பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்561

Periya Puranam

திருவாக்குக்கள் காண்க. இவ்வாறு வேற்றுமை உருபுகள் பன்முறைத்
தனித்தனி விரித்து வருவதும் வழக்கம். “உம்பரி னூரெரித்த, அப்பர்க்
கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த, துப்பர்க்கு“ - (திருத்தொண்டர்
திருவந்தாதி 1), “செய்ய சடைக்கற்றை, நம்பர்க் கும்பர்க் கமுதளித்து
நஞ்சை யமுது செய்தவருக்கு“ - (மூர்க்கர் - புரா - 2) முதலிய
திருவாக்குக்கள் காண்க. இறைவனுக்கு இனியாராகிய அடியவர்களே
உயிர்களுக்கு இனியராவர். உயிர்களுக்கு இனியராவார்களே இறைவனுக்கு
இனியராவர்.

“இகத்தும் பரத்து மினியாரைக் காணேன்“
       - சிறுதொண்டநாயனார் புரா - 77

     தகவுற - அடியார் பூசைக்கு ஏற்ற தகைமை பொருந்தும்படி.

     அணங்கே - தெய்வப்பெண்ணே! வழி ஒன்றுந்தோன்றாது நிற்கின்ற
இச்சமயம் எனக்கு உதவினால் உன்னைத் தேவப்பெண் என்று கருதுவேன்
என்ற குறிப்பு 11

     451. (வி-ரை.) மற்றொன்றுங் காண்கிலேன் - மற்று ஒன்றும் -
என்றதனால் ஒன்று உள்ளது; அதனைத் தவிர வேறு ஒன்றும் - என்பது,
அவ்வொன்று வரும்பாட்டிற் கூறுகின்றார். அவ்வொன்றினையன்றி மற்ற
வழிகளாக எண்ணக்கூடியவற்றை எல்லாம் இப்பாட்டிற் றனித்தனி கூறிக்
கழித்து அவ்வொன்றினையே முடிபாகக் கூறும் காரணமும் காட்டிய அழகு
காண்க.

     ஏதிலார் - அயலார். வேறு ஏதும் தொடபு இல்லாதவர்.

     இனி - இதுவரைத் தன்னை மாறி யிருக்க உள்ள கடன்கள்
தக்கனவுங் கொண்டு (446) விட்டமையின் இனிக் கடன் வாங்க இயலாமை
குறித்தவாறு.

     போதும் வைகிற்று - வைகுதல் இங்கு நீட்டித்து விட்டமை
குறித்தது. போது - பொழுது. அகாலமாயினமை வேறிடம்
போகக்கூடாமைக்குக் காரணமாம்.

     இடம் வேறு - இவ்வூரன்றிப் பிற ஊறினும் என்ற குறிப்புமாம்.

     தீதுசெய் வினையேற்கு என் செயல்?
- தாமும் தம் நாயகரும்
மனத்தில் எண்ணியபடி அடியார் பூசைக்கு அமுதமைக்க இயலாமையின்,
இல்லாளின் கடமையாகிய இதற்குரிய தாம் செய்த தீவினையின் பயனாகவே
கருதி மனைவியார் வருந்துகிறார்.                            12

     452. (வி-ரை.) செல்லல் நீங்க - செல்லல் - துன்பம். அடியார்க்
கமுதளிக்க நெல் இல்லை என்று தாங்கள்படும் துன்பம். இந்நெல் பயிராய்
விளைந்து, பின்னராவது நீங்குமாறு. செல்லல் - செல்லுதல் - போதல்
எனக் கொண்டு நாம் இந்தப் பிறவியிற் போகும் செயல் நீங்குமாறு.
அஃதாவது இன்று அடியார்க்களித்தலால் பிறவியறுமாறு என்று குறிப்பிற்
கூறலுமொன்று. செல்லல் நீங்க வித்தி என்றும், செல்லல் நீங்க
வாரிக்கொடுவந்தால் என்றும், செல்லல் நீங்க ஆக்கலுமாகும் என்றும்
கூட்டி முடித்தலுமாம்.

     பகல்வித்திய செந்நெல் - அன்று பகல்தான் நாற்றுக்குத் தெளித்த
செந்நெல். மாரிக் காலமாதலின் அன்று பகலில் மழைபெய்து நின்றதும்
வயலைச் சேறிட்டு நாற்றுக்காக நெல் தெளித்துவந்தனர்; அதுவும் செந்நெல்
என்றபடி. செந்நெல்லே அரன் பூசைக்கும் அடியார் பூசைக்கும் சிறப்பா
யுரியதாம். அரிவாட்டாயநாயனார் புராணத்துட் காண்க. கார்நெல் சிறப்பன்று.
குணத்தினுங் குறைபாடுடையதாம். வித்திய - நாற்றுக்காகச் செறிவாய்த்
தெளித்த.

     மல்லல் நீர்முளை - செழித்த நீரினால் நெல் ஊறிப் பருத்து
முளைக்கத் தொடங்கியிருக்குமாதலின் முளை என்றார். முளைக்கும்
பதத்திலுள்ள செந்நெல் என்க.

     வல்லவாறு அமுதாக்கலும் ஆம் - ஊறி முளைக்குந் தருணத்தில்
உள்ள நெல் அமுதுக்குச் சிறக்க அமைவதன்று; ஆயினும் நானறிந்த
வகையாலே அதனைப் பண்படுத்தி அமுதாக்குவேன் என்பது. வல்லவாறு
-
முன் பழகிய கைத்தேர்ச்சி குறித்தது. “கைம்மை வினையினால் வேறு
வேறு கறியமுதாக்கி“ (461) என்பதும் காண்க.