பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்567

Periya Puranam

கோள்களை உட்கொண்ட இல்வாழ்க்கையே இகத்தும் பரத்தும் உயர்வு
தருவதாம். ஆயினும் இந்நாட் சிலர் இதன் உயர்வை யறியாது நமது நாட்டு
வாழ்வு பெண்களை அடிமைப்படுத்தியதென்றும், நமது நாகரிகத்தில்
பெண்ணுரிமை பாதுகாக்கப் பெறவில்லை யென்றும் பலவாறு கூறி யொழிவது
வருந்தத்தக்கதாம். அவர் கூற்றுக்கள் இச்சரித நிகழ்ச்சித் துணைகொண்டு
ஆராய்ந்து தெளியத்தக்கனவாம்.

     இறைஞ்சினார் - வணங்கிக் கேட்டனர். இஃது கற்புடை
மங்கையர்க்குரிய ஒழுக்க முறை குறித்தது. I beg to state - I beg to
remain. sir your most obedient servant
என்றெல்லாம் பொருளற்ற
மொழிகளைப் பயனற்று எழுதிப் பழகிய இந்நாள் மக்களுக்கு இங்கு
இறைஞ்சினார் கணவனாரை என்பது ஒருபுதுமையாகக் காணப்பெறும். இஃது
மனமார்ந்த உண்மை யொழுக்க நிலை குறித்தெழுந்த பழைய வழக்கு.

     மூட்ட - என்பதும் பாடம். 20

460. “வழிவரு மிளைப்பி னோடும் வருத்திய பசியி
                                   னாலே
 
  யழிவுறு மைய“ னென்னு மன்பினிற் பொலிந்து
                                  சென்று
குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப்
                                   பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு
                                    நல்க,
21

461. மனைவியார் கொழுநர் தந்த மனமகிழ் கறிக
                                 ளாய்ந்து
 
  புனலிடைக் கழுவித் தக்க புனிதபாத் திரத்துக்
                                கைம்மை
வினையினால் வேறு வேறு கறியமு தாக்கிப்
                                 பண்டை
நினைவினாற் குறையை நேர்ந்து திருவமு தமைத்து
                                  நின்று,
22

462. கணவனார் தம்மை நோக்கிக் கறியமு தான
                                   காட்டி
 
  “யிணையிலா தவரை யீண்ட வமுதுசெய் விப்போ“
                                 மென்ன
உணர்வினா னுணர வொண்ணா வொருவரை
                         யுணர்த்த வேண்டி
யணையமுன் சென்று நின்றங் கவர்துயி லகற்ற
                                 லுற்றார்.
23

     460. (இ-ள்.) வெளிப்படை. “வழி வந்ததாலுளதாகும்
இளைப்பினுடனே அதன் முன்னரே வருத்திய பசியினாலே எமது ஐயன்
வருந்தும்“ என்கின்ற அன்பினாற் கிளர்ந்து சென்று தமது கொல்லையிலே,
முளைக்கவைத்த குழிகளினின்றும் மேலே கிளம்பும் பருவம் உறாத சிறிய
இலைக்கறிப் பயிர்களைக் கையினாற்றடவிப் பாசப் பழிமுதலை அறவே
பறிப்பவர்போல அவற்றை வேரோடும் பிடுங்கி வந்து கறிக்காக (நாயனார்)
மனைவியார் கையிற் கொடுக்க,   21

     461. (இ-ள்.) வெளிப்படை. மனைவியார் தமது கணவர்
மனமகிழ்ச்சியுடன் தந்த கறிகளை இலை வேறு தண்டு வேறு முதலியனவாக
ஆய்ந்தெடுத்துக் கறிக்கானவற்றை நீரினாலே கழுவி, அதற்கேற்ற தூய
பாத்திரத்திலே யிட்டு, முன் பழகிய தமது கைப்பழக்கத்தினாலே
வெவ்வேறாகப் பலவகைக் கறிகளாகச் சமைத்துப், பழைய நினைவினால்
உளதாகிய குறையை எண்ணி ஒருவாறு மனந்தேர்ந்துகொண்டு, திருவமுது
வகைகளை முற்றஅமைத்து எழுந்து நின்று,  22

     462. (இ-ள்.) வெளிப்படை. கணவனாரை நோக்கிக் கறிகளும்
அமுதும் எல்லாம் சமைத்தாயின வகைகளைக் காட்டிப் பின் “ஒப்பற்றவரை
நாம் இப்போதே விரைந்து அமுது செய்விப்போம்“ என்று சொல்ல;
உணர்வினால் உணரவொண்ணா ஒருவராகிய அவரை உணர்த்தும்
பொருட்டு அவர் பக்கலில் அணைய முன்னே சென்று நின்றுகொண்டு
நாயனார் அங்கே அவரைத் துயிலுணர்த்தலுற்றார். 23

     இம்மூன்று பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.