பக்கம் எண் :


534 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     மறை ஓலிடவும் நின்றான் நாயனாரைக் கூவி ஓலமிட்டான் என
இவரது பெருமை கூறியவாறு. மறைவழி நின்ற முனிவர் பெரியர்; அவரிலும்
அவர்களால் வழிபடப் பெற்ற வேதம் பெரிது; அவற்றினும், அவ்வேதத்தால்
வழிபடப்பெற்றவனும் அதைச் சொன்னவனுமாகிய இறைவன் பெரியன்;
அவனும் ஓலமிட நின்றார் இந்நாயனார் என இவரது உயர்வு குறித்தார்.
இது குறிக்கவே முன்னர் முனிவர் என்றனர். ஐந்தவித்த முனிவனாகிய
கௌதமனினும் அங்ஙனம் அவியாது நின்றே உலகச்சார்பை விட்டு
அறுத்த நாயனார் ஆற்றல் மிகப் பெரிதென்க.

     முனிவராதலே வருவாய் என்றழைக்கக் காரணம்; அயராமையே
முனிவராதற்குக் காரணம்; அன்பு அதற்கு அடிப்படை; அதுவே
செயற்கரிய செய்கை செய்வித்தது எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

     ஈண்ட - எனப் பாடங் கொள்ளின் விரைய என்றுரைக்க.

     அறுபகையும் செற்றவர் நாயனாராதலின் அறுவகைப்பட ஒலங்
கூறியது போலும்.  29

433. அழைத்தபே ரோசை கேளா “வடியனேன்
                       வந்தேன்! வந்தேன்!“
 
  பிழைத்தவ ருளரே லின்னும் பெருவலித் தடக்கை
                                   வாளி
னிழைத்தவ ராகின் றாரென் றியற்பகை யார்வந்
                               தெய்தக்,
குழைப்பொலி காதி னானு மறைந்தனன் கோலங்
                            கொள்வான்.
30

     (இ-ள்.) வெளிப்படை. (இவ்வாறு) அழைத்த பேரோசையைக் கேட்டு
இயற்பகையார், “அடியேன் இதோ வந்து விட்டேன்! வந்துவிட்டேன்!
இன்னும் பிழைத்தவர்களாய் உம்மைத் தடுப்பவர்கள் யாரேனும் இருந்தார்களானால் எனது மிக வலிய கையில் ஏந்திய மிக வலிய
வாளினால் வெட்டுண்டவராகின்றார்கள்“ என்று சொல்லிவந்து சேர்தலும்,
குழை விளங்கிய காதினையுடைய இறைவனும் அவருக்கு அருள் செய்யும்
பொருட்டு அருட்சத்தி வெளிப்படக் கோலம் கொள்வதற்கு மறைந்தனர்.

     (வி-ரை.) பேரோசை - உரத்த சத்தத்தால் ஓலமிட்டார் என்பது.
எங்கும் நிறைந்த நாத உருவனாகிய இறைவனது ஒலியாதலின் எங்கும்
நிறைந்த பேரோசையாயிற்று என்க. இவர் செய்கை புவன மூன்றுய்ய
நிகழ்ந்தது என முன்னர்க் குறித்ததும் காண்க. இயற்பகை முனிவா -
என்பதாதியாகப் பேர் குறித்த ஓலமாகிய ஓசை என்றுரைத்தலுமாம்.

     வந்தேன்! வந்தேன்! - மிக விரைவுபற்றி வருவேன் என்னாது
இறந்த காலத்திலே வந்தேன் எனக் கூறினதோ டமையாது இருமுறை
அடுக்கியும் கூறினார்.

“வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள் வென்மனார் புலவர்.“
                  - வினையியல் 44.
 
“விரை சொல்லடுக்கே மூன்றுவரம் பாகுமே.“
                    - எச்சவியல் 28.

என்ற தொல்காப்பியச் சூத்திரங்கள் காண்க.

     பிழைத்தவர் - பிழை செய்தவர் எனவும், முன்னரே ஒழிந்தே
மாளாமல்தப்பிப் பிழைத்தவர் எனவும், இருபொருளுங் கொள்க.

      பெருவலித்தடக்கை வாளின் - பெரு வலி தட என்னும்
அடைமொழிகளைக் கையினுக்கும் வாளினுக்கும் தனித்தனிக் கூட்டுக.
வாளின
- வாளினால்.

     இழைத்தவர் - வாளினால் இழைத்தவர் - இழைக்கப்பெற்றவர்.
செய்வினை செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. வாளின் இழைத்தல்
- வெட்டித் துண்டித்தல்.