| விறன்மிண்ட நாயனார் புராணம் | 613 |  
 
 
	Periya Puranam
	
	
	
	
	
	  அப்பரசு கொண்டு நாடு 
      பெற்றான். ஆதலின் இன்ன வகையால் நாடு  
      பெற்றான் எனக் குறியாது பெறுநாடு என வாளா 
      கூறினார். அதனாற் பெறும்  
      என வருவிக்க. 
       
           திரை செய்கடலின் பெருவளன் 
      - கடல்படு பொருள்களாகிய முத்து  
      முதலிய மணிகளும், உப்பு முதலிய விளை பொருள்களும், மீன் முதலிய  
      வுணவுப்பண்டங்களும் பிறவுமாம். இவை மனிதர் விளைவிக்காது தாமாய்க்  
      கடலிலும், கடற் புறத்தும் விளைந்து பெருந் தொகுதியாகப் பெற நிற்பது  
      பற்றிப் பெருவளன் என்றார். திரை 
      செய்கடல் - அலைகளுடைமை  
      கடலுக்குச் சிறப்பிலக்கணமாம். “திரைகடலோடியுந் திரவியந்தேடு“ என்றது 
       
      நீதி நூல். “படுதிரைப் பரவை மீது படர் கலங் கொண்டு போகி“ என்ற  
      காரைக்காலம்மையார் புராணமுங் (32) காண்க. 
       
           திருந்து நிலவின் செழுவளன் 
      - இவை மருதநிலத்து  
      விளைபொருள்களாகிய நெல் - வாழை - மா - பலா - தென்னை - முதலிய  
      பெரும்பலன்களைக் குறித்தன. நிலச் செழிப்புடையதும், இப்பலன்கள்  
      மிகுதியும் செழிப்புடன் பெருக உண்டாவதும் மலைநாடு என்பது இன்றைக்கும்  
      தேற்றமாம். வானம் பிறங்கக் காலந் தவறாது பெய்ய, அதுகொண்டே  
      விளைதரும் நாடு இந்நாடேயாம் எனின் அஃதொக்கும், இங்கு  
      மலைச்சரிவுகளிலும் நன்செய்விளைவு காண்பது வேறெங்கும் காணாத  
      காட்சியாம். மனிதரால் வயல், ஏரி, வாய்க்கால், அணை முதலிய  
      பலவகையானும் சாதனம்பெற்று அது காரணமாகப் பெறும் விளைவு  
      போலல்லாது, இங்கு நிலமும் மழையும் தாமாகவே திருந்தப் பொருந்திச்  
      செழித்த வளந்தருவன என்பார் திருந்து என்றும், 
      செழு என்றும் கூறினார். 
       
           வரைஇன் வளம் - வரை 
      - மலை. இன் - இனிய,  
      மலைபடுபொருள்களாகிய அகில், சந்தனம், தேன், மணி முதலியன. இவை,  
      மலைகளில் இயல்பின் உண்டாகி இனிமைதருவன ஆதலின்  
      அடைமொழியில்லாது வாளா வரை என்றார். அதனோடு 
      வரைக்குச்  
      சாரியையுமாகிய வளத்திற்கு அடைமொழியுமாகிய இன் 
      என்ற சொல்  
      அமைத்த அழகு காண்க. நாடு, மலைநாடு, ஆதலின் அந்த முதன்மை கருதி  
      வரைக்கு அடையில்லாது கூறினார் எனினுமாம். 
       
           உடன் பெருகி மல்கு நாடு 
      மலை நாடு - மலைநாடு எனப் பேர்  
      பெறுதலின் குறிஞ்சித் திணையின் பண்பு ஒன்றே இங்குப்பெருகும் எனவும்,  
      நானிலப் பகுதியில் ஏனைத் திணைகளின் பண்பு இன்றாம் எனவும் ஐயம்  
      வருமாதலின், அதனை எதிர்நோக்கி இங்கு ஏனைத் திணைவளமும் பெருகி  
      மிகும் என்றார். மலைகள் மிகுதலால், மிகுதிபற்றி மலைநாடு 
      எனப் பேர்  
      பெறினும், மருதம், நெய்தல் என்ற திணைப் பகுதி வளங்களுமுடைய  
      தென்றார். வரையும் திருந்து நிலனும் பொருந்தக் கூறியதனால் இடைப்பட்ட  
      முல்லையும் உடன்கொள்ளப் பெறுமென்பர். 
       
           திரைசெய்கடல் எனவும், வரையின் 
      எனவும் கூறிய  
      பகுதிகள்போலாது, திருந்து நிலனின் செழு - வளன் என்ற 
       
      அடைச்சிறப்பால் இவற்றுள்ளே நிலத்து வளமே மிகுந்தது என்ற குறிப்புமாம்.  
      இது விரிபொழில்சூழ் என்ற முதனூற்பொருளையும், “மனைக்கே புகநீடு  
      தென்றல் வீசும் பொழில்“ என்ற வகைநூற் 
      கருத்தையும் விரித்ததாம்.  
      பின்னர்க் கூறும் நகரச் சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்ததுமாம்.  
      கடற்கரையுடையதாய், மலைகள் விரவிய செழிய நிலப்பரப்புடைய நாடு என  
      அதன் அமைப்பும் குறித்தபடி காண்க. மனைகள்தோறும் பொழிலிருத்தலும்  
      இந்நாட்டுக் காட்சியாம். 
       
           பெருகி மல்கும் 
      - ஒவ்வொன்றும் தனித்தனிப் பெருகியும் ஒன்று  
      சேர்ந்து மிக மல்கியும் உள்ளன. 
       
           கழறிற்றறிவார் நாயனாரும் ஆளுடைய நம்பிகளும் இந்நாட்டினின்றபடி 
       
      திருக்கயிலைக்கெழுந்தருளினார்களாதலானும்,அவர்களஅங்கெழுந்தருளி- 
      யதை உபமன்னிய முனிவர் கண்டு முனிவர்களுக்குச் சொல்லிய வரலாற்றில்  
      இப்புராணம் தொடங்குவதாதலானும,இந்நாட்டைப் பற்றி முதன் முறையாகக்  
      கூற வந்த இந்த இடத்துக் கேற்பச் சுருக்கியும் விரித்தும் நாட்டு  
      வளங்கூறியபடி கண்டுகொள்க. மலை நாட்டுச் சிறப்பின் விரிவு கழறிற்றறிவார்  
      நாயனார் புராணம்.
   |  
	 
	 |   
				
				 |   
				 |