பக்கம் எண் :


தில்லைவாழந்தணர் புராணம்435

Periya Puranam

னது துதியாகக் கூறினமை என்னெனில் இவர் தில்லை வாழந்தணர்களில்
ஒருவராயும் அவர்களில் முதல்வராயும் இருக்கும் உண்மைபற்றி என்க.

     “நாமிவரி லொருவரெனுந், தேவர்க டேவன செல்வம்“

என்று கோயிற்புராணமுடையார் மூவாயிர முனிவர் துதியிற் குறித்துள்ளதும்
காண்க. சோதியின் கழல் என்றியையும்.                        2

352. போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல
                           லுற்றேன்;
 
  நீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக் குரிய
                          தொண்டாம்
பேற்றினார்; பெருமைக் கெல்லை யாயினார்
                        பேணி வாழும்
ஆற்றினார்;பெருகு மன்பா லடித்தவம் புரிந்து
                            வாழ்வார்;
3

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு கூத்தப் பெருமானது கழலைத்
துதித்துக் கொண்டு (அதன் துணையாலே) அவரை முதல்வராக
கொண்டுள்ள வழி வழி நீண்டு வளர்ந்துவரும் தில்லைவாழந்தணர்களின்
தன்மையினைச் சொல்லப் புகுகின்றேன்; இவர்கள் திருநீற்றினாலே நிறைந்த
திருக்கோலத்தை யுடைய கூத்தப்பெருமானுக்கும் உரிமையாகிய
திருத்தொண்டராகும் பேறுபெற்றவர்கள்; எல்லாப் பெருமைகளுக்கு
வரம்பாயுள்ளவர்களும் வழிபட்டு வாழ்தற்கேதுவாகிய ஒழுக்கத்திலே
தலைநின்றவர்கள்; மேன்மேலும் பெருகிவளரும் அன்பினாலே
திருவடியையே பற்றுக்கோடாகக்கொண்டு தவம் செய்து வாழ்வார்கள்;

     (வி-ரை.) போற்றி - அந்தணர்களையே போற்றி அவர் திறம்
புகலலுற்றேன் என்று கூறுவாருமுண்டு. நீள் தில்லைவாழந்தணர் -
நடேசரை முதல்வராகவும் தம்மிலொருவராகவும் கொண்டு அன்றுமுத
லின்றுவரை வழிவழி வளர்ந்துவரும் மூவாயிர முனிவர்கள்.

“நாவிரவு மறையினராய் நாமிவரி லொருவரெனுந்
தேவர்க டேவன செல்வச் செல்வர்களாய்த் திகழ்வேள்வி
பாவுநெறி பலசெய்யும் பான்மையராய் மேன்மையராம்
மூவுலகுந் தொழுமூவா யிரமுனிவ ரடிபோற்றி“

என்பது கோயிற் புராணம்.

     திறம் - தன்மை. “இன்ன பண்பு“ (344) என்றுரைத்த பண்பு. பண்டு
மின்றும் என்றும் நீடியிருக்கின்றாராதலின் ஒவ்வொருவர்க்கும் வரலாறு
கூறாது அவர்களின் பொதுப்பண்பு மட்டும் உரைக்கலாகும் என
அதனையே இப்பகுதியிற் கூறுகின்றராதலின் திறம் என்றார்.

     நீற்றினால் நிறைந்த கோலம் - “பூசுவதும் வெண்ணீறு“ -
(திருவாசகம்). “நீறு சேர்வதோர் மேனியா“ - (தேவாரம்) முதலிய
திருவாக்குக்கள் காண்க.

     உரிய தொண்டு ஆம் பேற்றினார் - அவனுக்கே சிறப்பாய்
உரிய எனவும், தமக்கே சிறப்பாய் உரிய எனவும் இருதிறமும் சிறப்பு
உரிமையாதலின் உரிய எனப் பொதுப்படக் கூறினார். இதனையே தம்
அடியார் என்று முதனூலும், உரிமைத்தொழில் புரிவோர் என்று
வழிநூலும் பேசினமை காண்க.

     தொண்டு ஆம் பேறு - தொண்டு செய்வதினும் பெரிய பேறு
வேறின்மையால் ஆம்பேறு என்றார். இச்சிறப்புப்பற்றியே திருஞானசம்பந்த
நாயனார் இவர்களைத் தேவாரத்தில் வைத்துத் துதித்ததும் காண்க.

“ஆடுங்கழற் கணுக்க ராம்பே றதிசயிப்பார்“
              - திருஞான - புரா - 168

“நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டவந்                               நிலையெல்லாங்
கூடு மாறுகோத் தவர்தொழு தேத்துசிற் றம்பல                             மெனக்கூறி“

                      - திருஞான - புரா - 174

என்ற இடத்துக் கூறப்பெற்றமையும் கூர்ந்து நோக்குக.

     பெருமைக்கு எல்லை ஆயினார் - பெருமைகளுக்கு வரம்பாய்
நின்ற பெரியோர். பெருமைகளெல்லாம் இவர்களது அளவிலே உட்பட்டு
மேற்செல்ல மாட்டாது.