பக்கம் எண் :


642 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

“ஆர்ந்த நஞ்சயின்று வானோர்க் கமுதமீ வள்ளல் போற்றி“, “பொங்கி நின்
றெழுந்த கடனஞ்சினைப் பங்கி யுண்டதோர் தெய்வ முண்டோ சொலாய்“
முதலிய திருவாக்குக்கள் காண்க.

     கோவணப் பெருமை முன்காட்டி - கோவணப் பெருமை காட்டுதல்
பின்னர் இச்சரித நிகழச்சியிற் காண்க. 536 - 545 பாட்டுக்கள் பார்க்க.
துறந்தோராலும் விரும்பப் பெறும் பெருமை. அதனைத் தரிக்கும் அன்பர்
பெருமை, அதன் பெருமை முதலியன. இதனைக் காட்டவே இறைவனும் தாம்
இல்வாழ்வார் என்ற நிலையினின்றும் பிரமசாரியா யிறங்கி வந்தனர். முன் -
தேற்றமாக - யாவரு மறியுமாறு - முன்னிலையில் விளங்க. அன்பர்க் கருள்
கொடுப்பதன் முன் என்றலுமாம்.

     நிறைந்த அன்புடைத் தொண்டர் - இனி மேலும் கொள்ளுதற்
கிடமில்லாத படி நிறைவித்த அன்பு. “தீர்ந்த வன்பாய வன்பர்“ என்பது
திருவாசகம். “விளைத்தவன் புமிழ்வார் போல“ - கண் - புரா - 123.
நீடருள் அருள் பேணி
என்ற படி இதுவரை ஈந்ததும் அருளேயாம்;
ஆயின் இனித் தருவது நீடுகின்ற அருள். அளவு, காலம், அனுபவம், இன்பம்
முதலியவற்றாற் குறைவில்லா திருத்தல் நீடு எனப்பெறும். மாளா இன்பம்,
மீளா நெறி முதலியனவாகப் பேசப் பெறும் வீட்டின்பம். “பேரா வொழியாப்
பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளாவின்ப மாகடலே“ என்பது
திருவாசகம்.

     கொடுப்பான் - பானீற்று வினை யெச்சம். கொடுக்கும் பொருட்டு.

     மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவாகி - மறைக்குலத்து -
வேதியர் குலத்திலே. குலங்களிலும் முதல் மூன்றிலும் பிரமசரிய முதலிய
நிலைகள் நூல்களில் வகுக்கப் பெறுமாதலின் அவற்றுள் ஏனை மூன்று
குலங்களையும் நீக்குதற்கு மறைக்குலத்து என்றார். பிறிதினியையு நீக்கிய
விசேடணம். பின்னர்த் “துன்று வேதியர் தூய்மையி னமைப்பது
முளதால்“
(513) என்றதும் காண்க.

     ஒரு - ஒப்பற்ற. பிரமசாரி - பிரம உபாசனை நிலையிலே
சரிக்கின்றவன் - “வேதத்தை ஓதுகின்றவன். அவனுடைய செய்கையாவது :
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இம்மூன்று சாதியில் ஒரு பாலன்
உபநயனம் ஆனவுடனே பாக்கு வெற்றிலை தின்னாமலும், சந்தனந்தரித்தல்
பூச்சூடுதல் இல்லாமலும், இடையில் ஒரு வஸ்திரத்தை மாத்திரஞ் சுற்றிக்
கொண்டு அயலூரில் உள்ள பிராமண அக்கிரகாரத்தில் சென்று, இராக்
காலத்தில் தருப்பையைக் கீழே பரப்பி அதன்மேற் படுத்துக்கொண்டு,
பிட்சையாகக் கொண்டஅன்னத்தைப் புசித்துத்தகுந்த குருவினிடத்தில்
கலியாணம் செய்யத்தக்க காலம். வருகின்ற அளவும் வேத அத்தியயனம்
பண்ணிக்கொண் டிருத்தல்“ என்பர் மகாலிங்கையர். இது நாற்பத்தெட்டு
வயது எல்லை வரை நீடிக்குமென்பர். “அறுநான் கிரட்டியிளமை நல்லியாண்,
டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை“ - திருமுருகாற்றுப்படை. இவ்
வியல்பின் இயன்ற உண்மைப் பிரமசரிய நிலை இந்நாளில் எங்கேனும் காணக்
கிடைக்குமா என்பது அறிவாளிகள் கருதத்தக்கதாம். 6

     508. (வி-ரை.) செய்ய - சிவந்த. புன்சடை - சிறுசடை. மென்மையான
- மிருதுவான என்பாருமுண்டு

     சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும் - சடையை மறைத்து
அதன் இடத்திலே திருமுடிச் சிகையைக் கொண்டு - முடிச்சிகை -
பிரமசரியக் கோலத்துக்குரியது. கரந்தது - வெளிக்காட்டாமல்
மறைத்ததாகிய. “கண்ணிடை கரந்த கதிர் வெண்படமென“ (175);
“சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்து“ - திருவிளையாடற் புராணம்.
விரித்தசடையை முடித்த சிகையாகக் கொண்டு என்பாருமுண்டு. சிகை -
குடுமி.

     சைவ வெண் திரு நீற்று முண்டம் - சைவத்துக்கே சிறப்பாயுரிய
அடையாளமாய் மூன்று கீற்று வடிவமாய் நெற்றியில் இட்ட திருநீற்றுக் காப்பு.
திருமுண்டம் - திரிபுண்டரம் என்பதன் மரூஉ வென்பர்.
நீற்றுத்திருமுண்டம்
என மாற்றுக.