. செம்பொருளால் -
இது பதிகப் பொருளைக் குறித்தது. எனவே சொல்லும் பொருளும்
குறித்தபடியால் செம்பொருள் - செம்மையைத் தரும் பொருள். செம்மை -
சிவத்தன்மை - முத்தி. “திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட“
என்ற இப்பதிகம் நான்காவது பாசுரங் காண்க.